15

15

இந்திய மருத்துவர் குழுவின் வருகைக்கு அரச மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பு

india-doctors.jpgஇந்திய மருத்துவர் குழு இலங்கைக்கு வருகைதந்திருப்பது குறித்து கடும் எதிர்ப்பு வெளியிட்டிருக்கும் அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் , இந்த மருத்துவ அணியின் வருகையானது இலங்கை மருத்துவ ஒழுங்கு விதிகளுக்கு முரணானது என்பதால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் எச்சரித்திருக்கிறது.

அது மட்டுமல்லாது, இவ் விடயத்தில் தங்களது கோரிக்கைக்கு சுகாதார அமைச்சு செவி சாய்க்கவில்லையெனில் சுகாதார சேவை தொழிற்சங்கங்களை மட்டுமல்லாது, எனைய துறை சார்ந்த தொழிற்சங்கங்களையும் மக்களையும் இணைத்துக்கொண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வந்திருக்கும் இந்திய மருத்துவ அணியினர் புல்மோட்டையில் வைத்தியசாலையொன்றை ஏற்படுத்தி சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான டாக்டர் கிஷாந்த தஸநாயக்க தெரிவிக்கையில்;

“இந்திய வைத்தியர்களுடன் கூடிய மருத்துவ அணியினர் இலங்கை வந்து வைத்தியசாலையொன்றை ஏற்படுத்தி சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் எதிர்க்கிறோம். ஏனெனில், இலங்கையின் சட்டவிதிகளுக்கு அமைய வைத்தியரோ அல்லது மருத்துவ நிலையங்களோ இலங்கை மருத்துவ சபையினால் பதிவு செய்யப்படவேண்டும்.

ஆனால், இந்திய வைத்தியர்களோ, அவர்களது வைத்தியசாலையோ அவ்வாறு எந்தப் பதிவுகளுக்கும் உட்படுத்தப்படவில்லை. எனவே, இங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளின் போது ஏதேனும் தவறுகள் ஏற்படின் அதற்கான பொறுப்பை எடுத்து மருத்துவ சபை விசாரணைகளை மேற்கொள்ளவும் செய்யாது. அதற்கான அதிகாரமும் அதற்குக் கிடையாது. இலங்கையிலுள்ள சட்டங்களுக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே இங்கு சிக்கலாகும்.

இந்தியாவோ அல்லது வேறு எவருமோ வைத்தியசாலையொன்றை அன்பளிப்பு செய்வதில் எமக்குப் பிரச்சினையில்லை. ஆனால், புதியதொரு வைத்தியசாலை ஏற்படுத்தப்படும் போது அதில் பணிபுரிய போதுமானளவு வைத்தியர்களும் சுகாதார பணியாளர்களும் இலங்கையில் இருக்கும்போது வெளிநாட்டிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்னவென்பதே எமது கேள்வியாகும்.

இலங்கைக்கென சிகிச்சை முறை உடன்படிக்கை இருக்கிறது. இலங்கை சூழலுக்கு ஏற்ற மாதிரியே இது இருக்கிறது. உதாரணமாக, இலங்கை வைத்திய சாலைகளை பொறுத்தவரையில சிகிச்சையளிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலை மாற்றப்பட்டாலும் அவர் பற்றி மீளாய்வு செய்யும் முறை இருக்கிறது. எனினும், இதுபற்றி இந்திய வைத்தியர்களுக்கு தெரியாது. இவ்வாறானவற்றையே நாம் எதிர்க்கிறோம்.

இதேநேரம், புல்மோட்டை என்பது இவ்வளவு காலமும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தற்போது மீட்கப்பட்ட பிரதேசமல்ல. எப்போதுமே அரச கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசமே இது. அது மட்டுமல்லாது, அங்கு ஏற்கனவே புல்மோட்டை வைத்தியசாலையும் அருகில் பதவியா வைத்தியசாலையும் இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் இவற்றை போதிய வசதிகளுடன் கூடியதாக அபிவிருத்தி செய்யாமல் இந்திய வைத்தியசாலையொன்றை ஏற்படுத்த அங்கு இடமளித்துள்ளது.

