நிதி தொடர்பான 5 சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி ஒருநாள் விஷேட பாராளுமன்றக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம்.லொக்குபண்டார தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய நிதியாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாவதால் அதற்கு முன்னதாக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிதிச் சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டி இருப்பதாக இதன்போது அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி இந்த 5 நிதிச் சட்டமூலங்களையும் ஒரே தினத்தில் விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதேநேரம், அன்றைய தினம் இந்த நிதிச் சட்டங்கள் மீதான விவாதம் பிற்பகல் ஒரு மணியுடன் முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் மாலை 4 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக ஜே.வி.பி.யின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது