April

April

லிபியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு; இருதரப்பு பேச்சு ஆரம்பம்

mahi-libiya.jpgமூன்று நாட்கள் உத்தியோக விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு லிபியாவைச் சென்றடைந்தனர்.

லிபிய ஜனாதிபதி கேர்ணல் கடாபி பிறந்த ஊரில் விசேட அரச தலைவர்கள் வந்திறங்கவென நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ‘சேர்டி’ விமானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு நேற்று சென்றது. இக்குழுவினரை லிபிய பிரதமர் கலாநிதி அல் படாதி அலி அல் முஹம்மதி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மூஸா முஹம்மத் கோஸா ஆகியோர் வரவேற்றனர்.

இச்சமயம் ஜனாதிபதிக்கு விசேட அரச கெளரவம் அளிக்கப்பட்டதுடன், இராணுவ மரியாதையுடன் செங் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. இலங்கை அரச தலைவர் ஒருவர் லிபியா வுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

அதனால் இரு நாடுகளுக்குமிடையிலான பல முக்கிய விடயங்கள் குறித்து உயர்மட்ட அரச தலைவ ர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் படவிருப்பதுடன், ஒப்பந்தங்களும் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இதனடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபிக்குமிடையிலான இருபக்க பேச்சுவார்த்தை நேற்று மாலை ஆரம்பமானது. இதேநேரம் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு லிபிய பிரதமருடனும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. லிபிய ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவுக்கு நேற்றிரவு இராப்போசன விருந்துபசாரமும் வழங்கினார்.

சில அரசியல் தலைவர்கள் பிரபாகரனுடன் நீச்சல் தடாகமொன்றில் குளிக்கும் காட்சிகள் அடங்கிய படங்கள் விரைவில் வெளியிடப்படும்

dalas_alahapperuma.jpgபிரபாகரனின் பிறப்புச் சான்றிதழ் மீட்கப்பட்ட அறையில் இருந்து மேலும் பல ஒளிநாடாக்கள், புகைப்படங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றிடையே தெற்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் சில அரசியல் தலைவர்கள் பிரபாகரனுடன் நீச்சல் தடாகமொன்றில் குளிக்கும் காட்சிகள் அடங்கிய படங்களும் உள்ளன. இவற்றை தேர்தலின் பின்னர் வெளியிடவுள்ளோம் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

உணவை ஆயுதமாகப் பயன்படுத்தினால் புலிகளை 4 நாட்களில் அழித்துவிட முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் அரசாங்கம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தாது. பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோர் காலை உணவாக சாப்பிடும் தோசை கூட நாம் அனுப்பும் கோதுமை மா மூலமே தயாரிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் இராணுவம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தி பலஸ்தீன மக்களை பட்டினிபோட்டு கொலை செய்ததுபோல நாமும் செய்தால் புலிகளை 4 நாட்களில் ஒழித்துவிட முடியும். ஆனால் நாம் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தமாட்டோம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு உறுதி அளித்துள்ளோம்.

பொதுமக்கள் குறித்து கவனிக்காமல் காஸாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கியது போல நாமும் தாக்கினால் 10 நிமிடத்தில் புலிகளை அழித்து ஒழித்து விடலாம். ஆனால் உலகத்தில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாதவாறு பொதுமக்களுக்கு சேதமேற்படாத வகையில் எமது இராணுவம் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. வன்னியில் சிக்கியுள்ள 30 முதல் 40 ஆயிரம் வரையான பொதுமக்களை மீட்பதற்கு மிகப் பாரிய மனிதாபிமான நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயாராகி வருகின்றனர்.

பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் நடமாடுவதை படையினர் கவனித்து வருகின்றனர். வன்னியில் அண்மையில் மீட்கப்பட்ட பீரங்கி செக்கொஸ்லாவாக்கியாவில் இருந்து தருவிக்கப்பட்டது என்பது புலனாகியுள்ளது. இது எவ்வாறு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெளிவு.

வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடத்த முன்னோடி ஏற்பாடுகள். 20ம் திகதி சபையில் சட்டமூலம்

parliament.jpgவடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்கம், மேற்கொண்டு வருவதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். இதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய சட்டமூலம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்தற்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே மேற்படி சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த போதும் அந்த அங்கீகாரம் ஆறு மாத காலத்திற்கே செல்லுபடியாகும். வடக்கில் நிலவும் யுத்த சூழ்ல்நிலை காரணமாக குறித்த ஆறு மாத காலத்திற்குள் மேற்படி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாமற் போனது.  வடக்கு மீட்கப்பட்டு வரும் இவ்வேளையில் வடக்கில் உள்ளூராட்சிச் சபை தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் மக்களுக்கான அரசாங்கத்தின் சேவைகள் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் நிர்வாகங்களை செயற்படுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெரிதும் உதவும் என்பதால் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வீட்டினுள் புகுந்த யானை பெண்ணை தூக்கி வீசி தாக்குதல்: பெண் மரணம்

elephant.jpgமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரைப் பிரதேசத்தின், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின், வெல்லா வெளி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பீலி ஆறு கிராமத்தில் நேற்று அதி காலை 2.00 மணியளவில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டை உடைத்து பெண்ணைத்தூக்கி முற்றத்தில் வீசி தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் ஒரு பெண் பிள்ளையின் தாயான ச. ரெத்தினம் (வயது 45) என கிராமசேவகர் என். ராகுலன் தெரிவித்தார். வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனி, பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலை – அமைச்சர் பந்துல குணவர்தன

bandula_gunawardena.jpgசீனி மற்றும் பருப்பு உட்பட முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு நேற்று நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படவுள்ளதாக வர்த்தக, சந்தை  அபிவிருத்தி, கூட்டுறவு, மற்றும் பாவனையாளர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

