இதுவரை நியமனம் வழங்கப்படாமலுள்ள வட பகுதி தொண்டராசிரியர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் அல்லது அதற்கு முன்பாக நியமனம் வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். பணி மனைக்கு திரண்டு வந்த தொண்டராசிரியர்கள் முன்பாக நேரடியாக உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமது நிரந்தர நியமனம் தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தொண்டராசிரியர் நிரந்தர நியமனம் பெற்றுத் தரப்படும் என அச்சமயம் உறுதியளித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உங்களுக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.
மற்றொருபுறம் இன்றைய தினம் வேலையற்ற பட்டதாரிகளும் தமது நியமனம் தொடர்பாக திரண்டுவந்த நிலையில் அவர்களது கோரிக்கை தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு பட்டதாரி நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.