June

June

ஊவா, யாழ், வவுனியா தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப திகதி நீடிப்பு

images-elc.jpgஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள் ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் 30 ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வழங்கியிருந்த திகதிக்கமைய நேற்றைய தினத்துடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நிறைவடைகின்றது. எனினும் எதிர்வரும் 30ம் திகதி வரை இதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்குப் பின்னர் நேரடியாகவோ, தபால் மூலமோ தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளில் தபால் மூல விண்ணப்பம் மற்றும் இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பமும் ஜூன் 30 ம் திகதி வரையே ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அதற்குப் பின்னரான தாமதமாகும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2011இல் வட மாகாணத்திற்கு முழுமையான மின்சார விநியோகம்

வன்னி உட்பட வடமாகாணத்திற்கு 2011 இல் முழுமையாக மின்சார விநியோகம் வழங்கப்படும் என்றும் 32.6 மில்லியன் டொலர் நிதியில் இத்திட்டம் பூரணப்படுத்தப்படுமெனவும் இலங்கை மின்சார சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வீடுகளுக்குத் தற்போது 1 சதவீதமும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 சதவீதமுமே மின்சார வசதி தற்போது உள்ளது. அதேசமயம், மன்னார் மாவட்டம் 37 சதவீத மின்சார விநியோகத்தைப் பெற்றுவருவதுடன் யாழ்ப்பாண மாவட்டம் 52 சதவீத மின் விநியோகத்தையும் வவுனியா மாவட்டம் 67 சதவீத மின் விநியோகத்தையும் பெற்றுள்ளன. தற்போது வவுனியா சுன்னாகம் இடையே கேபிள்கள் பொருத்தப்படும் பணிகள் இடம்பெறுகின்றன.

வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையே 132 கிலோவாட்ஸ் மின் பரிவர்த்தனையை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 39 பில்லியன் டொலர் செலவிலான இத்திட்டத்திற்கு ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பு உதவி வழங்குகின்றது.

கிளிநொச்சிக்கும் சுன்னாகத்துக்கும் இடையில் மற்றொரு மின் பரிவர்த்தனையை மேற்கொள்ள 19.5 மில்லியன் டொலர் தேவையாகும். இதற்கும் மேலதிகமாக 45 மில்லியன் டொலர் செலவில் நடுத்தரதாழ்ந்த மட்ட வோல்டேஜ் விஸ்தரிப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மின் விநியோகக் கட்டமைப்பை அமுல்படுத்த இந்தத் தொகை தேவைப்படுகிறது.

இதேவேளை, வழமையான நடவடிக்கையில் ஈடுபடாமல் சூரியசக்தி, தொலைபேசி வசதிகள் வடக்கில் ஏற்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் அகதி முகாம்களில் நாணயக் குற்றிகளைப் பயன்படுத்தும் சூரிய சக்தி தொலைபேசி வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன

புத்தளம் நுரைச்சோலை அணல்மின் உற்பத்தி!

he_president.jpgபுத்தளம் நுரைச்சோலை அணல்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மானப்பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஊடாக கடனுதவி பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

புலிகளின் செய்மதி, தொ.பேசிகள் சிம்கார்ட்டுகள் கண்டுபிடிப்பு பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் படையினர் புலிகளினால் முன்னர் பயன்படுத்தப் பட்ட செய்மதி தொலைபேசிகள், புதிய சிம் கார்ட்டுகள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு மாவட்டம் கல்வியங்காடு பகுதியில் இராணுவத்தின் 59வது படையணியினர் நடத்திய தேடுதலின்போது 12 செய்மதி தொலைபேசிகளும், 13 புதிய சிம் கார்ட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அப்பகுதியிலிருந்தே 04 திசை காட்டிகள் 06 தொலைகாட்டிகள், 39 – ஜி.பி. எஸ்கள், 14 – போர் துப்பாக்கி காட்ரிஜ்கள் என்பனவும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் 57 ஆம் படையணியினர் கிளிநொச்சியிலிருந்து ஒன்பது ரி-56 துப்பாக்கிகளையும் விஸ்வமடு பகுதியிலிருந்து இரண்டு துப்பாக்கிகளையும் ஒரு ஆர்.பி.ஜி. ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதே படையணியினர் புவன்னிக்குளத்திலிருந்து 58 டெட்டேனேட்டர்கள், 5 கிலோகிராம் நிறை கொண்ட சி 4 வெடி மருந்துகள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களை மீட்டிருப்பதாகவும் பாதுகாப்பு நிலையம் கூறியது.

