March

March

ஐக்கிய தேசியக் கட்சியை பூண்டோடு அழிக்க முற்படும் அரசின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது – ரணில் விக்கிரமசிங்க

ranil.jpgஐக்கிய தேசியக் கட்சியை பூண்டோடு அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து இருப்பதாகத்தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்த சதித்திட்டம் வெற்றி பெறுவதற்கு தான் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் எந்தச்சக்தியாலும் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கமுடியாதெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நாட்டில் நல்லாட்சியொன்று நடைபெறுவதைக் காண முடியவில்லையென்றும் அதிகாரத்தில் நிலைப்பதற்காக ராஜபக்ஷ அரசு யுத்தத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பிரதான எதிர்க்கட்சிகளையும் சாடுவதையுமே ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகின்றது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

காலி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி புதிய கட்டிடத்தை சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது;

“நாட்டில் இன்று உருவாகியிருக்கும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வும் இல்லாமையால் 108 பேரைக் கொண்ட முழு அமைச்சரவையும் யுத்தத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை இவ்வாறே நீடித்துக் கொண்டுபோகுமானால் நாடு பாரிய பின்னடைவை நோக்கியே பின் தள்ளப்படும். நாடு இன்று முற்று முழுதான பொருளாதார சீரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

படைத்தரப்பினர் கிளிநொச்சியை, முல்லைத்தீவை தம்வசப்படுத்தியதன் மூலம் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. படையினர் தமது கடமையை நிறைவேற்றியுள்ளனர். இதற்காக நாம் அவர்களை பாராட்டுகின்றோம். நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.

யுத்தம் முடிந்துவிட்டபோதிலும் நாடு எதிர்கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய திட்டங்கள் அரசிடம் காணப்படவில்லை. இந்தச் சவாலை எதிர்கொள்ளக் கூடிய சக்தியோ, திட்டங்களோ அரசாங்கத்திடம் இல்லை. இந்த அரசிடம் நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார அபிவிருத்தித் திட்டம் எதனையும் காணக்கூடியதாக இல்லை.

எந்தவொரு கெரில்லா யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் ஒரு விடயத்தை தெரிந்து வைத்துள்ளன. ஏற்றுக் கொண்டுள்ளன. அது தான் “நாம் அரசாங்கத்தைப்போன்று பலம் கொண்டவர்கள் அல்ல. அதேபோன்று, அரசைப் போன்று அதிகாரம் கொண்டவர்களுமல்ல, எமது ஒரே நோக்கம் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதாகும். அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் அரசைப் பலவீனப்படுத்தி நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளிவிடுவதே ஆகும்’

30 வருடகாலயுத்தம் காரணமாக நாடு பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டது. இவற்றினூடாக நாடு அரசியல் ரீதியில் பலவீனப்பட்டுப் போயுள்ளது. நாட்டில் இன்று நல்லாட்சியொன்று நடைபெறவில்லை. நல்லாட்சி இடம்பெறாத நாடு தோல்வியடைந்த நாடாகவே காணப்படும். அந்த நிலைக்கே இன்று எமது நாடும் தள்ளப்பட்டுள்ளது.

எமது நாட்டில் இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் மட்டும் நடக்கவில்லை. பொருளாதார யுத்தம் முழுநாட்டையும் ஆட்சிகொண்டுள்ளது. அரசாங்கத்திடம் சீரான பொருளாதாரக் கொள்கையே, திட்டமோ காணப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.

அரசாங்கத்தின் 108 போரைக் கொண்ட பாரிய அமைச்சரவையிலிருக்கும் சகல அமைச்சர்களும் ஆளும் தரப்பு எம்.பி.க்களும் கூட தமக்குரிய விடயம் தொடர்பில் பேசவில்லை. அவர்களால் பேசவும் முடியாது. அவர்கள் எல்லோருமே யுத்தம் என்ற மந்திரத்தையே ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். எந்தவொரு அமைச்சரும் தமது அமைச்சுடன் தொடர்புபட்ட விடயங்களைப்பற்றி பேசுவதில்லை.

எமது நாட்டில் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அராஜகம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கின்றது. இந்த அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு மக்கள் ஒன்றுபடமுன்வராவிட்டால் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணிக்கு வந்துவிடும். அதன்பின்னர் நாட்டை பேரழிவிலிருந்து மீட்டெடுப்பது கஷ்டமான காரியமாகிவிடும். மக்கள் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாணத் தவறினால் அதன் விளைவுகள் பாரதூரமானதாகவே அமையும். அதன் பிரதிபலிப்பு உடனடியாகத் தெரியாதுபோனாலும் காலம் கடந்த பின்னர் முழுநாடுமே கைசேதப்படும் நிலை உருவாகும்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவருமே பெரும் பிரச்சினையாகவுள்ளது. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். எம்மோடுள்ள சிலரும் அதற்குத் துணைபோய்க்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எனது உயிரைப்பணயம் வைத்தேனும் கட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பேன். நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் இட்டுச்செல்ல நாம் இடமளிக்கக் கூடாது. இந்த விடயத்தில் ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட அனைவரும் ஒன்றுபடவேண்டும்’ என்று ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐ.நா. மனித உரிமை அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பம் இலங்கையின் உண்மை நிலைவரம் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்குவார்

mahinda_samarasinghe.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் குறித்தும் அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாட்டு பிரதிநிதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்க உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை அமர்வு இன்று (02) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்தஅமர்வில் கலந்து கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ சேவை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு நேற்று முன்தினம் இரவு ஜெனீவா பயணமானது.

