நலன்புரி நிலையங்களிலிருந்து 1500 பேர் நிவாரண கிராமத்துக்கு அனுப்பி வைப்பு

srilanka_idp.jpgபுதுமாத்தளன் பாதுகாப்பு வலையத்திலிருந்து அரசாங் கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ஸ் தெரிவித்தார். இதற்காக, பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் தங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களை ஏற்படுத்துவதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புகளையும் மேற்கொண்டுள்ளதாகக் கூறிய அரசாங்க அதிபர், வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் கூறினார். சுமார் 5000 பேர் தங்கவைக்கக் கூடிய பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில், தற்போது சுமார் 600-700 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். இங்கு புதிதாக இடம்பெயர்ந்து வருவோரைத் தங்க வைப்பதற்கு ஒத்துழைப்புகளை நல்குவதாக அவர்கள் அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரத்தில் உள்ள நலன்புரி நிலையங்களிலிருந்து 1500 பேர் எதிர்வரும் சனிக்கிழமை 11ம் திகதி செட்டிக்குளம்- கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசாங்க அதிபர் திருமதி. சாள்ர்ஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் வவுனியாவில் வெற்றிடம் ஏற்படும் நலன்புரி நிலையங்களில், புதிதாக இடம்பெயர்ந்து வருவோர் தங்க வைக்கப்படுவர். தவிரவும், புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொதுமக்கள் வெளியேறி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், புதிதாக நலன்புரி நிலையங்களை ஏற்படுத்தவும் வீடுகளை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். குறித்த இடங்களுக்கு அவர் நேரடியாக விஜயம் செய்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களை உள்வாங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *