இலங்கையின் வட பகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இருந்து இரு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள அதேசமயம், இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கடன் தொகைக்கு எத்தகைய கட்டுப்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்குமென கடந்த வியாழக்கிழமை ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் டேவிட் ஹோவ்லே; கடன் தொகையானது “அரசாங்கத்தின் கொள்கை இலக்குகளுக்கு’ பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. விசேடமாக வட இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்டது.
கடன் வழங்குவது தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் நிபந்தனைகள் எத்தகையதாக அமையுமென பொறுத்திருந்து பார்க்குமாறும் பேச்சாளர் ஹோவ்லே பதிலளித்திருக்கிறார். வெள்ளை மாளிகையில் மார்ச் 12 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சந்தித்திருந்தார். அச்சமயம் வெள்ளை மாளிகைக்கு சில கட்டிடங்களுக்கு அப்பாலிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தின் அடித்தளத்திலுள்ள மண்டபத்தில் சர்வதேச நாணய நிதியம் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி இன்னர்சிற்றி பிரஸ் அங்கு சென்றபோது ஹோவ்லே செய்தியாளர் மாநாட்டை முடித்துவைக்கும் தறுவாயில் இருந்தார். இலங்கை தொடர்பான கேள்வியை கடைசியாகவே அவர் எடுத்தார். அன்றைய தினம் வேலைப்பளு கூடிய நாள் என்று சிலர் கூறினர். இணையத்தளத்தினூடாகவே சில கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பற்றாக்குறையானது சுமார் 1/2 மணிநேர கேள்விகள், பதில்களை ஏப்பம் விட்டிருப்பதாக தென்படுகிறது.
இது இவ்வாறிருக்க ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வாஷிங்டன் பயணத்தின் போது, இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை தானும் பேசப்படவில்லை. இதனை ஐ.நா. அமைதி காக்கும் படைத் தலைவர் அலெய்ன் லீ ரோய் இன்னர்சிற்றி பிரஸுக்கு புதன்கிழமை தெரிவித்திருந்தார். பான் கீ மூன் இருதடவை சண்டையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன் இலங்கையின் மனிதாபிமான நெருக்கடிக்கு அவர் முக்கியத்துவம் அளித்திருப்பதாக அவரின் அலுவலக பேச்சாளர் கூறியிருந்தார். இத்தகைய நிலையிலேயே அமெரிக்க விஜயத்தின்போது பான் கீ மூன் இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை தானும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கான கடனுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள் என்று சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.
இலங்கை ரூபாவுக்கு (பெறுமதியை தக்கவைக்க) ஆதரவாக இக்கடன் தொகையை பயன்படுத்தக்கூடாது என்பது நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், மனிதப் பேரவலம் தொடர்பாக அழைப்பு விடுக்கப்படும் என்று ஐ.நா. தரப்பிலுள்ளவர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் உருவாக்கியுள்ள முகாம்கள் தொடர்பாக அந்த நிபந்தனைகள் இருக்குமென சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இதனை சர்வதேச நாணய நிதியத்தின் ராடாரில் காணவில்லையெனவும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.