“இன்று உலகில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடியினால் பல நாடுகள் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றன. நம் நாடு இன்று 3.5 சதவீத வளர்ச்சியையே கண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 5 வருட காலத்தில், 2005 ஆம் வருடம் 4.4 சதவீத வளர்ச்சியும், 2006 இல் 4.5 சதவீத வளர்ச்சியும், 2009இல் 4.9 சதவீத வளர்ச்சியும், 2008 ஆம் ஆண்டு 4.1 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தது. 2009இல் பொருளாதார வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.”
ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது :
“சி. டி. ஸ்மித் எனப்படும் கொழும்பு பங்குச்சந்தை தரகர்கள் அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் கொழும்பு பங்கு சந்தையில் பதிவாகியிருந்த கம்பனிகளின் அதாவது வங்கிகள், வர்த்தக தாபனங்களின் இலாபம் 61 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அதேவேளை 2007 ஆம் ஆண்டு 3341 டொலர்களாக காணப்பட்ட ஏற்றுமதிக்கான வருமானம், இன்று 1000 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.
இலங்கைக்கு இரண்டாவதாக இலாபத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் பெறப்படும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளது. 2006 தொடக்கம் 2008 வரையில் 16 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்தனர். அவர்களுள் 3 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
2502 அமெரிக்க டொலர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் பெறப்பட்ட அந்நிய செலாவணியாக உள்ளது. அதாவது மத்திய நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் இலாபமாக இருந்தது . மலேசியா , தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி 20 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
2002- 2004 வரையான, அதாவது ஐ.தே.கவின் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம் 4.4 சதவீதமாகவே காணப்பட்டது. அதன் பிறகு தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பல நாணயங்கள் அச்சிடப்பட்டன. எனவே பணத்தின் சுற்றோட விகிதம் அதிகரித்து, பணத்தின் பெறுமதி குறைந்தது.
பணவீக்க வீதத்தைக் கட்டுப்படுத்தி விட்டதாக அரசு கூறுகிறது. உலகில் பல பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. உலக நாடுகளின் பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் பணவீக்கம் இன்னும் குறைவடையவில்லை. பணவீக்கம் குறைவடையும் போது ஏற்படும் இலாபத்தை அரசு மக்களுக்கு வழங்கவில்லை.
உலகின் பொருளாதார நெருக்கடி இலங்கையைப் பாதிக்கவில்லை எனக் கூறப்பட்டாலும் சிலவற்றில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான நுரைச்சோலை அனல் மின் நிலையம், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி, கொத்மலை நீர் தேக்கத்திட்டம் போன்றவற்றின் செயற்பாடுகள் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளன.
விவசாயத்துறை, சுற்றுலாத்துறை போன்றவை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன. அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப சில காலங்கள் செல்லலாம். அரசு தேர்தலை நடத்தவும் மற்றும் பல அரச தேவைகளுக்காகவும் வங்கிகளிடமிருந்து அதிகளவிலான கடன்களைப் பெற்றுள்ளது . இத்தகைய செயற்பாட்டினை அரசு குறைத்துக் கொள்ள வேண்டும். வங்கி வட்டி வீதங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசு மக்களுக்கு உண்மை நிலையை அறியத் தர வேண்டும். நாட்டில் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பொருளியல் ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களினூடாக மக்களுக்கு உண்மைத் தன்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.