துரோகிகள் என்றதும் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று ஒரு கணம் எண்ணியிருப்பீர்கள். இன்றைய புலிகளின் தலைவர் பத்மநாபனா…….? அல்லது நடேசனா?? புலித்தேவனா??? இளந்திரையனா???? அல்லது மறைந்த தலைவர் பிரபாகரனைத் தான் குறிப்பிடுகிறேனா?????
அரசியலில் மாற்றுக் கருத்தாளர்களை, அரசியல் எதிரிகளை, விமர்சகர்களை அனைவரையும் வரிசையாக துரோகிகள், எட்டப்பர்கள் என்று கூறி சுட்டுக் கொன்றதை விடுதலையின் பேரில் மௌனமாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் வியாக்கியானங்கள் கொடுத்து நியாயம் கற்பித்தவர்களும் வாயடைத்துப் போய் மௌனிகளாக நிற்கின்றனர். இன்று மக்களைக் காப்பாற்றுகிறோம் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் எனக்கூறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிப்பதைக் கண்டித்து இலட்சக்கணக்கில் படை எடுத்துள்ளனர்.
அன்று புலிகள் எந்த வாதத்தை மூலகாரணமாக வைத்து தமது அரசியல் விமர்சகர்களையும் சக போராளிகளையும் அழித்தனரோ, அதே வாதம் ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டு கொடூர இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த காலம் சென்ற நடேசனும் புலித்தேவனும் சரணடைய எடுத்த முனைப்புகளை Times (UK) பத்திரிகையாளரான Marie Covin தனது குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். நடேசனும் புலித்தேவனும் சரணடைய விடுத்த விடயம் ஜனாதிபதி ராஜபக்ச உட்பட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டாக்டர் பலிதகோகன்ன, ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் அனைவரிடமும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதை திகதி கால குறிப்புடன் வெளிப்படுத்துகிறார் மேரி. இவ்வாறான ஒரு தெளிவான சரணடையும் விடயம் தெரிவிக்கப்பட்டும் ஸ்ரீலங்கா அரசு நடந்து கொண்ட விதம் சர்வதேச போர் விதிகளுக்கு புறம்பானது என தற்போது பலதரப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் எந்தளவு சர்வதேச நீதிமன்றம் வரை சென்றடையும் என்பது பெரிய கேள்விக்குறி. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக முன்னாள் இந்தியப் பிரதமரின் கொலையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தடை, இவற்றுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு எடுத்த நடவடிக்கை சர்வதேச நீதிமன்றத்தை எட்டும் சாத்தியம் மிகமிக குறைவு என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்கா அரசின் இந்த மூர்க்கத்தனமான இராணுவ முன்னெடுப்பின் பின்னணியில் சீனா, இந்தியா போன்ற பலம் மிக்க நாடுகள் வெளிப்படையாக உடந்தையாக இருந்திருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச நீதிமன்றம் வரை போக சாத்தியம் இல்லையென்றே கூறவேண்டும்.
சர்வதேச சட்ட முனைப்புக்களை விடுத்து சாதாரண முறையில் ஸ்ரீலங்கா அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வித்தியாசமான வாதத்தை தனிப்பட்ட முறையில் முன்வைக்கிறார்கள். பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தின் போதும் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சி ஆரம்பத்தின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்த நிராயுதபாணிகளான சிங்கள பொலிசாரை விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற சம்பவங்களை அவர்கள் கூறுகின்றனர்.
இன்று இல்லாத ஒருவர் உயிருடன் இருப்பதாக கூறி அரசியல் நடாத்த பலர் தயாராகின்றனர். நடைமுறை இப்படி இருக்கும் போது பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது விடுதலைப் புலிகளின் உயர் தலைவர் ஒருவரையோ உயிருடன் பிடித்திருந்தால் அது தேவையில்லாத அரசியல் தலையிடியை தமக்குத் தந்து சிங்கள இராணுவ வீரர்கள் இதுவரை செய்த தியாகங்களை வீணடித்திருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தமாக பார்க்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பும், அதனை ஒட்டிய அரசியல் அழுத்தங்களும் காலப்போக்கில் மங்கிப் போகும். அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு அதிகூடிய வேகத்தில் செயலாற்றி வருகின்றது. வரும் ஓகஸ்ற் மாதத்தில் வடமாகாணத்திற்கான தேர்தல் என்ற அரசின் அறிவிப்பும், 180 நாட்களில் பெரும்பாண்மையான அகதிகளை மீள் குடியமர்த்துவோம் என்ற அறிவிப்பும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளில் செய்யப்படும் அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை முற்றாக தவிடுபொடியாக்கப் போகின்றது. மற்றும் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிகவும் மோசமாகவும் கோமாளிகளாகவும் ஆக்கப்போகின்றது.
இன்று விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் லண்டனில் கோயில்களாகவும், நகைக்கடைகளாகவும், வீடுகளாகவும், தனிப்பட்டவர்களின் பெயரிலும், சில வசரளவ களிலும் உள்ளன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல இன்றைய நிலையில் பல லட்சக்கணக்கான புலிகளின் சொத்துக்கள் சில தனிப்பட்டவர்களை சென்றடைய இருக்கின்றன. இதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகளை மையப்படுத்தி வன்னியில் இயங்கும் வெண்புறா, அம்மன் வசரளவ போன்ற அமைப்புக்களின் கணக்கு விபரங்களை ஆராய்வதற்கு புலிகளின் உண்மையான விசுவாசிகளையும் சில பொதுவானவர்களையும் நியமித்து விசாரணை குழுக்கள் அமைக்கப்படல் வேண்டும். அதன் முதற்கட்டமாக வணங்கா மண் வேலைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பணத்தைப் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் மீள வசூலிக்கப்பட்டு வன்னிப் பிரதேசத்தில் அகதிகளாக உள்ள மக்களுக்கு செலவிடப்படல் வேண்டும். அத்துடன் ஆயிரக்கணக்கில் அநாதரவாக விடப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு காத்திரமான பங்களிப்பை செய்ய புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும். இன்றைய யதார்த்த அரசியலைப் புரிந்து, ஆதாரம் பெற முடியாத கோசங்களை முன்வைத்து, நடைமுறை சாத்தியம் இல்லாத அரசியல் வேலைத் திட்டங்களை கைவிட்டு, யதார்த்த அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே 18ம் திகதி இடம்பெற்ற சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு தூரம் கனவுலகத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை கோடிட்டு காட்டியுள்ளது. இனிமேலாவது தமிழ் மக்கள் துரோகி, எட்டப்பர் என்ற வெற்று பதங்களை மறந்து ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க உடந்தையாக இருக்க வேண்டும்.