நாட்டில் சமீப தினங்களாக ஏற்பட்டுள்ள இடி, மின்னல் அபாயம் அடுத்து வரும் சில தினங்களில் மிக மோசமாகத் தீவிரமடையும் என்றும், பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவிச் சுழற்சியின் படி சூரியன் இக்காலப் பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சத்தில் சஞ்சரிப்பதன் காரணமாகவே இடி, மின்னலுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்திருப்பதாக வானிலை அவதான நிலைய வானிலையாளர் பி. ஆனந்த பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.
சூரியன் கடந்த 6ம் திகதி முதல் இலங்கைக்கு நேர் உச்சத்தில் இருக்கிறது. எதிர்வரும் 16ம் திகதி வரை சூரியன் இவ்வாறு உச்சம் கொடுக்கும். இதனடிப்படையில், சூரியன் இன்று நண்பகல் 12.12 மணிக்கு அட்டாளைச்சேனை, கட்டான, கண்டி, கேகாலை ஆகிய நகர்களுக்கு நேர் உச்சத்தில் சஞ்சரிக்கும் எனவும் அவர் கூறினார்.
வருடா வருடம் ஏப்ரல் மாதம் சூரியன் இலங்கைக்கு உச்சம் கொடுப்பது தெரிந்ததே. ஆகவே, இடி, மின்னல் அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் விசேட கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.