மேற்படி அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெற உள்ளதோடு மோதல் காரணமாக இடம் பெயர்ந்துள்ள மக்கள் குறித்தும் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் இங்கு விளக்கமளிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாட்டு ஐ. நா. மனித உரிமை பேரவை பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.

வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் உணவு மற்றும் தங்குமிட வசதி மற்றும் சுகாதார வசதிகளின்றி கஷ்டப்படுவதாகவும் சில தரப்பினர் சர்வதேச மட்டத்தில் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் இது தொடர்பான உண்மை நிலைமைகளை அமைச்சர் இங்கு எடுத்துரைப்பார் எனவும் அமைச்சு உயரதிகாரி குறிப்பிட்டார்.

மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பும் யோசனை இங்கு முன்வைக்கப்பட்டால் அதனை இலங்கை ஆட்சேபிக்கும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க, சட்டமாஅதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் ஜெனீவா சென்றுள்ளனர்.

தேர்தல் திகதி எக்காரணம் கொண்டும் மாற்றப்படாது – மேலதிக தேர்தல் ஆணையாளர்

sri-lanka-election-01.jpgஏப்ரல் 25ம் திகதியே மேல் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். எக்காரணம் கொண்டும் தேர்தல் திகதி மாற்றப்படாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமனசிரி நேற்று தெரிவித்தார்.

தேர்தல் திகதியை மாற்றுமாறு ஐ. தே. க., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்களான பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையாளரை கோரியுள்ளன. இது குறித்து வினவிய போதே மேலதிக ஆணையாளர் மேற்கண்வாறு கூறினார்.

சகல விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே தேர்தல் ஆணையாளர் தேர்தல் தினத்தை முடிவு செய்துள்ளார். தமிழ்- சிங்கள புதுவருடம் மற்றும் விசேட தினங்கள் குறித்து ஆராய்ந்த பின் பொருத்தமான திகதியை தேர்தல் ஆணையாளர் முடிவு செய்ததாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி திகதியில் இருந்து 5 வாரங்களுக்கும் 8 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் திகதி அறிவி க்கப்பட வேண்டும். தேர்தல் சட்ட விதிகளின் படியே திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டமெதுவும் கிடையாது எனவும் அவர் கூறினார்.

தீவிரவாதத்துக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரம் அவசியம் – அப்துல் கலாம்

abdhulkalam.jpgதீவிர வாதத்துக்கு எதிராக தேசிய அளவில் அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார். மங்களூரில் பள்ளி மாணவர்களிடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலாம் கலந்து கொண்டார். அப்போது “நானும் எனது இந்தியாவும்” என்ற தலைப்பில் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

தீவிரவாதம் நமது நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதை வேருடன் அழிக்க வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அப்போது மட்டுமே தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அளவில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்தில் சில இளைஞர்கள் ஈடுபட வறுமை, வேலையின்மையும் ஒரு காரணமாகும். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் அரசியல் நோக்கத்தோடு தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதத்துக்கு எதிராக தனிப்படையை ஏற்படுத்த வேண்டும். எங்கு தீவிரவாதம் தலைதூக்கினாலும் அங்கு ஐ.நா. சபை அனுப்பிவைக்கப்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதற்கு இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். விவசாயம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் கலாம்.

மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு வேண்டுகோள்

நீர்த்தேக் கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீரேந்து பகுதிகளில் வறட்சியான காலநிலை காணப்படுவதன் காரணமாக அங்கு நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளதோடு நீர்மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

எனவே மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறும் தேவையில்லாத மின் குமிழ்கள் மற்றும் மின்சார உபகரணங்களை அனைத்து வைக்குமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர். நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதால் எரிபொருள் மூலம் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

கடந்த 2 மாதங்களாக நீரேந்து பகுதிகளில் வறட்சியான காலநிலை காணப்படுவதோடு இந்நிலை இம்மாத பிற்பகுதி வரை தொடரும் என காலநிலை அவதான நிலையம் கூறியது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வறட்சியான காலநிலை காணப்படுவதோடு இந்த மாத நடுப் பகுதியில் மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் அவதான நிலையம் தெரிவித்தது.

காயமடைந்த 52 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில்

vanni-injured.gifவன்னியி லிருந்து படுகாயமடைந்த நிலையில் கப்பல் மூலம் திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 52 பேர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  11 அம்புலன்ஸ்களில் இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுகமாகும் நோயாளர்கள் நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் வெளியே தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களை வவுனியாவில் உள்ள உறவினர்கள் பொறுப்பேற்றால் அனுமதிக்கப்படுவர். எவரும் இல்லாதவர்கள் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் கடும் உஷ்ணம்

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் உஷ்ணமான காலநிலை நிலவுகின்றது. பகல் வேளைகளில் கடும் வெயிலுடன் கூடிய வெப்ப மான காலநிலை நிலவுவ துடன் இரவு வேளைகளிலும் கடும் உஷ்ணம் நிலவுவதாக கூறப்படுகின்றது.