அத்துடன், இந்திய இராணுவ வைத்தியர்கள் அணியே இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது. யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகக் கூறப்படும் நேரத்தில் இந்திய இராணுவ வைத்தியசாலையொன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுவதே எமக்கு பெரும் சந்தேகமாக இருக்கிறது. இது இலங்கை சுகாதார சேவைக்கும் அதன் பணியாளர்களுக்கும் நாட்டின் இறைமைக்கும் பெரும் பாதிப்பாகும்.

எனவே, புல்மோட்டையில் புதிதாக அமைக்கப்படும் வைத்தியசாலையை இலங்கை சுகாதார சேவைக்குள் உள்ளீர்த்து இலங்கையிலுள்ள சுகாதார சேவைப் பணியாளர்களை வைத்து அதைக் கொண்டு நடத்தவேண்டுமென சுகாதார அமைச்சிடம் நாம் கோரிக்கை விடுக்கிறோம். எமது இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களையும் மக்களையும் இணைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதுமட்டுமல்லாது, இந்திய மருத்துவ அணியின் வருகையும் செயற்பாடுகளும் இலங்கை மருத்துவ ஒழுங்குவிதிகளுக்கு முரணானவை என்பதால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கத் தீர்மானித்துள்ளோம்’ என்றார்.

“குடிநீரில் எவ்வித நச்சும் கலக்கப்படவில்லை”

tap_water.jpgகொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பகிர்ந்தளிக்கபடும் குடிநீரில் எவ்வித நச்சுத் தன்மையும் கலக்கப்படவில்லை எனவும் நேற்றுப் பகல் முதல் சுத்தமான நீரையே வழங்குவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கிறது.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக சேற்றுடன் கலந்த மழை நீர் களனி கங்கையில் கலந்ததால் கொழும்பு பெரும்பாகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படும் நீர் சேற்று மணத்துடன் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து குடிநீரில் நஞ்சு கலந்துள்ளதாக வதந்திகள் பரவின.

நேற்றுக் காலை 10.00 மணியளவில் நீர்வழங்கல் சபை நிலைமையை சரி செய்ததுடன் மிகவும் சுத்தமான நீரை விநியோகம் செய்தது.பாவனையாளர்கள் அனைவரும் சேற்று மணத்துடன் காலையில் வந்த நீரை தொட்டிகளில் சேமித்திருப்பின் அவற்றை வெளியேற்றிவிட்டு புதிய சுத்தமான நீரை தொட்டிகளில் நிரப்பிக் கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொள்கிறது.

ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது

university-of-ruhuna.jpgரஜரட்ட பல்கலைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளில் தங்கியிருந்த மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ குழுக்களுக்கு இடையில் தோன்றியுள்ள பிரச்சினையை சமரசம் செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால், மாணவர் பிரதிநிதிகள் மீண்டும் மோதலில் ஈடுபடுவதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து எட்டு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீண்டும் கல்விகற்க அனுமதிக்குமாறு மாணவர்கள் சிலர் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துவந்தனர். அத்துடன், சில மாணவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 

புதுக்குடியிருப்பு பகுதியில் மோதல்; 58 சிவிலியன்கள் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg
புதுக்குடியிருப்பு பகுதியில் பலத்த மோதல்களில் ஈடுபட்டுள்ள படையினர் தப்பிவந்த 58 பொதுமக்களை மீட்டுள்ளனர். அத்துடன் மேலும் 250 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 58ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டுள்ளதுடன் புலிகளுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தியவாறு முன்னேறிச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மோதலில் பலியான புலிகளின் சடலங்கள், 17 ரி-56 ரக துப்பாக்கிகள், 81 ரக இயந்திரத் துப்பாக்கி இரண்டு, தொலைத்தொடர்பு கருவிகள் போன்றவையும் புதுக்குடியிருப்பு இரணப்பாள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

மோதல்கள் நடந்த பகுதியில் படையினரால் மீட்கப்பட்ட 58 பொதுமக்களுள் புலிகளின் மக்கள் படையின் உறுப்பினர்களும் இருப்பதாகவும் அவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்தியொன்று தெரிவிக்கின்றது.