புது வருட உற்சவ காலத்தில் மோசடி வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்படுகின்றன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 2003 இலக்கம் 9-20/5 ஷரத்துக்கு அமைய கட்டுப்பாட்டு விலைகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.

இதன்படி வெள்ளைச் சீனி ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை 73 ரூபா, சகல விதமான பருப்பு வகைகளுக்கும் ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை 175 ரூபா, பட்டானா பருப்பு ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை ரூபா 98.50, என புதிய வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா அரிசி ஒரு கிலோ 70 ரூபா,  பச்சை மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ 60 ரூபா,  பால்மா ஒரு கிலோ 637 ரூபா,  400 கிறாம் பால்மா 260 ரூபா,  கோழி இறைச்சி ஒரு கிலோ 320 ரூபா,  50 கிலோ சிமெந்தி பேக் ஒன்று 785 ரூபா, எனவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கும் வர்த்தகர்கள் பற்றி 0112399146 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கோ பொது மக்கள் அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

நலன்புரி நிலையங்களிலிருந்து 1500 பேர் நிவாரண கிராமத்துக்கு அனுப்பி வைப்பு

srilanka_idp.jpgபுதுமாத்தளன் பாதுகாப்பு வலையத்திலிருந்து அரசாங் கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ஸ் தெரிவித்தார். இதற்காக, பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் தங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களை ஏற்படுத்துவதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புகளையும் மேற்கொண்டுள்ளதாகக் கூறிய அரசாங்க அதிபர், வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் கூறினார். சுமார் 5000 பேர் தங்கவைக்கக் கூடிய பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில், தற்போது சுமார் 600-700 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். இங்கு புதிதாக இடம்பெயர்ந்து வருவோரைத் தங்க வைப்பதற்கு ஒத்துழைப்புகளை நல்குவதாக அவர்கள் அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரத்தில் உள்ள நலன்புரி நிலையங்களிலிருந்து 1500 பேர் எதிர்வரும் சனிக்கிழமை 11ம் திகதி செட்டிக்குளம்- கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசாங்க அதிபர் திருமதி. சாள்ர்ஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் வவுனியாவில் வெற்றிடம் ஏற்படும் நலன்புரி நிலையங்களில், புதிதாக இடம்பெயர்ந்து வருவோர் தங்க வைக்கப்படுவர். தவிரவும், புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொதுமக்கள் வெளியேறி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், புதிதாக நலன்புரி நிலையங்களை ஏற்படுத்தவும் வீடுகளை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். குறித்த இடங்களுக்கு அவர் நேரடியாக விஜயம் செய்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களை உள்வாங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்துவரும் சில தினங்களில் கடும் இடி, மின்னல் தாக்கம்

lighting.jpgநாட்டில் சமீப தினங்களாக ஏற்பட்டுள்ள இடி, மின்னல் அபாயம் அடுத்து வரும் சில தினங்களில் மிக மோசமாகத் தீவிரமடையும் என்றும், பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவிச் சுழற்சியின் படி சூரியன் இக்காலப் பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சத்தில் சஞ்சரிப்பதன் காரணமாகவே இடி, மின்னலுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்திருப்பதாக வானிலை அவதான நிலைய வானிலையாளர் பி. ஆனந்த பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

சூரியன் கடந்த 6ம் திகதி முதல் இலங்கைக்கு நேர் உச்சத்தில் இருக்கிறது. எதிர்வரும் 16ம் திகதி வரை சூரியன் இவ்வாறு உச்சம் கொடுக்கும். இதனடிப்படையில், சூரியன் இன்று நண்பகல் 12.12 மணிக்கு அட்டாளைச்சேனை, கட்டான, கண்டி, கேகாலை ஆகிய நகர்களுக்கு நேர் உச்சத்தில் சஞ்சரிக்கும் எனவும் அவர் கூறினார்.

