நீண்ட தரைப்பாதையின்
சிதைவுற்ற கரைகள் எங்கும்
பாதி எரிந்த மரங்கள்
முகங்களை திருப்பிக் கொள்ளும்.
முட்கம்பி வேலிகளுக்கப்பால்
சோர்வுற்ற மலர்கள்
வெற்றுப் பார்வையை வீசும்.
படிந்து போயுள்ள புழுதி போல்
பட்ட அவமானங்கள்
சொல்லவும் கேட்கவும்
ஆளற்று மௌனிக்கும்;.
மழையிற் கரைந்ததாயினும்
அவர் கண்ணீர்
தனியே உறைந்து கிடக்கிறது
சிந்திய குருதியோ
அடையாளம் காட்ட விரும்பாது
இன்னும் ஆழமாய்
தன்னை புதைத்து கொண்டுளது.
தூக்கிய கைகள்
காற்றில் சோர்ந்து விழ
தீ கக்கும் துப்பாக்கிகளே
அவர்களுடன் பேசின.
சுவடின்றி அள்ளப்பட்ட
சாம்பலின்
தப்பியொட்டிய துகள்கள்
என்னை விட்டு
போகாதே என்கின்றன.
எத்தனை தடவைதான்
குழந்தை
செத்த தாயிடம் பால் அருந்தும்?
வெள்ளரசங் கிளையை
எம்மால்
நிமிர்ந்து பார்க்க முடியவில்லை!
Anonymous
இன்னமும் கனவுகளும்
கணணிச் செய்திகளும்..
நான் கவிதை படித்தபடி
கண் காணா தேசத்தில்.
நண்பா!
எழுதுங்கள்.
viji
Anonymous,
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்
ஏதாவது ஒரு கொடியை
கைகளில் திணிக்கிறார்கள்
பிடிக்கவில்லை என சொல்ல முடியவில்லை.
கை சூப்பும் குழந்தையில் இருந்து
கண் தெரியா, காது கேளா தாத்தாவரை
அடைத்து வைத்து விட்டு
அவசரமாய்
யாழ்ப்பாணம் வந்த
வெள்ளரசங் கிளையை
எம்மால் விழுங்க முடியவிலலை
என்பதெல்லாம்
கணனி வழி வந்து சேரமுடியுமா?