டக்ளஸ் – லியாம் பொக்ஸ் சந்திப்பு

dag-liya.jpgபிரிட்டிஷ் கொன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யும் நிழல் பாதுகாப்பு விவகார அமைச்சருமான டாக்டர் லியாம் பொக்ஸ் சமூக சேவைகள் அமைச்சரும் வட மாகாண விசேட செயலணித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசினார்.

நேற்று முன்தினம் காலை கொழும்பிலுள்ள சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. தற்போது வட பகுதியில் இடம்பெறும் மோதல் நிலை அதன் காரணமாக பொதுமக்களின் இடம்பெயர்வுகள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் டாக்டர் லியாம் பொக்ஸ் விரிவாக கேட்டறிந்து கொண்டார்.

மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமைகள் மற்றும் விபரங்களை விபரமாக தெரியப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் நலன் தொடர்பில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கினார்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 40 கோடி ரூபா நஷ்டஈடு -அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தகவல்

maithripalasirisena.jpgஅண்மையில் நிலவிய கடும் வரட்சி காரணமாக பெரும்பாலான பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் விவசாயப் பாதுகாப்புச் சபையின் கீழ் காப்புறுதி செய்யப்பட்டவைக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நிலவிய கடும் வரட்சியால் பத்து மாவட்டங்களின் காய்கறி, தானியம் மற்றும் பழ வர்க்கங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான நஷ்டஈடு வழங்க 40 கோடி ரூபா மதிப்பீடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். நெல் கொள்வனவு சபை மூலம் இவ்வருட அறுவடையின் நெல் கொள்வனவு இடம்பெற்று வருகிறது. சம்பா நெல் ஒரு கிலோ 40 ரூபா வீதமும் நாடு ஒரு கிலோ 28 ரூபா வீதமும் கொள்வனவு செய்யப்படுகிறது.

இவ்வருடம் கிழக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் ஹெக்டரில் புதிதாக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் பெரும் அளவிலான நெல் அறுவடை கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.விவசாய காப்புறுதிச் சபை நாட்டின் விவசாயிகளுக்காக பாரி சேவையாற்றி வருகின்றது. அதன் சேவையை மேலும் விஸ்தரிக்கும் வகையில் தற்போது இணையதளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பின் கொள்கை இலக்குக்கு ஆதரவாகவே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி

imf.jpgஇலங்கையின் வட பகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இருந்து இரு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள அதேசமயம், இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கடன் தொகைக்கு எத்தகைய கட்டுப்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்குமென கடந்த வியாழக்கிழமை ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் டேவிட் ஹோவ்லே; கடன் தொகையானது “அரசாங்கத்தின் கொள்கை இலக்குகளுக்கு’ பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. விசேடமாக வட இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்டது.

கடன் வழங்குவது தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் நிபந்தனைகள் எத்தகையதாக அமையுமென பொறுத்திருந்து பார்க்குமாறும் பேச்சாளர் ஹோவ்லே பதிலளித்திருக்கிறார். வெள்ளை மாளிகையில் மார்ச் 12 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சந்தித்திருந்தார். அச்சமயம் வெள்ளை மாளிகைக்கு சில கட்டிடங்களுக்கு அப்பாலிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தின் அடித்தளத்திலுள்ள மண்டபத்தில் சர்வதேச நாணய நிதியம் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி இன்னர்சிற்றி பிரஸ் அங்கு சென்றபோது ஹோவ்லே செய்தியாளர் மாநாட்டை முடித்துவைக்கும் தறுவாயில் இருந்தார். இலங்கை தொடர்பான கேள்வியை கடைசியாகவே அவர் எடுத்தார். அன்றைய தினம் வேலைப்பளு கூடிய நாள் என்று சிலர் கூறினர். இணையத்தளத்தினூடாகவே சில கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பற்றாக்குறையானது சுமார் 1/2 மணிநேர கேள்விகள், பதில்களை ஏப்பம் விட்டிருப்பதாக தென்படுகிறது.

