மேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குச்சாவடிகளிலேயே எண்ணுவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தைக் கைவிடுவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்திருக்கும் முடிவை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா நேற்று சந்திப்பொன்றை நடாத்தினார்.
இச்சந்திப்பின்போது மேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குசாவடிகளில் எண்ணுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் காலநிலையை கருத்திற்கொண்டுதான் இத்தீர்மானத்தை கைவிடுவதற்கு முடிவு செய்ததாக தேர்தல் ஆணையாளர் கூறினார். ஆகவே வழமைபோன்று வாக்குகளை எண்ணும் நிலையங்களிலேயே மேல் மாகாண சபைத் தேர்தலிலும் அளிக்கப்படும் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து இச்சந்திப்பில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றனர். இராஜகிரியிலுள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பெப்ரல் மற்றும் சி.எம். ஈ. வி. தேர்தல் கண்காணிப்பு நிலையங்களின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.