வருடா வருடம் ஏப்ரல் மாதம் சூரியன் இலங்கைக்கு உச்சம் கொடுப்பது தெரிந்ததே. ஆகவே, இடி, மின்னல் அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் விசேட கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

வவுனியா முகாம்களில் உள்ளவர்கள் குறித்து ஐ நா கவலை

neel.jpgஇலங்கையின் வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறி தற்போது வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் நிலை குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கானா ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நீல் பூன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள முகாம்களுக்கு விஜயம் செய்துவிட்டு வந்த பிறகே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். அங்கு குறைந்த நிலப்பரப்பில் பலர் தங்க வைக்கப்பட்டிருப்பது அங்குள்ள மக்களிடையே ஒரு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் அரசு அங்குள்ள மக்களுக்கு உணவு வசதிகளையும், மாணவர்களுக்கு பாடசாலை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும் எனினும் மேலும் வசதிகள் அங்கு தேவைப்படுகின்றன என்றும் நீல் பூன் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்போவதாக ரணில் தெரிவிப்பு

ranil-wickramasinghe.jpgதவறானவர்களின் கைகளுக்கு நிறைவேற்று அதிகாரம் போனதால் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் சென்றுகொண்டிருப்பதாக விசனம் தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்ததும் முதற்பணியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கக்கூடிய அதிகாரமுறை கொண்டுவரப்படுமெனத் தெரிவித்தார். நல்ல நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுறை இன்று தவறானவர்களின் கைகளுக்குள் சிக்கி ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

கிருலப்பனையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற மேல்மாகாணசபைத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; நாட்டு மக்களின் இறைமையை வாக்குரிமையின் மூலமே பாதுகாக்க முடியும். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் இறைமையையும் ஜனநாயகத்தையும் இல்லாதொழிக்கும் பயங்கரமான திசையில் சென்று கொண்டிருக்கின்றார், ஜனநாயகத்தை ஒழிப்பதற்கான ஆயுதமாக அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பயன்படுத்துவதில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்றதிகாரத்தை உருவாக்கியதற்கான பிரதான காரணம் ஸ்திரத்தன்மை கொண்ட அரசாங்கத்தின் கீழ் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கேயாகும். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்குப்பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவுசெய்யப்பட்டார். நீண்டகால யுத்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்பதில் அவர் கூடுதல் ஆர்வம் காட்டிவந்தார். அதேசமயம் நிறைவேற்றதிகாரத்தின் மற்றொரு முகத்தை அவர் வடமேல் மாகாணசபைத் தேர்தலின்போது காண்பித்தார். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை எம்மால் அன்று பாதுகாக்க முடிந்தது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மூலமாக 17 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்துக்கு உடன்பட வைத்து அரசியமைப்புப் பேரவையை உருவாக்க முடிந்தது.  அரசியலமைப்பு பேரவைக்கு நியமனங்களைச் செய்வதற்கான பெருமுயற்சிகளை நான் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக நிறைவேற்றதிகாரத்தின் பிடிக்குள் சிக்கி எனது ஆட்சிபறிபோகும் நிலை ஏற்பட்டது.

திருமதி குமாரதுங்கவுக்கு பின்னர் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானார்.அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையிலுள்ள சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதில் மும்முரமாக செயற்பட்டுவருகின்றார். எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ஏப்ரல் 25 இல் ஐக்கியதேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு மேல்மாகாண மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ரணில் விக்கிரமிங்க தெரிவித்தார்.

விமானப்படை விமானத்தில் யாழ். பயணிகள் விமான சேவை- அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு

யாழ். குடாவிற்கான பயணிகள் போக்குவரத்தில் தற் போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கவனத்திற் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவ டிக்கை காரணமாக இலங்கை விமானப் படையினரின் பயணிகள் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட் டுள்ளது.

தற்போது யாழ். பயணிகள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி மேற்கொண்ட நடவடிக்கையினை அடு த்து இலங்கை விமானப் படை போக்குவரத்து விமா னத்தினூடாகப் பயணிகள் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் – கொழும்பு பயணிகள் விமான சேவைக்கு ஒரு வழிக் கட்டணமாக நாலாயிரத்து நானூறு ரூபா (4400/-) அறவிடப்படும் என்பதுடன், ஏனைய செலவுகளைக் கருத்திக்கொண்டு ஐநூறு ரூபா (500/-) கட்டணமுமாக மொத்தம் நாலாயிரத்து தொளாயிரம் ரூபா (4900/-) அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விமானப் படை விமானங்கள் ஊடாக யாழ். – கொழும்பு விமான சேவைப் பதிவுகளை இல. 61 இசிப்பத்தான மாவத்தை, கொழும்பு – 5 இல் அமைந்துள்ள சமூக சேவைகள் அமைச்சு பணிமனையில் மேற்கொள்ள முடியும். மேலும் 0112-584322 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி கண்காணிப்பில் பொதுமக்களின் போக்குவரத்து நன்மை கருதி மட்டுமே இவ் விமான சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளதால் எதுவித மோசடி நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் தமது பிரயாணப் பதிவுகளை எவ்வித மேலதிக செலவுகளுமின்றி பொதுமக்கள் நேரடியாகவே மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படை ஊடான பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள இதேவேளை, ஏ-9 தரைப்பாதை பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்படும் வரை சீரானதொரு பயணிகள் கப்பல் சேவையினைக் கடற்படையினரின் அனுசரணையு டன் திருமலை – யாழ்ப்பாணத்திற்கிடையில் ஆரம்பித்து நடாத்தவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.