02

02

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும் தடையின்றி பஸ் சேவைகள்

ஒரு சில தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடுகிறபோதும் தடையின்றி தனியார் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (1) பெரும்பாலான தூரசேவை தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.

பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு இடையூறு செய்யும் வகையில் சிலர் பஸ் சாரதிகளை அச்சுறுத்தியும் பஸ்கள் மீது கற்களால் தாக்கியும் வருவதாகவும் இதனை தடுக்க விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இடையூறு விளைவித்த மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் சங்கமொன்று நேற்று முன்தினம் முதல் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்ட ஒழுங்குகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு எதிராக தண்டம் அறவிடுவது; பஸ் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வது  போன்ற சட்டங்களை நீக்குமாறு கோரியே இவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளில் எதுவித நியாயமும் கிடையாது எனவும் அவர்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படாது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் அமல் குமாரகே கூறினார். பெரும்பாலான தனியார் பஸ் ஊழியர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை எனவும் தடையின்றி பஸ் சேவைகளை நடத்தும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பதுளை, கேகாலை, தென் பிராந்தியம் அடங்கலான பல பகுதிகளுக்கான தூரசேவை பஸ்கள் நேற்று (1) சேவையில் ஈடுபட்டதாகவும் சொன்னார்.

இதேவேளை, சேவையில் ஈடுபடும் பஸ்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் இடையூறு செய்பவர்க ளையும் கைது செய்ய நடமாடும் பொலிஸ் குழுக்களும் மோட்டார் சைக்கிளில் ரோந்தில் ஈடுபடும் பொலிஸ் குழுக்களும் சிவிலியன்களைக் கொண்ட குழுக்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இது தவிர நாடு பூராவும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தூரசேவை பஸ்களுக்கான பாது காப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தமது சங்கம் இந்த வேலை பகிஷ்கரி ப்பில் ஈடுபடவில்லையெனவும் பெரும்பாலான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார். சேவையில் ஈடுபட்ட தமது சங்க ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

‘உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்’- இந்தியப் பிரதமர்

manmohan.jpgஉலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று கூறியுள்ள பிரதமர் மன் மோகன் சிங், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் உள்ளதாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சுங்க திணைக்களத்திற்கு புதிதாக 300 ஊழியர்களை சேர்த்துக் கொள்ள அரசு தீர்மானம்

இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குப் புதிதாக 300 ஊழியர்களைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 100 பரிசோதகர்களும், 200 பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரச வருவாய்த்துறை அமைச்சரும் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பாக அரச சேவை ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிகளை மேலும் வினைத் திறன்மிக்கதாக்கி, கூடுதல் வருவாயை ஈட்டுவது தொடர்பாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கிழக்கில் 60 சு. கட்சி அலுவலகங்கள்

karuna1.jpgகிழக்கு மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் 60 சுதந்திரக் கட்சியின் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அவ்வலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. முதலாவது அலுவலகம் எதிர்வரும் 6ம் திகதி மட்டக்களப்பில் மாவட்ட அலுவலகமாகத் திறக்கப்படும். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

பாடசாலைகளிலுள்ள மரங்களின் கிளைகளைத் தறிக்க அவசர உத்தரவு

fallen-tree-branch.jpgவவுனியா பாடசாலை வளவுகளில் உள்ள சகல மரங்களினதும் கிளைகளை தறிக்குமாறு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி வி.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மர நிழல்களில் பாடசாலை வகுப்புக்களை நடத்துவது பற்றி கவனமாக இருக்குமாறும் அதிபர்கள் இந்த வியடத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப் பாளர் ஆலோசனை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மகா இறம்பைக்குளம் பாடசாலை வளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் மரணமாகி 13 பாடசாலை மாணவர்களும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

ஐபிஎல் 20-20 ஆட்டம் 10 நிமிடம் அதிகரிப்பு

_ipl_graphic_.jpgஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20 20 வரும் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக தொடங்குகிறது.  வழக்கமாக 20 20 ஆட்டங்கள் 3 மணி நேரம் நடைபெறும். இதில் 15 நிமிட இடைவேளையும் அடங்கும். இந்நிலையில் விளம்பர வருமானத்திற்காக போட்டியின் இடைவேளை நேரத்தை 10 நிமிடம் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐபிஎல்லும் போட்டி ஒளிபரப்பாகும் சோனி டிவியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதன்படி ஒவ்வொரு அணிக்கும் 10 ஓவர்கள் முடிந்ததும் 5 நிமிட இடைவேளை வழங்கப்படும். இந்த நேரத்தில் கேப்டன் சக வீரர்களுடன் ஆலோசனை நடத்திக்கொள்ளலாம் என ஐபிஎல் தெரிவித்துள்ளது. மேலும் டிவி நிறுவனங்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

மேல் மாகாண சபை தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

மேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (02) நாளையும் (03) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கான சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள தோடு வாக்களிப்பு நடைபெறும் அரச நிறுவனங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 35,915 பேர் தகுதி பெற்றுள்ளனர். 5,379 விண்ணப்பங்கள் திணைக்கள த்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15,789 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10,926 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 8,699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

தமது உறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களுடனோ தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதி- அமைச்சர் றிஷாத் பதியுதீன்

risadbadurudeen.jpgவிடுவிக் கப்படாத பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்காக விசேட அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டைகள் மூலம் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும்,  தங்களது உறவினர்களை நேரடியாகச் சந்திப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. மேலும் இங்கு தங்கியுள்ளவர்கள் தமது உறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களுடனோ தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை,வவுனியாவில் வேறு நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த 60 வயதைத் தாண்டிய சுமார் 400க்கும் மேற்பட்டோரை அவர்களின் நிலைமையக் கருத்திற்கொண்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமது குடும்ப உறவுகளைப் பிரிந்து வௌ;வேறு முகாம்களில் வாழ்ந்து வந்த சுமார் 600 குடும்பங்களை ஒரே முகாமில் குடும்பம் குடும்பமாக ஒன்றிணைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகரினுள் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கான குறுகியகால நடவடிக்கையொன்றை மேற்கொள்ளுமாறு செவ்வாய்க்கிழமை கொழும்பு மாநகர சபைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பல பகுதிகளிலும் குப்பை கூளங்களைச் சேகரித்துக் கொட்டுவதில் மாநகர சபை ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மாநகர சபை எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் குப்பை கூளங்கள் அகற்றப்படவில்லை.

இதனால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதுடன் அனைத்துமக்களும் பல்வேறு வகையிலும் பெரும் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர். இதையடுத்து கொழும்பு மாநகர சபையின் இயலாத்தன்மையாலும் மோசமான நிர்வாகத்தாலும் கொழும்பு புளுமெண்டல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கூளங்களால் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டகுழுவினர் தாக்கல் செய்த இந்த மனுவில் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட குழுவினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக் கெடுத்த உயர் நீதிமன்றம் கழிவுப்பொருட்களை துறைமுக அதிகாரி சபைக்குச் சொந்தமான காணியிலும் மகரபகுதியில் இடமொன்றிலும் சேகரிப்பது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் கழிவுப் பொருட்கள் மீள் சுழற்சிக்கான நீண்டகால செயற்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

மாநகர சபை எல்லைக்குள் தேங்கியுள்ள குப்பை கூளங்களை அகற்றுமாறு பொது அமைப்புக்கள் பலவும் மாநகர சபை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்ததும் தெரிந்ததே. தற்போது நீதிமன்றத் தலையீட்டால் செவ்வாய்க்கிழமை குப்பை கூளங்கள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்கது.