2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த தெற்காசிய நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக விலகிச் சென்று விடக் கூடிய ஆபத்து இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.
பாகிஸ்தான், லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பாக அர்ஜுன ரணதுங்க இந்த கருத்தை வெளியிட்டார்.
“கிரிக்கெட் விளையாட்டு இன்று பிளவடைந்து காணப்படுகிறது. அத்துடன், நடவடிக்கைகளின் போது, எமது ஒத்துழைப்புகளும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிருந்து (தெற்காசியாவிலிருந்து) விலகிச் சென்று விடக் கூடும். எனவே இது விடயத்தில் நாம் மேலும் நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும். என்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபை முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.