அரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்குவதற்கு சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஐ.தே.க. தலைவரோடு நெருக்கமாக இருந்து அரசாங்கத்துக்குத் துணை போகும் சிலர், நான் அரசாங்கத்துடன் இணையப் போவதாக பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க.தேசிய அமைப்பாளருமான எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். “நான் ஒரு போதும் ஐ.தே.க.வைவிட்டு வெளியேறப் போவதில்லை. நான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதை நிரூபித்தால் அரசியலிலிருந்து வெளியேறத் தயார்” என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையிலுள்ள தனது வீட்டில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்திய போதே எஸ்.பி. திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : “மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றேன். ஆனால் ஐ.தே.கவின் எம். பிக்கள் சிலர் முன் வைத்த வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோடு நெருக்கமாக உள்ள சிலர் நான் அரசாங்கத்துடன் இணையப் போவதாகவும் அதற்காக ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பல மணிநேரம் உரையாடியதாகவும் ருக்மன் சேனாநாயக்கவும் இணையவுள்ளாரென்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.அத்தோடு ஐ.தே. கட்சியின் பத்திரிகையான ‘இறுதின’வில் அப்பட்டமான பொய்ச் செய்திகளையும் வெளியிடச் செய்துள்ளனர்.
அரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்கும் சதித் திட்டத்தின் நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டு வருகின்றன. மத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுற்றவுடன் ஜனாதிபதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவ்வளவு தான். இதன் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவ்வாறு தொடர்பு கொண்டதை ஆதாரங்களுடன் நிரூபித்தல் அரசியலை விட்டு வெளியேறுவேன். இவ்வாறான செயற்பாடுகள் எமது கட்சியை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாகும். அத்தோடு அரசாங்கத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு ஐ.தே.க. தலைவரோடு நெருங்கியிருப்பவர்களே இச்சதியை முன்னெடுக்கின்றனர். அமைச்சர் பதவியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் தூக்கியெறிந்து விட்டு ஐ.தே.க. வில் இணைந்தவன் நான். எனவே மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணையும் தேவை எனக்கில்லை. பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் நான் விலைபோக மாட்டேன்.
தேசிய பட்டியலில் எம்.பி. பதவியைப் பெறமாட்டேன். தேர்தலில் போட்டியிட்டே அப்பதவியை பெறுவேன். அத்தோடு தற்போதைக்கு எனது நோக்கம் மத்திய மாகாண மக்களுக்கு நான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றுவதே ஆகும்.” இவ்வாறு அவர் கூறினார்.