மூன்று வருட வேலைத்திட்டத்திற்கமைய வடமாகாணத்தில் 11.5 பில்லியன் ரூபா செலவில் புதிதாக 325,000 வீடுகள் அமைக்கப்படும். அதேநேரம், அங்குள்ள 150,000 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாக, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணிக் குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மோதல்களால் பாதிக்கப்பட்ட வடபகுதியின் பெருந்தெருக்கள், மின்சார விநியோகம், வீடுகள், நீர் விநியோகம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் டிக்சன் டெல பண்டார, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், மாவட்டச் செயலாளர் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் மனிதநேய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.