இது இவ்வாறிருக்க ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வாஷிங்டன் பயணத்தின் போது, இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை தானும் பேசப்படவில்லை. இதனை ஐ.நா. அமைதி காக்கும் படைத் தலைவர் அலெய்ன் லீ ரோய் இன்னர்சிற்றி பிரஸுக்கு புதன்கிழமை தெரிவித்திருந்தார். பான் கீ மூன் இருதடவை சண்டையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன் இலங்கையின் மனிதாபிமான நெருக்கடிக்கு அவர் முக்கியத்துவம் அளித்திருப்பதாக அவரின் அலுவலக பேச்சாளர் கூறியிருந்தார். இத்தகைய நிலையிலேயே அமெரிக்க விஜயத்தின்போது பான் கீ மூன் இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை தானும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இது இவ்வாறிருக்க இலங்கைக்கான கடனுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள் என்று சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

இலங்கை ரூபாவுக்கு (பெறுமதியை தக்கவைக்க) ஆதரவாக இக்கடன் தொகையை பயன்படுத்தக்கூடாது என்பது நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், மனிதப் பேரவலம் தொடர்பாக அழைப்பு விடுக்கப்படும் என்று ஐ.நா. தரப்பிலுள்ளவர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் உருவாக்கியுள்ள முகாம்கள் தொடர்பாக அந்த நிபந்தனைகள் இருக்குமென சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இதனை சர்வதேச நாணய நிதியத்தின் ராடாரில் காணவில்லையெனவும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் விதித்திருக்கும் நிபந்தனை என்ன? – வெளிப்படுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

unp_logo_1.jpgஅரசிடம் உறுதியான பொருளாதார முகாமைத்துவம் இல்லாததால் வங்குரோத்து ஏற்பட்டிருப்பதுடன் நிபந்தனையடிப் படையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  இலங்கை நாணயமும் பங்குச்சந்தையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்பார்த்திருக்கும் நிலைமையில் இதுதொடர்பாக அரசு உண்மை நிலையை வெளிப்படுத்தவேண்டும் என்று ஐ.தே.க. வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;  அரசாங்கம் செலவீனம் மற்றும் வெளிநாட்டுக்கடன் கொடுப்பனவுக்கேற்ப வருமானத்தை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமையினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த இரண்டுக்குமிடையிலான இடைவெளி எதிர்வரும் ஏப்ரல், மேயில் அதிகரிக்குமென்பதால் பாரிய சிக்கல் தோன்றும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே அரசாங்கம் இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிபந்தனையின் அடிப்படையில் கடன்பெற முன்வந்துள்ளது. 2007 மற்றும் 2008 இல் பணத்தை அச்சடித்தும் டொலருக்கு எதிராக நாணய பெறுமதி இறக்கத்தை மேற்கொண்டும் சமாளித்ததனால் பணவீக்கம் நாட்டில் அதிகரித்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலேயே உதவி கோரியுள்ளது. இந்நிலையில், எந்த நிபந்தனையின் அடிப்படையில் கடன் உதவி பெறப்படுகின்றதென்பதை இலங்கையின் நாணயமும் பங்குச் சந்தையும் எதிர்பார்க்கின்றன. கடன் பெறப்பட்டால், பண நிரம்பல் அதிகரித்து பணவீக்கம் மேலும் மோசமாக அதிகரிக்கும் அதேநேரம் எதிர்காலத்தில் அரசாங்கம் கடனைச் செலுத்தும் போது மேலும் சுமையை ஏற்படுத்தும்.

