தவறானவர்களின் கைகளுக்கு நிறைவேற்று அதிகாரம் போனதால் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் சென்றுகொண்டிருப்பதாக விசனம் தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்ததும் முதற்பணியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கக்கூடிய அதிகாரமுறை கொண்டுவரப்படுமெனத் தெரிவித்தார். நல்ல நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுறை இன்று தவறானவர்களின் கைகளுக்குள் சிக்கி ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.
கிருலப்பனையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற மேல்மாகாணசபைத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; நாட்டு மக்களின் இறைமையை வாக்குரிமையின் மூலமே பாதுகாக்க முடியும். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் இறைமையையும் ஜனநாயகத்தையும் இல்லாதொழிக்கும் பயங்கரமான திசையில் சென்று கொண்டிருக்கின்றார், ஜனநாயகத்தை ஒழிப்பதற்கான ஆயுதமாக அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பயன்படுத்துவதில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்றதிகாரத்தை உருவாக்கியதற்கான பிரதான காரணம் ஸ்திரத்தன்மை கொண்ட அரசாங்கத்தின் கீழ் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கேயாகும். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்குப்பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவுசெய்யப்பட்டார். நீண்டகால யுத்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்பதில் அவர் கூடுதல் ஆர்வம் காட்டிவந்தார். அதேசமயம் நிறைவேற்றதிகாரத்தின் மற்றொரு முகத்தை அவர் வடமேல் மாகாணசபைத் தேர்தலின்போது காண்பித்தார். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை எம்மால் அன்று பாதுகாக்க முடிந்தது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மூலமாக 17 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்துக்கு உடன்பட வைத்து அரசியமைப்புப் பேரவையை உருவாக்க முடிந்தது. அரசியலமைப்பு பேரவைக்கு நியமனங்களைச் செய்வதற்கான பெருமுயற்சிகளை நான் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக நிறைவேற்றதிகாரத்தின் பிடிக்குள் சிக்கி எனது ஆட்சிபறிபோகும் நிலை ஏற்பட்டது.
திருமதி குமாரதுங்கவுக்கு பின்னர் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானார்.அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையிலுள்ள சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதில் மும்முரமாக செயற்பட்டுவருகின்றார். எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ஏப்ரல் 25 இல் ஐக்கியதேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு மேல்மாகாண மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ரணில் விக்கிரமிங்க தெரிவித்தார்.