முல்லைத் தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்படும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இனிமேல் நேரடியாக் புல்மோட்டை மற்றும் பதவியாவில் அமைக்கப்பட்டுள்ள தள வைத்தியசாலைகளுக்கே அழைத்துச் செல்லப்படுவர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்திய மருத்துவர்களைக் கொண்ட தள வைத்தியசாலைகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதையடுத்து திருமலை ஆதார வைத்தியசாலையில் முல்லைத்தீவின் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அனுமதிப்பதில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தற்போது முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டை மற்றும் பதவியா வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அழைத்து வருவதற்கு 2 – 3 மணித்தியாலங்கள் போதுமானது. இதன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது வரை 9 தொகுதிகளாக கடல்வழியாக அழைத்து வரப்பட்ட 3195 நோயாளர்களில் 1512 பேர் தமது சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் வைத்தியசாலை – 732 பேர், பொலன்னறுவை வைத்தியசாலை – 171 பேர், கந்தளாய் வைத்தியசாலை – 160 பேர், தம்பலகாமம் வைத்தியசாலை – 75 பேர், கொழும்பு மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை – 93 பேர் என வெளியிடங்களிலும் 1231 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஏனைய 425 பேர் தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 24 பிரசவங்கள் இது வரை இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.