March

March

முல்லைத்தீவிலிருந்து வந்தவர்களில் இதுவரை 40 பேர் மரணம்

navy.jpgமுல்லைத் தீவிலிருந்து திருகோணமலைக்கு கடந்த ஒரு மாதத்தில் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டோரில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 11 தொடக்கம் மார்ச் 14 வரை முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்ட 3,635 பேரிலேயே மார்ச் 20 ஆம் திகதி எடுக்கப்பட்ட புள்ளிவிபரப்படி 40 பேர் உயிரிழந்தனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 31. 1735 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

திருமலை ஆஸ்பத்திரியில் 31 பேர் மரணமானார்கள்.

கண்டியில் 7 பேரும் கொழும்பில் 2 பேரும் உயிரிழந்தனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் தற்போது 431 பேர் தங்கியுள்ளனர்.

ஏனைய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு;

கண்டி115, கொழும்பு 63, மஹரகம 01, சிகிச்சை முடிந்து கொழும்பிலிருந்து 15 பேரும் கண்டியிலிருந்து 57 பேரும் மீண்டும் திருமலை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிவரப்பட்டனர். பொலநறுவை ஆஸ்பத்திரிக்கு 121 பேரும் கந்தளாய் ஆஸ்பத்திரிக்கு 80 பேரும் தம்பலகமம் ஆஸ்பத்திரிக்கு 75 பேரும் அனுப்பப்பட்டனர். 1893 பேர் வவுனியாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் நலன்புரி முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். மன்னார் ஆஸ்பத்திரிக்கும் 908 பேர் அனுப்பப்பட்டனர்.

கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு

ltte-sm.jpgபுதுக் குடியிருப்புக்கு கிழக்கே புலிகளால் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கடற்புலி முகாம் ஒன்றை கைப்பற்றியுள்ள பாதுகாப்புப் படையினர் அதிலிருந்து சிறிய ரக நீர்மூழ்கி உட்பட அதி நவீன உபகரணங்கள் பலவற்றையும் மீட்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. புதுக்குடியிருப்பில் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசங்களை முற்றாக விடுவிக்கும் நோக்கில் முன்னேறிவரும் இராணுவத்தின் படைப் பிரிவுகள் இதனை கைப்பற்றியுள்ளன.

ஒருவர் மாத்திரம் செல்லக் கூடிய வகையில் இச் சிறிய ரக நீர் மூழ்கி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தயாரிக்கப்பட்ட நிலையிலுள்ள படகுகள் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை, இரணைப் பாலை தென் பகுதியிலிருந்து அதி நவீன தொலைத் தொடர்பு கருவிகள், செய்மதி டிஸ் அன்டனாக்கள், தகவல் பரிமாற்ற கருவிகள் பலவற்றையும் படையினர் கண்டெடுத்துள்ளனர். சிறிய ரக நீர் மூழ்கியை வைக்கோல்களால் மறைத்த நிலையில் புலிகள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

அதேவேளை, பல முனைகள் ஊடாக முன்னேறிவரும் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. 

‘தமிழ் மக்களை கொன்றொழிப்பதை நிறுத்து!’ இன்று மாலை லண்டன் கொன்வே ஹோலில் கூட்டம் : Committe for a Workers International

cwi_grey.gifவட இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதைக் கண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்வுகள் கொந்தளித்த நிலையில் உள்ளனர். இன்னமும் 200000 வரையான மக்கள் யுத்தப் பிரதேசத்தில் சிக்குண்டு உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு ஒத்துழைக்க ராஜபக்ச அரசாங்கம் மறுக்கின்றது. 3000 பேர்வரை இந்த ஆண்டின் கடந்த சில வாரங்களில் கொல்லப்பட்டு உள்ளனர். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அமைதியாக்கப்பட்டு விட்டனர்.

தமிழர்களைக் கொன்றொழிப்பதை நிறுத்துவதற்கான போராட்டமும் ஜனநாயகத்திற்கும் தொழிற்சங்க உரிமைக்களுக்குமான போராட்டம் சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 15 குழுக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். இங்கு கோரிக்கைகளின் பட்டியல் தீர்மானிக்கப்பட்டது. செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. சர்வதேச இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

மார்ச் 30ல் பெரும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 8 சர்வதேச போராட்ட நாளாக தீர்மானிக்கப்பட்டு இந்திய அரசுக்கு எதிராகவும் கொலைகார ராஜபக்ச அரசுக்கு ஆதரவான நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

இந்தப் போராட்டத்தை லண்டனில் ஆரம்பித்து வைக்கின்ற கூட்டம் மார்ச் 21ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  விபரம் கீழே:

Saturday 21st March

at Conway hall, London at 6pm.

