தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்றாலும் இதற்காக அதிக பணத்தை செலவு செய்து வீண்விரயம் செய்யமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்களுக்காக பாரிய பதாகைகள் சுவரொட்டிகள் என்பவற்றிற்கான நிதியை செலவு செய்வதைத் தவிர்த்து இணையத்தளம் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத் துவதன் மூலம் கூட்டங்களை கூட்டி ஏற்படும் பாரிய அனர்த்தங்கள், ஆபத்துக்களி லிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் www.Sandanaya.lk என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் நேற்றுக்காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அலரி மாளிகையிலிருந்து இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி செய்மதி ஊடாக பி.எம்.ஐ.சி. எச்சில் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டோர் மத்தியில் உரையாற்றினார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்:-
இந்த வருடம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலமொழி விருத்திக்கான ஆண்டு என நான் அறிவித்திருந்தேன். அதன் ஒரு கட்டமாகவே இந்த இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலகிலுள்ள எத்தனையோ நாடுகளும் அதன் தலைவர்களும் தமது சகல தேர்தல் பிரசாரங்களையும் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தியே முன்னெடுக்கின்றனர். இதன் ஒரு அடிப்படையாகவே எமது கட்சியின் பிரசார நடவடிக்கைகளையும் இணை யத்தளம் ஊடாக முன்னெடுக்க தீர்மானித்தோம்.
வடக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னெ டுத்துவரும் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளோம். புலிகளுக்கு எதிராக படையினர் முன்னேறிவரும் அதேசமயம் அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர். புலிகள் அத்துடன் நின்று விடாமல் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களை இலக்கு வைத்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும். எமது பாதுகாப்பு அமைச்சும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலமே தமது நடவடிக்கையில் வெற்றிகளைக் கண்டுள்ளனர்.
இலங்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கான உலகத்தின் மிகவும் முன்னணி ஊடகமாக எமது பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் விளங்குகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மூலம் தகவல்களை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.