இந்த வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக குழந்தைகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். போதிய காற்றோட்ட வசதிகளற்ற வீடுகளில் வசித்து வரும் வறிய மக்களும், அடிப்படை வசதிகள் வழங்கப்படாத நிலையில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களும் உஷ்ணமான காலநிலையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நிறுத்தத்திற்கு அவசியமில்லை – வெளிவிவகார அமைச்சர்

bogolagama-1612.jpgஅரசாங் கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகமான ஜோன் ஹோம்ஸ் நேரடியாக சென்று பார்வையிட்டதையடுத்தே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

பாதுகாப்புச்சபை கட்டிடத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கை விவகாரம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நிறுத்தம் அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது கூட்டம் முடிவுற்ற நிலையில் அதுதொடர்பில் சனிக்கிழமை மாலை இன்டர்கொண்டினால் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கை தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்கு வருகைதந்துள்ள பொதுமக்களுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை ஜோன் ஹோம்ஸ் நேரடியாகச் சென்று அவதானித்து திருப்தியுற்ற நிலையிலேயே விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு கோரியுள்ளார்.

பொதுமக்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாதவாறு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற நிலையில் இடம்பெயர்ந்துவரும் மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கின்றது.

32 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அரசு உரியமுறையில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசின் மனிதாபிமான நடவடிக்கைகளையடுத்து ஜப்பான் உட்பட ஏனைய உலக நாடுகள் விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே வைக்குமாறும் அவர்களால் தடுத்து வைக்கப்படும் மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்குமாறும் கோரியுள்ளது.

மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை தடைசெய்வது சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும்.

இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க நான்கு ஆஸ்பத்திரிகள் தயார்

trico.gifவன்னியி லிருந்து கடல் மார்க்கமாக திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன் நோயாளர்களை கந்தளாய், பொலன்நறுவை, வவுனியா மற்றும் மன்னார் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள். மருந்துப் பொருட்கள், ஆளணிகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்தலியனகே உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளர் அடங்கலான குழுவினர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்றனர்.  அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சகல நிவாரணக் கிராமங்கள், இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்று ஆராய்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் விசேட பணிப்பிற்கிணங்க நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் சுகாதார தேவைகள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதுடன் போஷாக்கின்மையால் உள்ளவர்களுக்கு எவ்வித வயது வித்தியாசமுமின்றி திரிபோஷா வழங்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை ஒடுக்க தைரியமான இலங்கைத் தமிழரின் உதவியை பெறவேண்டும்- சிவசேனா

பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தைரியமான இலங்கைத் தமிழர்களின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள சிவசேனா கட்சி, விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்திய அரசுக்கு எதிராக அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிவசேனா கட்சியின் பத்திரிகையான “சாம்னா’ வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இந்தியாவை சுற்றி பல்வேறு தரப்பிலிருந்து ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கின்றது. அதனை தடுக்க மத்திய அரசு எதனையாவது செய்யவேண்டியது அவசியம்.

இந்தியாவின் தென்பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாமென இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்துகொண்டு வருகின்றது. புலிகளை பெருமளவு வெற்றி கொண்டு விட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்தாலும் கொழும்பில் புலிகளின் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இலங்கைத்தமிழர் பிரச்சினை அந்நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினை. இலங்கைத்தமிழர் விடயத்தில் நாம் அனுதாபம் காட்டினாலும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றவேண்டியது அவசியம்.

காஷ்மீரில் பிரிவினைவாதிகளை எதிர்க்கும் நாம் புலிகளை மட்டும் ஆதரிக்கமுடியாது. புலிகளுடன் போரிட இந்திய இராணுவத்தை அனுப்பியதால்தான் ராஜீவ்காந்தி உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய அரசும் அதேபோன்ற தவறைசெய்யக்கூடாது. இலங்கை அரசு அங்குள்ள தமிழ்மக்களை அழிக்க நினைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நலனில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அக்கறை காட்டும் போது மற்றைய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் நலனில் நாம் ஏன் அக்கறை காட்டக்கூடாது?

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிராகக்தான் போராடி வருகின்றார்கள். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை.இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் போராட நினைத்தால் 100 கோடி இந்தியர்களின் ஆதரவைப் அனுதாபத்தை இழந்துவிடுவார்கள்.

இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் எமது நாட்டின் முதல் எதிரியான பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய அரசு தயாரில்லை. அதேபோலத்தான் மத்தியிலுள்ள தற்போதைய அரசு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது. இந்தியாவில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க தைரியமான இலங்கைத் தமிழரின் உதவியை பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.

அந்நியநாட்டு பயங்கரவாதிகள், நேபாள மாவோயிஸ்டுகள்,சீன அரசு, வங்கதேச கலகம், இலங்கை நிலைவரம் என பலதரப்பிலிருந்தும் இந்திய நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்க மத்திய அரசு உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.