28

28

திருமலையில் பேக்கரிகளைத் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி

foods.jpg
திருகோணமலை நகர பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள பேக்கரிகளை 27 முதல் மீண்டும் திறப்பதற்கு நிபந்தனைகளுடன் நகர சபை அனுமதி அளித்துள்ளது. நகர சபை மண்டபத்தில் பேக்கரி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தலைவர் எஸ்.கௌரி முகுந்தன் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சான சம்பவத்தையடுத்து, அவை சீல் வைக்கப்பட்டன. குறிப்பிட்ட இரண்டு பேக்கரிகளைத் தவிர ஏனையவற்றைத் திறப்பதற்கே நேற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனுமதியளிக்கப்பட்ட பேக்கரி உரிமையாளர்களிடம் மறு அறிவித்தல் வரை மரக்கறி பனிஸ், முட்டை பனிஸ்,சீனி சம்பல் பனிஸ் போன்ற தயாரிப்புகளை தவிர்த்துக் கொள்ளுமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சானதன் காரணமாக மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் 62 வயது மீனவரின் உடலின் சில பகுதிகளை கொழும்பிலுள்ள பிரதம சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்க இருப்பதாக திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் காமினி குமாரதுங்க தெரிவித்தார்.

கலாமுக்கு ஹோவர் மெடல்: அமெரிக்கா வழங்குகிறது

அமெரிக்காவில் உள்ள 5 என்ஜினீயர்கள் அமைப்புகள் சேர்ந்து ஒரு கமிட்டியை அமைத்து உள்ளன. அந்த அமைப்பின் சார்பில் உலக அளவில் சிறந்த மனிதாபிமான சேவை, தன்னலமற்ற பணி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் என்ஜினீயர்களுக்கு, ஆண்டு தோறும் ‘ஹோவர் மெடல்” வழங்கி வருகிறது.

இதில் 2008-ம் ஆண்டுக்கான ஹோவர் மெடலுக்கு, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக, நியூயார்க் நகரில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவரே. விருது வழங்கும் விழா, ஏப்ரல் 28-ந் தேதி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு தாக்குதல்; 56 பேர் பலி 80 பேர் காயம்

moq-pak.jpgபாகிஸ்தானின் வடமேற்கே கூட்டம் நிறைந்த பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகை ஆரம்பமான நேரத்தில் தற்கொலை குண்டுதாரி தாக்கியதில் குறைந்தபட்சம் 56 பேர் கொல்லப்பட்டும் 80 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்

இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இறந்தவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடைபெற்றபோது மேற்படி பள்ளிவாசலில் 250 பேர் வரை வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  தாக்குதலின் உக்கிரத்தில் பள்ளிவாசல் கட்டிடம் சேதமடைந்தது. ஆப்கானிஸ்தான் செல்லும் பாதையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே இருக்கும் ஜம்ருத் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐ. ம. சு. மு வேட்பாளர் இராஜரட்னத்தின் அலுவலகம் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் கலாநிதி ரி. சீ. ராஜரட்னத்தின் அலுவலகம் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக வேட்பாளர் ராஜரட்னம் நேற்று தெரிவித்தார். பம்பலப்பிட்டி சாகர வீதியிலமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

தனக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் கொடுத்த பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர் தொடர்ந்தும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 25 இரவு சுமார் 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையே சிலர் வந்து அலுவலகம் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இச் சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ரி சி. ராஜரட்னம் தெரிவித்தார். தொடர்ச்சியாக தனக்குள்ள அச்சுறுத்தல் காரணமாக தனது மகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் டாக்டர் ரி. சி. ராஜரட்னம் மேலும் தெரிவித்தார்.பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் கொழும்பில் போட்டியிடும் குறிப்பாக அரசின் சார்பில் போட்டியிடும் தமிழ் உறுப்பினர் தான் என்பதால் அதனை பொறுக்காத சிலரே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

காதல் தகராறு பெண் பொலிஸை சுட்ட கான்ஸ்டபிள் சுட்டுக்கொலை

pisto.jpgகொழும்பு,  நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

பொலிஸ் ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலுள்ள பெண்கள் வார்ட்டினுள் ரி56 ரக துப்பாக்கியுடன் நுழைந்த கான்ஸ்டபிள் ஒருவர், முதலில் அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ஆயுதத்துடன் வந்த இவர் தன்னை இலக்கு வைப்பதை அவதானித்த அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் அவர் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கிடையில் மூன்றாவது மாடி ஜன்னல் ஊடாக 2 ஆவது மாடிக்கு குதித்துள்ளார்.

இதேநேரம், அந்த கான்ஸ்டபிள் அங்கு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதனால், அந்த பெண் கான்ஸ்டபிள் கையில் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, அவ்விடத்திற்கு விஷேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த அதிரடிப்படையினர் 3 ஆவது மாடியிலிருந்த வார்ட்டினுள் நுழைந்து அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அவரை அவ்விடத்திலேயே கொன்றுள்ளனர்.

ஆஸ்பத்திரியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே, வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிளுடனான காதல் தகராறால் இவ்வாறு நடந்துகொண்டதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் கான்ஸ்டபிள் உடனடியாக அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.

பிரதியமைச்சர் பாயிஸை எம்.பி. பதவியிலிருந்து நீக்க நேற்று இடைக்கால தடை

கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தார்.

பிரதியமைச்சர் பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அல்லவென்றும், அவர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி மூலம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறும் கோரியே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இவரை நீக்குவதற்கு எதிரான தடையுத்தரவு எதிர்வரும் 8ம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க. மற்றும் மு.கா. ஆகிய கட்சிகளுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது : எஸ்.பி. திசாநாயக்க

spdesanayaka.jpg“இன்று உலகில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடியினால் பல நாடுகள் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றன. நம் நாடு இன்று 3.5 சதவீத வளர்ச்சியையே கண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 5 வருட காலத்தில், 2005 ஆம் வருடம் 4.4 சதவீத வளர்ச்சியும், 2006 இல் 4.5 சதவீத வளர்ச்சியும், 2009இல் 4.9 சதவீத வளர்ச்சியும், 2008 ஆம் ஆண்டு 4.1 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தது. 2009இல் பொருளாதார வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.”

ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது :

“சி. டி. ஸ்மித் எனப்படும் கொழும்பு பங்குச்சந்தை தரகர்கள் அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் கொழும்பு பங்கு சந்தையில் பதிவாகியிருந்த கம்பனிகளின் அதாவது வங்கிகள், வர்த்தக தாபனங்களின் இலாபம் 61 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அதேவேளை 2007 ஆம் ஆண்டு 3341 டொலர்களாக காணப்பட்ட ஏற்றுமதிக்கான வருமானம், இன்று 1000 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

இலங்கைக்கு இரண்டாவதாக இலாபத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் பெறப்படும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளது. 2006 தொடக்கம் 2008 வரையில் 16 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்தனர். அவர்களுள் 3 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.

2502 அமெரிக்க டொலர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் பெறப்பட்ட அந்நிய செலாவணியாக உள்ளது. அதாவது மத்திய நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் இலாபமாக இருந்தது . மலேசியா , தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி 20 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

2002- 2004 வரையான, அதாவது ஐ.தே.கவின் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம் 4.4 சதவீதமாகவே காணப்பட்டது. அதன் பிறகு தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பல நாணயங்கள் அச்சிடப்பட்டன. எனவே பணத்தின் சுற்றோட விகிதம் அதிகரித்து, பணத்தின் பெறுமதி குறைந்தது.

பணவீக்க வீதத்தைக் கட்டுப்படுத்தி விட்டதாக அரசு கூறுகிறது. உலகில் பல பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. உலக நாடுகளின் பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் பணவீக்கம் இன்னும் குறைவடையவில்லை. பணவீக்கம் குறைவடையும் போது ஏற்படும் இலாபத்தை அரசு மக்களுக்கு வழங்கவில்லை.

உலகின் பொருளாதார நெருக்கடி இலங்கையைப் பாதிக்கவில்லை எனக் கூறப்பட்டாலும் சிலவற்றில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான நுரைச்சோலை அனல் மின் நிலையம், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி, கொத்மலை நீர் தேக்கத்திட்டம் போன்றவற்றின் செயற்பாடுகள் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளன.

விவசாயத்துறை, சுற்றுலாத்துறை போன்றவை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன. அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப சில காலங்கள் செல்லலாம். அரசு தேர்தலை நடத்தவும் மற்றும் பல அரச தேவைகளுக்காகவும் வங்கிகளிடமிருந்து அதிகளவிலான கடன்களைப் பெற்றுள்ளது . இத்தகைய செயற்பாட்டினை அரசு குறைத்துக் கொள்ள வேண்டும். வங்கி வட்டி வீதங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசு மக்களுக்கு உண்மை நிலையை அறியத் தர வேண்டும். நாட்டில் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பொருளியல் ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களினூடாக மக்களுக்கு உண்மைத் தன்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். 

இந்தோனேஷிய அணைக்கட்டு உடைந்ததில் 58 பேர் பலி

indo.jpg
இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவின் அருகே அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் குறைந்தது ஐம்பத்து எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போயுள்ள டஜன் கணக்கானவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடிவருகிறார்கள்.

டாங்கெரங் வட்டகையில் நகரவாசிகள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் வந்த வெள்ளம் கார்களை அடித்துச் சென்றதோடு பள்ளங்களை நிறைத்தது. நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் சடலங்களும் குப்பைகூளங்களும் மிதக்க ரப்பர் படகுகளில் மீட்புப் பணியாளர்கள் பயணிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த இந்த களி மண் அணைக்கட்டு கடும் மழையை அடுத்து உடைந்திருந்தது.