Nearest Tube Holborn

For more information please contact

Contact:
Senan : 07908050217
senann@hotmail.com.

வவுனியா முகாம்களில் தமிழ் மக்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர்- வினோ நோகராதலிங்கம் : வன்னி மக்களின் நலன்களை அரசு பேணவில்லை – கஜேந்திரன்

vinonodaralingam.bmpவவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் மக்கள் நிம்மதியாகவே வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினரின் விதவைகள், குழந்தைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முல்லைத்தீவில் தங்களது குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்ந்தாலும் முகாம்களுக்குள் தாம் அச்சமின்றி,  பயமின்றி, நிம்மதியாக வாழ்வதாக வவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம்களில் சிறு சிறு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும்  அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டப்படத்தக்கவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களைப் பிரதிநிதிப்படுத்தும் 22 தமிழ்த் தேசயக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் இருந்தபோதும்   புலிகள் மீதிருந்த அச்சம் காரணமாக இதுவரையில் அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாய் திறந்து பேசியதே இல்லை. புலிகள் இப்போது இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு வருவதனால் தமது சொந்தக் கருததுக்களை வெளியிட அவர்களுக்கு இப்போது ஜனநாயக உரிமை கிடைத்துள்ளதென்பதையே  வினோ எம்.பி.யின் உரை எடுத்துக் காட்டுகின்றது என  அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது . 

வன்னி மக்களின் நலன்களை அரசு பேணவில்லை : கஜேந்திரன்

kajendran.jpgவன்னியில் தங்கியுள்ள 329,000 திற்கும் அதிகமான தமிழ் மக்களது நிலை மனித அவலத்தின் உச்சத்தினை எட்டியுள்ளது. பசி பட்டினி ஒருபுறம் மக்களை வாட்டி எடுக்க மறுபுறத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினாலும் மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் நோயாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் தேவையான போசாக்கு உணவுகள் மற்றும் நோயாளர்கள் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் எதுவும் இல்லா நிலையில் பொது அமைப்புக்களினால் வழங்கப்படுகின்ற கஞ்சியை மட்டும் குடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகின்றது.

தினமும் மூன்று வேளையும் கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மக்களை இலக்குவைத்து ஸ்ரீலங்கா படைகள் தாக்குதல்களை நடாத்தி படுகொலை செய்யும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றது. அவ்வாறு இறப்பவர்களையும் தாண்டிச் சென்று கஞ்சியை வாங்கினால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலைதான் அங்கு காணப்படுகின்றது.

அவ்வாறு பல துன்பங்களை தாண்டிப் பெற்றுக் கொண்ட கஞ்சியை பசிக்கு உடனடியாக வயிறார குடிக்கவும் முடிவதில்லை. மாறாக அக்கஞ்சியை நீண்ட நேரம் வைத்திருந்து பசியினால் உடல் நடுக்கம் அடையும் பொழுதே அக்கஞ்சியை குடிக்கின்றனர். சிறுவர்களும் இவ்வாறுதான் செய்கின்றனர். ஏனெனில் அப்படியென்றால் தான் நீண்ட நாட்களுக்கு கஞ்சியை குடித்தாயினும் உயிர் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பினாலும் அவ்வாறு இறப்பதற்கு முன்னர் புலம் பெயர்ந்த மக்களின் முயற்சியினால் தமக்கு தேவையான உணவுகள் போதுமானளவு வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையினாலுமேயாகும்.

சிறுவர்கள் இயக்கத்தில் இணைக்கப்படுவது தொடர்பாக நீலிக் கண்ணீர் வடிக்கும் அமைப்புக்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள 60,000 ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களினதும் போசாக்குணவு பற்றி எவ்வித அக்கறையும் இன்றி இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.

சுத்தமான நீர் என்பது மிகப் பெரும் பிரச்சினையாகவே உள்ளது. குடிப்பது முதல் சமையல் உட்பட எந்தத் தேவைக்கும் தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தரப்பாள் கொட்டகைகளுக்குள் வாழும் மக்கள் வெப்பம் காரணமாக அதிக தாகம் ஏற்பட்டாலும் போதியளவு தண்ணீர் அருந்த முடிவதில்லை. இதனால் சிறுநீரகத்துடன் தொடர்புடய நோய்த் தொற்றுக்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பான கழிப்பறைகள் இன்மையாலும் கழிவுகள் அகற்றும் பொறிமுறைகள் இன்மையாலும் அதிகளவு மக்கள் தினமும் இறந்து கொண்டிருப்பதனாலும் பெரும் ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருகின்றது.

இந் நிலையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை பங்கிட்டு வழங்குவது, பொது மக்களுக்கு தேவையான குடிநீரை தூர இடங்களில் இருந்து கொண்டு வந்து வழங்குதல், மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் ஏற்படாதவாறு அவர்களது முகாம்களில் சுகாதார நிலைமைகளை ஓரளவுக்கேனும சிறப்பாகப் பேணுதல், தினமும் படையினரின் தாக்குதலில் காயமடையும் பொது மக்களை தற்காலிக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் நாளாந்தம் கொல்லப்படும் பொது மக்களது உடல்களை எடுத்து அடக்கம் செய்வது வரை தபுக பணியாளர்கள் மிகப் பெரும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏனைய சில உள்ளுர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தபுக பணியாளர்கள் தமது உயிரையும் துச்சமாக மதித்து செயற்பட்டும் வரும் நிலையில் அவர்கள் சந்தித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பாக இதுவரை எந்த ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களோ அல்லது ஐநா அமைப்புக்களோ கரிசனை கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது.

329,000 திற்கும் அதிகமான மக்கள் அகதி முகாம்களில் தங்கியுள்ள போதிலும் கூட அந்த மக்களின் சுகாதாரம் உட்பட எந்த ஒரு நலன்களையும் கவனிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு உரிய ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை என்பதுடன் ஐநா அமைப்புக்கள் கூட இன்று வரை அங்கு செல்லவில்லை. ஐநா சபையும் ஏனைய மனித உரிமை அமைப்புக்ளும் வெறும் ஆலோசளையும், வேண்டுதல்களையும், கவலைகளையும் உள்ளடக்கிய அறிக்கைகளை மட்டும் வெளியிட்ட வண்ணம் உள்ளன.

நடை முறையில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மட்டுமல்ல மனித அவலங்களும்; அதிகரித்தபடியே உள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை இலக்குவைத்து அதன் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 3200ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 7450 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

பொது மக்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுகளின் போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் கொத்துக் குண்டுகளும் பல நூறு கிலொ எடையுள்ள குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்லையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தமது படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு பொய் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. வன்னியிலுள்ள ஒரே ஒரு தற்காலிக வைத்தியசாலையின் களஞ்சியப் பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல் நடாத்திவரும் ஸ்ரீலங்கா படைகள் வைத்தியர்களையும் படுகொலை செய்வதற்கு முயற்சிக்கின்றது. அந்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பாத காரணத்தினால் அதுவும் மூடப்பட்டுள்ளது.

இந் நிலை நீடிக்குமாக இருந்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். இது விடயத்தில் தொடர்ந்தும் அறிக்கைகளோடு மட்டும் தங்கியிருக்காது சர்வதேச சமூகம் உரிய அழுத்தங்களைப் பிரயோகித்து,

உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கும்,

மருந்துப் பொருட்கள் அனுப்பப்படுவதற்கும் வைத்தியசாலை மீண்டும் திறக்கப்படுவதற்கும்,

இடம் பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவும்,

உணவு மற்றும் உணவு, உடை உட்பட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக தேவையான அளவில் அனுப்பி வைப்பதற்கும்,

இடம் பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகள் மற்றும் மரங்கள்; மற்றும் தேவையான தற்காலிக கழிப்பறைகள் என்பவற்றை அனுப்பி வைப்பதற்கும், சமையல் பாத்திரங்களை அனுப்பி வைப்பதற்கும்,

சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் உடனடியாக அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அவசரமாக வேண்டுகின்றோம்.

செல்வராசா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்
 

ருபெல்லா தடுப்பூசித் தாக்கம் – 26 மாணவிகள் வைத்தியசாலையில்: ஒருவர் மரணம். காரணத்தை கண்டறிய உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அழைப்பு -ஏகாந்தி

vaccina.jpgஇலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் ருபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்டதில் சுகவீனமுற்ற பள்ளிக்கூட மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 26 மாணவிகள் மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரி மாணவிகளுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை நேற்றைய முன் தினம் இடம்பெற்றது. இதன் பின்னர் தடுப்பூசி போடப்பட்ட கல்லூரி மாணவிகள் சுமார் 27 பேர் நோய்வாய்ப்பட்டு மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்ளுள் 12 வயது பஷாலா ஹன்சலா என்ற மாணவி நேற்று இறந்துவிட்டார்.

கடந்த 1996 ஆண்டிலிருந்து இந்த ருபெல்லா தொற்று நோய்க்கிருமிக்கான தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ஆனாலும் இப்போதுதான் இந்த துரதிஷ்டமான சம்பவம் முதன்முறையாக இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் விளக்கம்

nimal.jpgமாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ருபெல்லா தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு உண்மை நிலையைக் கண்டறிவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம். பி. அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; மேற்படி சம்பவம் தொடர்பாக ஆராய நான்கு விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றை மாத்தறைக்கு அனுப்பியுள்ளதுடன் இப் பாதிப்பின் விஞ்ஞான ரீதியான பின்னணியைக் கண்டறிந்து தமக்கு துரித கதியில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை ருபெல்லா தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் நோய் வாய்ப்பட்டிருப்பதுடன் ஒருவர் உயிரிழந்திருப்பது குறித்து தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தைக் கேட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் இடம் பெற்றுள்ள மேற்படி சம்பவம் தொடர்பாக சபையில் கேள்வியெழுப்பிய அநுர குமார திசாநாயக்க எம். பி; மேற்படி சம்பவத்தில் மாணவியொருவர் பலியாகியுள்ளதுடன் 26 ற்கு மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  ருபெல்லா தடுப்பூசித் திட்டம் சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தேசியத் திட்டமாகும். துரதிர்ஷ்டவசமாகவே நேற்று முன்தினம் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது விடயத்தில் சுகாதார அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனினும் இது விடயத்தில் பெற்றோர் பயப்படுமளவிற்கு தேவையற்ற சந்தேகங்களை எழுப்புவது முறையல்ல எனவும் தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க எம். பி. தமது கேள்வியின் போது; காலாவதி திகதியை அண்மித்த ஊசி மருந்துகளை உபயோகித்து அதனை முடிக்கும் நோக்கில் இச் செயற்பாடு இடம் பெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர்,  அவ்வாறு எதுவும் இடம் பெறவில்லையெனவும் ருபெல்லா தடுப்பூசித் திட்டம் தொடர்ச்சியாக முறையாக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் எனவும் கூறினார்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை திங்களன்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சருக்கு கையளிப்போம் என்று மாத்தறைக்குச் சென்றுள்ள மருத்துவ குழுத் தலைவரான டாக்டர் பீரிஸ் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் விளக்கம்

susil-premaja.jpgருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ருபெல்லா ஊசி மருந்து மூலமான பாதிப்புகள் பற்றிய சர்ச்சை இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் கல்வியமைச்சர் என்ற வகையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதற்கு விளக்கமளித்தார். அமைச்சர் இதன் போது மேலும் தெரிவிக்கையில், ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் ஒரு தேசிய திட்டமாகும். இது மாகாண மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் மருத்துவ சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.

மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து அத் திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன்,  இது பற்றிய பரிசோதனைகளும், விசாரணைகளும் இடம் பெற்று வருகின்றன. அதேவேளை, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக நேற்றுக் காலை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தொலைபேசி மூலம் எனக்கு விபரித்தார். இது விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கலை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

mahinda-rajapaksha.jpgருபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) தடுப்பு மருந்து வழங்கலை உடனடியாக இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நேற்று பணிப்புரை விடுத்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கப்பட்ட மாணவியொருவர் உயிரிழந்திருப்பதுடன் 26 பேர் பாதிக்கப்பட்டு மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி பணிப்புரையை சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கினார். இதேநேரம் ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமையானதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இத்தடுப்பு மருந்து தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் இச்சம்பவம் தொடர்பாக விரிவான அடிப்படையில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரையும், அதிகாரிகளையும் கேட்டிருக்கிறார்.

இதேநேரம், பாடசாலைகளில் மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கும் விதம் தொடர்பாக சுகாதார அமைச்சுடன் இணைந்து விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்துக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் மாணவியின் இறுதிக்கிரியை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், இறுதிக்கிரியைக்கு முன்னர் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேல் மாகாணத்தில் வட – கிழக்கை சேர்ந்தவர்களுக்கு இன்றும் நாளையும் மீண்டும் பொலிஸ் பதிவு

ranjeth-gunasekara.jpgகொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வடக்குஇ கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைவரும் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பொலிஸ் பதிவிற்குட்படுத்தப் படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கடந்த 5 வருடங்களுக்குள் மேல் மாகாணத்திற்கு வந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களே இவ்வாறு இரு தினங்களிலும் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த வருடம், வடக்கு பின்னர் கிழக்கு என இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மேல்மாகாணத்தின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தனித்தனியாக பொலிஸ் பதிவுக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன்இஅதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு என இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மீண்டும் ஒன்றாக பதிவுக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே இன்றும், நாளையும் மீண்டும் பொலிஸ் பதிவு நடைபெறவிருக்கிறது. இவ்விரு தினங்களிலும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இந்த பொலிஸ் பதிவின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேல் மாகாணத்திற்கு புதிதாக வந்து தங்கியிருப்பவர்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்களுடன் வந்து பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், ஏற்கனவே பதிவுக்குட்படுத்தப்பட்டவர்களுக்கும் மீள தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டுமென்றும் ரஞ்சித் குணசேகர கூறினார்.