அக்கராயன்குளத்திலிருந்து 10 கண்ணி வெடிகள், 122 மில்லிமீற்றர் குண்டு ஒன்று ஆர். பி.ஜி. குண்டு ஒன்று என்பனவற்றுடன் ஆலங்குளத்திலிருந்து 87 கண்ணிவெடிகளையும் மூன்றாம் படையணி கண்டுபிடித்துள்ளதாக நிலையம் கூறியது.

புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் ஆவிகள் ஆடுகின்றன – சபையில் விமல் வீரவன்ச

25vimal.jpgபுலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும், அதன் ஆவிகள் இன்னும் ஆடுகின்றன என்பதனால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பிற்கு எவ்விதமான அருகதையும் இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுப்படைகளின் தளபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: மீண்டும் பயங்கரவாதம் தோன்றிவிடாமல் இருப்பதற்கு சகல பிரிவுகளையும் பலப்படுத்த வேண்டும். அரசியல், நிர்வாக ரீதியில் மட்டுமல்லாது பாதுகாப்பு ரீதியிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலமாகவே பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்காது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் பதவி, பதவியாக மட்டுமே இருந்தது. ஆனால், இவரே நிர்வாக ரீதியில் இணைந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்.

எதிர்கால பாதுகாப்புச் செயலாளர்கள் நிர்வாக ரீதியில் மட்டுப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. புலனாய்வுத் துறைகளை மத்தியஸ்தப்படுத்துவதற்கான நடவடிக்கை இருக்கவில்லை. அதிகாரம் தவறான ஒருவரின் கைக்குச் செல்வதனால் பிழைகள் இடம்பெறலாம். முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக்கொள்ள முடியாது. பொது ஒழுங்குப் பத்திரம் இன்றி தனித்தனி தாளத்திற்கு ஆட முயற்சித்தால் உருவாகபோவதைத் தடுக்க முடியாது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் புலியின் ஆவிகள் பேயாக ஆடுகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று இந்தியாவிடம் கோருகின்றது

யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு தளர்வு

21deva.jpgயாழ்ப் பாணக் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டு வருதால் அதற்கு ஏதுவாக இரவு 11 மணிக்கு அமுல் செய்யப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்துள்ளது. இதுவரை யாழ்.மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு அமுல் செய்யப்பட்ட ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டு வந்தது.

யாழ்ப்பாணம் வந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து படைத்தரப்பினர் அதற்கு இணங்கி ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியுள்ளனர். இதேநேரம், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைக்கப்பட்டிருந்த சகல பாதுகாப்பு தடைகளும் நீக்கப்பட்டுள்ளதுடன் இந்த வீதியூடாக சகல வாகனங்களும் சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

நாட்டின் உயர்கல்வித்துறையை மேம்படுத்த 57 கோடி ரூபா ஒதுக்கீடு

visvawarnapala.jpgநாட்டின் உயர்கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கு 57 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்துள்ளார். இலங்கையின் உயர்கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சுவீடன்,  அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியுடன் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

றுஹ{னு,  பேராதெனிய,  மொரட்டுவை மற்றும் கொழும்பு ஆகிய பல்கலைக் கழகங்களில் தகவல் தொழில்நுட்பத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.  இதற்காக 14 கோடி 40 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. இணையத்தள வசதிகளுக்காக 18 கோடி 20 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கஷ்டப் பிரதேச கிராமங்களுக்கான மின் விநியோகம்

he_president.jpgஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கஷ்டப் பிரதேச கிராமங்களுக்கான மின் விநியோகத் திட்டங்களை மெற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.

இத்திட்டத்துக்கு ஆகக்குறைந்த வட்டி வீதமான 1.25 வட்டி வீதத்துக்கு  ஈரான் அரசாங்கம் 88.7 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்குகிறது.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தனியாக வேட்பு மனு தாக்கல்

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் இன்று தனித்தனியாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈபிஆர்எல்எப் வரதர் அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.எனினும் கடைசிநேரத்தில் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக தமிழர் கூட்டணி தனியாக வேட்பு மனு தாக்கல் செய்ததாக அந்தக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் விநாயகமூர்த்தி சகாயதேவன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8இல் – தேர்தல் செயலகம் அறிவிப்பு

election_ballot_.jpgயாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.

இவ்விரு தேர்தல்களுக்குமான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல்களுக்கு வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.

இத்தேர்தல்களில் யாழ். மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கு ஐ.ம.சு.முன்னணி நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வேட்புமனுக்களைக் கையளித்தார். இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் றிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.