March

March

“ஏ 9′ வீதியூடாக அத்தியாவசியப் பொருட்களுடன் 22 லொறிகள் குடாநாட்டுக்குச் சென்றன

lorries.jpgஏ 9  பாதையூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இருபத்திரண்டு லொறிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தன. முன்னதாக திங்கட்கிழமை காலை வெலிசறை உணவுக் களஞ்சியத்தில் இருந்து இந்த லொறிகள் புறப்பட்டன.

ஏ 9 பாதை போக்குவரத்திற்காகப் திறக்கப்பட்ட பின்னர் யாழ்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதன் முதலாக இந்த லொறிகள் சென்றுள்ளன.  யாழ்ப்பாணம் வந்த இந்த லொறிகளின் பொருட்கள் நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த லொறிகள் மீண்டும் கொழும்புக்குச் செல்லும்போது போத்தலில் அடைக்கப்பட்ட பனம் கள்ளு, பனம் சாராயம், பனம் உற்பத்திப் பொருட்கள், வெங்காயம், கடலுணவுகள் என்பன எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதேவேளை, தனியார் வர்த்தகர்களும் லொறிகளில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வாய்ப்பு தெற்காசியாவிடமிருந்து பறிபோகும் ஆபத்து -அர்ஜுன ரணதுங்க

cricket-arjuna-ranatunga.jpg2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த தெற்காசிய நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக விலகிச் சென்று விடக் கூடிய ஆபத்து இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

பாகிஸ்தான், லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பாக அர்ஜுன ரணதுங்க இந்த கருத்தை வெளியிட்டார்.

“கிரிக்கெட் விளையாட்டு இன்று பிளவடைந்து காணப்படுகிறது. அத்துடன், நடவடிக்கைகளின் போது, எமது ஒத்துழைப்புகளும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிருந்து (தெற்காசியாவிலிருந்து) விலகிச் சென்று விடக் கூடும். எனவே இது விடயத்தில் நாம் மேலும் நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும். என்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபை முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புதிய வத்திக்கான் தூதுவர்

vatican-museum.jpgஅதிவண யோசப் ஸ்பித்தேரி அடிகளார் இலங்கைக்கான புதிய வத்திக்கான் தூதுவராக பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். மோல்ரா நாட்டைச் சேர்ந்த 49 வயதான இவர் பனாமா, ஈராக், மெக்ஸிக்கோ, வெனிஸ்வெலா, போத்துக்கல், கிறீஸ் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வத்திக்கானில் உள்ள இராஜதந்திர பணியகத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் கடந்த நான்கு வருடங்களாக வத்திக்கான் தூதுவராக பணியாற்றி வந்த அதிவணமரியா செனாரி சிரியாவின் வத்திக்கான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து புதிய தூதுவர் இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணை

sri-lanka-police.jpgமாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாக படையினரும் பொலிஸாரும் தெரிவிக்கும் நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த விசாரணைகளை நடத்தும் நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்களும் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை நடத்துவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவுப் பொலிஸாரது (சி.ஐ.டி.) ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தாக்குதல் நடைபெற்ற போது அதனை நேரில் பார்த்ததாக கூறப்படுவோரிடம் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்னர் அப்பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் வந்ததாகவும் அதிலிருந்தவர்களின் வயிற்றுப் பகுதி சந்தேகத்திற்கிடமாயிருந்ததாகவும் அதைப் பார்த்துவிட்டு அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே அதுபற்றி பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மறித்த போது அதில் ஒன்று அங்கு நிறுத்தப்படவே மற்ற மோட்டார் சைக்கிள் அப்பால் சென்ற சில செக்கன்களில் பாரிய குண்டுச் சத்தம் கேட்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷேட பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் பல்வேறு தரப்புகளிடமும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்க சதித்திட்டம் : ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் எஸ்.பி. கவலை

sbd.jpgஅரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்குவதற்கு சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஐ.தே.க. தலைவரோடு நெருக்கமாக இருந்து அரசாங்கத்துக்குத் துணை போகும் சிலர், நான் அரசாங்கத்துடன் இணையப் போவதாக பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க.தேசிய அமைப்பாளருமான எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். “நான் ஒரு போதும் ஐ.தே.க.வைவிட்டு வெளியேறப் போவதில்லை. நான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதை நிரூபித்தால் அரசியலிலிருந்து வெளியேறத் தயார்” என்றும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையிலுள்ள தனது வீட்டில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்திய போதே எஸ்.பி. திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : “மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றேன். ஆனால் ஐ.தே.கவின் எம். பிக்கள் சிலர் முன் வைத்த வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோடு நெருக்கமாக உள்ள சிலர் நான் அரசாங்கத்துடன் இணையப் போவதாகவும் அதற்காக ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பல மணிநேரம் உரையாடியதாகவும் ருக்மன் சேனாநாயக்கவும் இணையவுள்ளாரென்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.அத்தோடு ஐ.தே. கட்சியின் பத்திரிகையான ‘இறுதின’வில் அப்பட்டமான பொய்ச் செய்திகளையும் வெளியிடச் செய்துள்ளனர்.

அரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்கும் சதித் திட்டத்தின் நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டு வருகின்றன. மத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுற்றவுடன் ஜனாதிபதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவ்வளவு தான். இதன் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவ்வாறு தொடர்பு கொண்டதை ஆதாரங்களுடன் நிரூபித்தல் அரசியலை விட்டு வெளியேறுவேன். இவ்வாறான செயற்பாடுகள் எமது கட்சியை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாகும். அத்தோடு அரசாங்கத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு ஐ.தே.க. தலைவரோடு நெருங்கியிருப்பவர்களே இச்சதியை முன்னெடுக்கின்றனர். அமைச்சர் பதவியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் தூக்கியெறிந்து விட்டு ஐ.தே.க. வில் இணைந்தவன் நான். எனவே மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணையும் தேவை எனக்கில்லை. பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் நான் விலைபோக மாட்டேன்.