இதனால், எதிர்காலத்தில் மக்களே பணவீக்கத்தால் பாதிக்கப்படுவர். அதேநேரம் அவர்களது கடனும் வட்டியும் மேலும் அதிகரிக்கும். எனவே எந்த நிபந்தனையின் அடிப்படையில் கடன் பெறப்படுகின்றதென்பதை வெளிப்படுத்த வேண்டும். இதை வெளிப்படுத்த வேண்டியது அரசின் கடமையும் பொறுப்புமாகும்.

அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாது யுத்த வெற்றி குறித்து பிரஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மட்டுமன்றி கடந்த காலத்தில் ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசுகளும் போரை முன்னெடுத்தன. அதேநேரம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தனர்.

பயங்கரவாதிகள் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யவே குரும்பட்டி விமானத்தில் வந்து இறைவரி திணைக்களத்தைத் தாக்கினர். சிலர் இலக்குத் தவறியுள்ளதென கூறுகின்றனர். ஆனால், கடந்த காலங்களில் புலிகள் மத்திய வங்கி, விமான நிலையம், துறைமுகம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களையே குறிவைத்துத் தாக்கினர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

2001 இல் சுதந்திரக் கட்சி எம்மிடம் ஆட்சியைத் தரும்போது அரச திறைசேரி வங்குரோத்திலிருந்தது. அதேநேரம் விமானங்கள் அழிக்கப்பட்டும் வெளிநாட்டு கப்பல்கள் துறைமுகத்துக்கு வராமலும் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டது. எனினும் நாம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 2004 இல் கையளிக்கும் போது பொருளாதார வளர்ச்சி 6.5% இருந்தது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைத்தீவு நோயாளர்களுக்கு இனி புல்மோட்டையிலேயே சிகிச்சை -ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpgமுல்லைத் தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்படும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இனிமேல் நேரடியாக் புல்மோட்டை மற்றும் பதவியாவில் அமைக்கப்பட்டுள்ள தள வைத்தியசாலைகளுக்கே அழைத்துச் செல்லப்படுவர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்திய மருத்துவர்களைக் கொண்ட தள வைத்தியசாலைகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதையடுத்து திருமலை ஆதார வைத்தியசாலையில் முல்லைத்தீவின் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அனுமதிப்பதில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தற்போது முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டை மற்றும் பதவியா வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அழைத்து வருவதற்கு 2 – 3 மணித்தியாலங்கள் போதுமானது. இதன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது வரை 9 தொகுதிகளாக கடல்வழியாக அழைத்து வரப்பட்ட 3195 நோயாளர்களில் 1512 பேர் தமது சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலை – 732 பேர், பொலன்னறுவை வைத்தியசாலை – 171 பேர், கந்தளாய் வைத்தியசாலை – 160 பேர், தம்பலகாமம் வைத்தியசாலை – 75 பேர், கொழும்பு மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை – 93 பேர் என வெளியிடங்களிலும் 1231 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஏனைய 425 பேர் தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 24 பிரசவங்கள் இது வரை இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

புதிய உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதி விருது!

mahinda.jpgகடந்த வருடம் புதிய உற்பத்திப் பொருட்களை அறிமுகம் செய்த உற்பத்தியாளர்களை விருது வழங்கி கௌரவிக்க புதிய உற்பத்தியாளர்களின் ஆணைக்குழு தீர்மாணித்துள்ளது. ஜனாதிபதி விருது மற்றும் தேசிய விருது என இரண்டு கட்டங்களாக இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இதில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு அதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு புதிய உற்பத்தியாளர்களின் ஆணைக்குழு கேட்டுள்ளது.கடந்த வருடம் அறிமுக உற்பத்திகளை சமர்பித்து பேடன்ட் சான்றிழ்களைப்; பெற்றவர்கள் இம்முறை ஜனாதிபதி விருதுக்காக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பேட்டன்ட் சான்றிதழ் கிடைக்காத பாடசலை, தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய விருதுக்காக விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 0112 424 964 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.