பேச்சு மற்றும் தொடர்பாடலுக்கான ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துவதற்கான தேசியத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தின் போது பேச்சு மற்றும் தொடர்பாடலுக்கான ஆங்கில மொழிப் போதனைகளை விரிவுபடுத்துவதிலுள்ள பிரச்சினைகளுக்கும், தடைகளுக்கும் தீர்வுகளும் வழங்கப்பட்டன.
இத்தேசியத் திட்ட அங்குரார்ப்பண வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அரசியல் யாப்பு விவகார அமைச்சர் டியூ குணசேகர, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சுனிமல் பெர்னாண்டோ, அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க ஆகியோர் பங்குபற்றிய கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது ஆங்கில மொழி பேச்சு மற்றும் தொடர்பாடல் திறன்களை பாடசாலைகள் மட்டத்தில் மேம்படுத்துவதிலுள்ள தடைகளையும், குறைபாடுகளையும் மாகாண கல்வித் திணைக்கள மற்றும் வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளும், பாடசாலைகளின் அதிபர்களும் முன்வைத்தனர்.
இவற்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்களும் மாகாண முதலமைச்சர்களும் உடனுக்குடன் தீர்வுகளை வழங்கினர்.
ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் தொடர் பாடல் திறன்களை மேம்படுத்தும் தேசியத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் ஹைதரா பாத்திலுள்ள ஆங்கில மற்றும் பிறநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் நாற் பது ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இப் பயிற்சியைப் பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் தயாரித்து ள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி வழிகாட்டி நூலின் முதல் பிரதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஆங்கில மொழி பேச்சு மற்றும் தொடர் பாடல் திறன்களை மேம்படுத்தும் திட்டத் தின் கீழ் ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவென மைக்ரோ சொப்ட், இன்டெல் மற்றும் மெற்றோ பொலிட்டன் ஆகிய தனியார் நிறுவனங்கள் மடிக் கணனிகளை ஜனாதிபதியிடம் வைபவரீதியாகக் கையளித்தன.
இவ்வைபவத்தில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இரண்டு வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார். அவ்வாக்குறுதிக்கு ஏற்ப பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டி நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ளார்.
அடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரிவான அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்தடிப்படையிலேயே ‘வாழ்க்கைத் திறன் ஒன்றாக ஆங்கில மொழி’ என்ற தொனிப் பொருளில் ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் தொடர்பாடல் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட விருக்கின்றது.
நவீன உலகிற்கு ஆங்கில மொழியின் பேச்சு மற்றும் தொடர்பாடல் அறிவும் தகவல் தொழில் நுட்ப அறிவும் மிகவும் அவசியமானது. இவற்றைக் கருத்தில் கொண்டே ஜனாதிபதி தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அடுத்து வரும் பத்து வருடங்களில் நாட்டில் வாழும் சகல ஏழை எளிய மக்களும் ஆங்கில மொழியறிவைப் பெற்றுக் கொள்ள இத்திட்டம் பெரிதும் உதவும் என்றார்.