தேசிய பட்டியலில் எம்.பி. பதவியைப் பெறமாட்டேன். தேர்தலில் போட்டியிட்டே அப்பதவியை பெறுவேன். அத்தோடு தற்போதைக்கு எனது நோக்கம் மத்திய மாகாண மக்களுக்கு நான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றுவதே ஆகும்.” இவ்வாறு அவர் கூறினார்.

நட்டஈடு வழங்க உடனடி நடவடிக்கை- அமைச்சர் றிஷாட்

rizad_baduradeen-01.jpgஅக்குரஸ்ஸ – கொடப்பிட்டிய குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்காகவும் காயமடைந்தவர்களுக்கும் உரிய நட்ட ஈட்டினை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுத்தீன்; தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெற்று அவர்களுக்கு உடனடியாக நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, கொடப்பிட்டிய தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அமைச்சர் றிசாட் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மத விவகாரத்துடன் தொடர்புடைய வைபவத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலென்று தெரிவித்த அமைச்சர் எவர் இதனைச் செய்திருந்தாலும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் : விஜய்காந்த்

vijayakanth.jpgஉடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் மாதத்தில் சிங்களவர்களின் புத்தாண்டு வருகிறது. அதற்குள் தமிழர்களை அழித்து புத்தாண்டை வெற்றித் திருநாளாகக் கொண்டாட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசின் இனவெறிப்போக்கால் இனி தமிழர்கள் வாழ தனி நாடு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐ.நா., செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் மேற்பார்வையில் முகாம்கள் அமைக்க வேண்டும். போர்நிறுத்தம் ஏற்பட இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

புல்மோட்டையில் அமைக்கப்படும் வைத்தியசாலை உண்மையில் இந்திய இராணுவத்தின் முகாமாகும் – ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின்

jvp-rilvin.jpgவடக்கில் யுத்தத்தினால் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென்ற பெயரில் புல்மோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் வைத்தியசாலையானது உண்மையிலேயே இந்திய இராணுவத்தின் முகாமாகும் என்று ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் வெற்றிகளை காட்டிக் கொடுத்து இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வொன்றின் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இலங்கையில் புலிகள் மாத்திரம் பிரிவினைவாதிகள் அல்ல. வேறு சில ஆயுதம் ஏந்திய ஏந்தாத பிரிவினைவாத சக்திகளும் உள்ளன என்றும் அவர் கூறினார். ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று கோட்டை “”சோலிஸ்” ஹோட்டலில் நடைபெற்றபோது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரில்வின் சில்வா கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பாவோ உதவி செய்ய தேவையில்லை. எமது இராணுவத்தினரே இன்னும் ஒரு சில நாட்களில் இலங்கை பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியும் அதற்கு அப்பால் சென்றும் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சியானது மீண்டுமொருமுறை பிரிவினைவாதிகளுக்கு சட்டபூர்வமாக செயல்பட அனுமதி வழங்குவது போன்றதாகும். தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குமாறு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, திஸ்ஸ விதாரண, டிலான் பெரேரா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கோரி வருகின்றனர்.  தேர்தல் மேடைகளில் தேசப்பற்றுள்ளவர்கள் என்று கூறும் நபர்கள் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்ததும் நாட்டை காட்டிக் கொடுக்கும் சதித் திட்டங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

நிர்வாணப்படுத்தப்பட்ட மலைவாசிப் பெண் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

laxmi_.jpgஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த போராட்டத்தின்போது நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மலைவாசிப் பெண் ஒருவர் அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

லக்ஷ்மி ஒராயன் என்கிற அந்த பெண்மணி, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் இன்னமும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

2007 ஆம் ஆண்டு அஸ்ஸாமின் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது, உள்ளூர்வாசிகளால் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலைவாசிமக்களுக்கு கூடுதல் உரிமைகள் கோரி அந்த போராட்டம் நடத்தப்பட்டது.

“அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடையவே கிழக்கில் தமிழ்முஸ்லிம் உறவை சீர்குலைத்தனர்’

17f1ba5605a9cde0.jpgஅரசியல் வாதிகள் தங்கள் இலக்குகளை அடைவதற்கு சமூகங்களை முறுகவிட்டு தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைத்து வந்துள்ளனர் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான தூது மகாநாடு அக்கரைப்பற்று பஸ் நிலைய சதுக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது தலைமைவகித்து உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம் மகாநாட்டுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு உரையாற்றும் போது; கிழக்கு மாகாணாத்தில் நிரந்தர சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதன் மூலமே கிழக்கை கட்டியெழுப்ப முடியும்.

கிழக்கில் சிறார்கள் ஆயுதங்களை கண்டு அச்சமடைவதாகவும் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கல்வித்துறையில் கிழக்கு மாகாணம் 9 ஆவது இடத்திலுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 50 சதவீதத்தினரே உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயமும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயமும் இல்லாது போனால் இதையும் விட மோசமாக 42 சதவீதம் காணப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படும் நியமனங்கள் அனைத்தும் இன விகிதாசாரப்படி வழங்கப்படுகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐ.எம்.எவ். போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து நிதிகளும் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கல்வி, விளையாட்டு, மீன்பிடி, சுகாதாரம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம் மகாநாட்டில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீரதிசாநாயக்கா, மாகாணசபை உறுப்பினர்களான துல்கர்நயிம், அமீர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.தவம், தேசியகாங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் டாக்டர் உதுமா லெப்பை, தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சரின் ஊடகப்பேச்சாளர் ஆஸாத்மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.