அண்மையில் நிலவிய கடும் வரட்சி காரணமாக பெரும்பாலான பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் விவசாயப் பாதுகாப்புச் சபையின் கீழ் காப்புறுதி செய்யப்பட்டவைக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நிலவிய கடும் வரட்சியால் பத்து மாவட்டங்களின் காய்கறி, தானியம் மற்றும் பழ வர்க்கங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான நஷ்டஈடு வழங்க 40 கோடி ரூபா மதிப்பீடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். நெல் கொள்வனவு சபை மூலம் இவ்வருட அறுவடையின் நெல் கொள்வனவு இடம்பெற்று வருகிறது. சம்பா நெல் ஒரு கிலோ 40 ரூபா வீதமும் நாடு ஒரு கிலோ 28 ரூபா வீதமும் கொள்வனவு செய்யப்படுகிறது.
இவ்வருடம் கிழக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் ஹெக்டரில் புதிதாக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் பெரும் அளவிலான நெல் அறுவடை கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.விவசாய காப்புறுதிச் சபை நாட்டின் விவசாயிகளுக்காக பாரி சேவையாற்றி வருகின்றது. அதன் சேவையை மேலும் விஸ்தரிக்கும் வகையில் தற்போது இணையதளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.