இதேநேரம், ஏற்கனவே மேல் மாகாணத்தில் பொலிஸாரால் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களிலேயே இம் முறையும் பதிவுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ வீரச்சாவு

sri_.jpgதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.  கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார் என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.  .

இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக  செய்து வந்தார். சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார் என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

தகவல் நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்தினால் வீண்செலவை தவிர்த்து, கூடிய பயனைபெற முடியும் – ஜனாதிபதி

upfa-website.jpgதேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்றாலும் இதற்காக அதிக பணத்தை செலவு செய்து வீண்விரயம் செய்யமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்களுக்காக பாரிய பதாகைகள் சுவரொட்டிகள் என்பவற்றிற்கான நிதியை செலவு செய்வதைத் தவிர்த்து இணையத்தளம் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத் துவதன் மூலம் கூட்டங்களை கூட்டி ஏற்படும் பாரிய அனர்த்தங்கள், ஆபத்துக்களி லிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் www.Sandanaya.lk  என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் நேற்றுக்காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அலரி மாளிகையிலிருந்து இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி செய்மதி ஊடாக பி.எம்.ஐ.சி. எச்சில் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டோர் மத்தியில் உரையாற்றினார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

இந்த வருடம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலமொழி விருத்திக்கான ஆண்டு என நான் அறிவித்திருந்தேன். அதன் ஒரு கட்டமாகவே இந்த இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உலகிலுள்ள எத்தனையோ நாடுகளும் அதன் தலைவர்களும் தமது சகல தேர்தல் பிரசாரங்களையும் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தியே முன்னெடுக்கின்றனர். இதன் ஒரு அடிப்படையாகவே எமது கட்சியின் பிரசார நடவடிக்கைகளையும் இணை யத்தளம் ஊடாக முன்னெடுக்க தீர்மானித்தோம்.

வடக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னெ டுத்துவரும் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளோம். புலிகளுக்கு எதிராக படையினர் முன்னேறிவரும் அதேசமயம் அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர். புலிகள் அத்துடன் நின்று விடாமல் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களை இலக்கு வைத்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும். எமது பாதுகாப்பு அமைச்சும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலமே தமது நடவடிக்கையில் வெற்றிகளைக் கண்டுள்ளனர்.

இலங்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கான உலகத்தின் மிகவும் முன்னணி ஊடகமாக எமது பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் விளங்குகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மூலம் தகவல்களை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மார்ச் 25இல் விஷேட பாராளுமன்ற அமர்வு

parliament.jpgநிதி தொடர்பான 5 சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி ஒருநாள் விஷேட பாராளுமன்றக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம்.லொக்குபண்டார தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய நிதியாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாவதால் அதற்கு முன்னதாக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிதிச் சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டி இருப்பதாக இதன்போது அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி இந்த 5 நிதிச் சட்டமூலங்களையும் ஒரே தினத்தில் விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதேநேரம், அன்றைய தினம் இந்த நிதிச் சட்டங்கள் மீதான விவாதம் பிற்பகல் ஒரு மணியுடன் முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் மாலை 4 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக ஜே.வி.பி.யின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

வாக்குச்சாவடியில் வாக்கெண்ணுதல் ரத்து: தேர்தல் ஆணையரின் முடிவுக்கு கட்சித் தலைவர்கள் வரவேற்பு

election_ballots.jpgமேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குச்சாவடிகளிலேயே எண்ணுவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தைக் கைவிடுவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்திருக்கும் முடிவை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா நேற்று சந்திப்பொன்றை நடாத்தினார்.

இச்சந்திப்பின்போது மேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குசாவடிகளில் எண்ணுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் காலநிலையை கருத்திற்கொண்டுதான் இத்தீர்மானத்தை கைவிடுவதற்கு முடிவு செய்ததாக தேர்தல் ஆணையாளர் கூறினார். ஆகவே வழமைபோன்று வாக்குகளை எண்ணும் நிலையங்களிலேயே மேல் மாகாண சபைத் தேர்தலிலும் அளிக்கப்படும் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து இச்சந்திப்பில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றனர். இராஜகிரியிலுள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பெப்ரல் மற்றும் சி.எம். ஈ. வி. தேர்தல் கண்காணிப்பு நிலையங்களின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.