கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் விதித்திருக்கும் நிபந்தனை என்ன? – வெளிப்படுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

unp_logo_1.jpgஅரசிடம் உறுதியான பொருளாதார முகாமைத்துவம் இல்லாததால் வங்குரோத்து ஏற்பட்டிருப்பதுடன் நிபந்தனையடிப் படையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  இலங்கை நாணயமும் பங்குச்சந்தையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்பார்த்திருக்கும் நிலைமையில் இதுதொடர்பாக அரசு உண்மை நிலையை வெளிப்படுத்தவேண்டும் என்று ஐ.தே.க. வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;  அரசாங்கம் செலவீனம் மற்றும் வெளிநாட்டுக்கடன் கொடுப்பனவுக்கேற்ப வருமானத்தை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமையினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த இரண்டுக்குமிடையிலான இடைவெளி எதிர்வரும் ஏப்ரல், மேயில் அதிகரிக்குமென்பதால் பாரிய சிக்கல் தோன்றும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே அரசாங்கம் இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிபந்தனையின் அடிப்படையில் கடன்பெற முன்வந்துள்ளது. 2007 மற்றும் 2008 இல் பணத்தை அச்சடித்தும் டொலருக்கு எதிராக நாணய பெறுமதி இறக்கத்தை மேற்கொண்டும் சமாளித்ததனால் பணவீக்கம் நாட்டில் அதிகரித்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலேயே உதவி கோரியுள்ளது. இந்நிலையில், எந்த நிபந்தனையின் அடிப்படையில் கடன் உதவி பெறப்படுகின்றதென்பதை இலங்கையின் நாணயமும் பங்குச் சந்தையும் எதிர்பார்க்கின்றன. கடன் பெறப்பட்டால், பண நிரம்பல் அதிகரித்து பணவீக்கம் மேலும் மோசமாக அதிகரிக்கும் அதேநேரம் எதிர்காலத்தில் அரசாங்கம் கடனைச் செலுத்தும் போது மேலும் சுமையை ஏற்படுத்தும்.

இதனால், எதிர்காலத்தில் மக்களே பணவீக்கத்தால் பாதிக்கப்படுவர். அதேநேரம் அவர்களது கடனும் வட்டியும் மேலும் அதிகரிக்கும். எனவே எந்த நிபந்தனையின் அடிப்படையில் கடன் பெறப்படுகின்றதென்பதை வெளிப்படுத்த வேண்டும். இதை வெளிப்படுத்த வேண்டியது அரசின் கடமையும் பொறுப்புமாகும்.

அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாது யுத்த வெற்றி குறித்து பிரஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மட்டுமன்றி கடந்த காலத்தில் ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசுகளும் போரை முன்னெடுத்தன. அதேநேரம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தனர்.

பயங்கரவாதிகள் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யவே குரும்பட்டி விமானத்தில் வந்து இறைவரி திணைக்களத்தைத் தாக்கினர். சிலர் இலக்குத் தவறியுள்ளதென கூறுகின்றனர். ஆனால், கடந்த காலங்களில் புலிகள் மத்திய வங்கி, விமான நிலையம், துறைமுகம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களையே குறிவைத்துத் தாக்கினர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

2001 இல் சுதந்திரக் கட்சி எம்மிடம் ஆட்சியைத் தரும்போது அரச திறைசேரி வங்குரோத்திலிருந்தது. அதேநேரம் விமானங்கள் அழிக்கப்பட்டும் வெளிநாட்டு கப்பல்கள் துறைமுகத்துக்கு வராமலும் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டது. எனினும் நாம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 2004 இல் கையளிக்கும் போது பொருளாதார வளர்ச்சி 6.5% இருந்தது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *