சர்வதேச நாணய நிதியம், இலங்கை கோரியுள்ள கடனைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தற்போது சாதமாக செயற்பட்டு வருவதாக அரச வருவாய்த் துறை அமைச்சரும், நிதி திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது இதனைத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய, பயங்கரவாதப் பிரச்சினை முற்றுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கைக்குக் கடன் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியத்திற்குப் பிரச்சினை இருக்காதென்றும் தெரிவித்தார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார இருப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாணய நிதிய த்தின் கடன் கிடைத்ததும், மேலும் நிதி நிலைமை வலுவடையுமெனத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது பாராளுமன்றத்தில் எழுப்புவதற்குப் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், நிர்க்கதியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.