கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வடக்குஇ கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைவரும் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பொலிஸ் பதிவிற்குட்படுத்தப் படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கடந்த 5 வருடங்களுக்குள் மேல் மாகாணத்திற்கு வந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களே இவ்வாறு இரு தினங்களிலும் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த வருடம், வடக்கு பின்னர் கிழக்கு என இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மேல்மாகாணத்தின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தனித்தனியாக பொலிஸ் பதிவுக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன்இஅதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு என இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மீண்டும் ஒன்றாக பதிவுக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே இன்றும், நாளையும் மீண்டும் பொலிஸ் பதிவு நடைபெறவிருக்கிறது. இவ்விரு தினங்களிலும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இந்த பொலிஸ் பதிவின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேல் மாகாணத்திற்கு புதிதாக வந்து தங்கியிருப்பவர்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்களுடன் வந்து பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், ஏற்கனவே பதிவுக்குட்படுத்தப்பட்டவர்களுக்கும் மீள தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டுமென்றும் ரஞ்சித் குணசேகர கூறினார்.
இதேநேரம், ஏற்கனவே மேல் மாகாணத்தில் பொலிஸாரால் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களிலேயே இம் முறையும் பதிவுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.