தமிழ்ப் பேசும் மக்களின் மிகுந்த அபிமானத்துக்குரிய தேசிய நாளிதழான வீரகேசரி தனது 79 ஆண்டு கால ஊடக சேவையைப் பூர்த்திசெய்து இன்று 80 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. இது உலகெங்கும் பரந்து வாழும் ‘கேசரி’ அபிமானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி-இதே நாளில் ஆரம்பிக்கப்பட்டது தான் வீரகேசரி நாளிதழ். ஊடகத்துறையில் மிகவும் ஆர்வம் பெற்று விளங்கிய தென்னிந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியச் செட்டியார் இதனை ஆரம்பித்து வைத்தார்.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலவிய பல்வேறு கஷ்டங்கள், நெருக்கடிகள் என்பவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் சமுதாயத்தில் நிலவும் சீர்கேடுகளைக் களைந்து சீரியதோர் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற தீர்க்கத்தரிசனத்துடனும் ஆரம்பிக்கப்பட்டதே வீரகேசரி நாளிதழாகும்.
மக்களுக்கு உண்மையான தகவல்களை நடுநிலை தவறாது கொடுக்க வேண்டும். சமுதாயத்தின் நீதி, நியாயங்களுக்காகப் போராட வேண்டும், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் சமூகங்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட தன்னாலான பங்களிப்பை ஆற்ற வேண்டும், அதேவேளை பத்திரிகை தர்மத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிநாதமாகக் கொண்டு உருவான வீரகேசரி இன்றும் அதன் பணியை சிரமேற்கொண்டு முன்னெடுத்து வருகிறது.