December

December

வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !

வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு  திறந்துவைப்பு – Northern Provincial Council, Sri Lankaநடப்பு வருடத்தில் மட்டும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால் இவ்வருடம் 54 இருதய நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 46 நோயாளிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகும். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 3,329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து அப்பிரிவு இயங்கி வருகின்றது.

இவ் இருதய சிகிச்சை பிரிவானது ஆய்வு கூடம் (Cath Lab), கார்டியோ டோராசிக் ஆய்வுகூடம் (Cardio-thoracic theatre), இருதய அவசர சிகிச்சைப் பிரிவு (Cardiac ICU), எக்கோ கார்டியோகிராபி (Echo Cardiography), உடற்பயிற்சி ECG, நடமாடும் இரத்த அழுத்த கண்காணிப்பு பிரிவு (Ambulatory BP Monitoring), நடமாடும் ECG கண்காணிப்பு பிரிவு (Ambulatory ECG monitoring) போன்ற நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இப்பிரிவு பல குறைபாடுகளுடன் ஒழுங்காக இயங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஒரேயொரு இருதய நோயியல் நிபுணருடன் இயங்கும் இப்பிரிவில் போதிய பயிற்சி பெற்ற வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அதனைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை. இதேமாதிரியானவொரு நிலமையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் காணப்படுகிறது. இதனால் இருதய நோய் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

வடமாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கு என 430 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பாதி நிதிக்கு கட்டிடமும், பாதி நிதிக்கு உபகரணங்களும் என தீர்மானிக்கப்பட்டு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. உபகரணக் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அன்றைய மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினாலும் அன்றைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரனாலும் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

பல கோடி ரூபா செலவில் விபத்து அறுவை சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டும், இறுதியில் ஜெனரேற்ரர் வசதியில்லாததால்,  சிகிச்சைகள் நடைபெறாது வருடக்கணக்காக பூட்டிக் கிடக்கிறது.  சாவகச்சேரியிலும் விபத்திற்குள்ளாகி வரும் நோயாளிகள் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தென்னாசியர்கள் இருதய நோயினால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் ஒப்பீட்டளவில் அதிகம். இந்தச் சூழலில் வவுனியா பொது வைத்தியசாலையில் பல கோடி ரூபா செலவில் இருதய நோய் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டாலும் இருதய நோயைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றதத்துக்கு தெரிவாகியுள்ள கால்நடை வைத்தியர் திலகநாதன், தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவாகியுள்ள சத்தியலிங்கம் ஆகிய இருவரும்  வைத்தியத்துறையை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களோடு யாழில் இருந்து என்பிபி சார்பில் பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் சிறிபவானந்தராஜா, சுயேட்சையாக பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும் இணைந்து, வவுனியா பொது வைத்தியசாலையின் இருதயநோய் பிரிவை முறைப்படி இயங்க வைப்பதற்கான அழுத்தத்தை சுகாதார அமைச்சுக்கு வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் பரோபகாரிகளை தொடர்பு கொண்டு சுகாதார அமைச்சின் அனுவரணையோடு அதனை வாங்குவதற்கு வழியேற்படுத்த வேண்டும்.

可能是 4 個人、講臺和文字的圖像

அரச அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற செயற்திட்டங்களாலும் மற்றும் வினைத்திறனற்ற செயல்களாலும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. அவ்வாறான பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளை சட்டத்தின் முன்நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி தண்டனைகள் வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும். அது தான் அநியாமாக பலியாகிக்கிக் கொண்டிருக்கின்ற உயிர்களுக்கு நிவாரணமாகவும் ஏனையவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” துன்பத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்போம் – ஜனாதிபதி அனுரா நத்தார் வாழ்த்து

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” துன்பத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்போம் – ஜனாதிபதி அனுரா நத்தார் வாழ்த்து

“துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகில் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை” என தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி, “இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன், மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

“நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தம், ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானத்தை மனதில் கொண்டு எதிர்வரும் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாகவும் அர்த்தமுடனும் களிப்போம்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர்,  “உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரியும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்கள், இந்த பண்டிகை காலத்தை தங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவிட முடியாதவர்களையும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். இது போன்ற வேளையில், உலகம் முழுவதும் பல்வேறு மோதல்கள் மற்றும் பேரழிவுகளுக்கு மத்தியில் சிறு குழந்தைகள் கூட இறக்கும் போது, அமைதியின் நம்பிக்கையின் ஏக்கங்கள் இன்னும் நம் இதயங்களில் உள்ளது. ஒரு குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை கிறிஸ்துமஸ் நமக்கு நினைவூட்டுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நத்தார் தினத்தை ஏழைகளுடன் கழிப்பதற்கும் ஏழைகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு வாழக் கற்றுக்கொள்வதற்கும் நாம் தெரிவுசெய்ய வேண்டும்” என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “அதிகாரமும் செல்வமும் கடவுளின் பார்வையில் மதிப்பற்றவை. கடவுளின் செய்தியின்படி, அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் மிகவும் ஏழ்மையான சூழலில் பிறக்க முடிவு செய்தார். சமுதாயம் ஒரு வரம் என்று நினைக்க பழகிக் கொள்ள வேண்டும். மனித வரலாறு முழுவதும் செல்வம் மற்றும் அதிகார பேராசையால் பலரின் வாழ்க்கை ஆதரவற்றதாகிவிட்டது என்பதை மறந்துவிடாதீர்கள் என்பதை நான் உங்களுக்கு குறிப்பிட வேண்டும்” என அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு நான்கு பெண் கைதிகள் உட்பட 389 கைதிகள் நாடுபூராவும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகமே இந்தக்  கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடினாலும் யேசுநாதர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் பெத்தலகாமில் கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் கிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இல்லை. சகோதரர்களான தங்கள் இனத்தைச் சார்ந்த பாலஸ்தீனியர்கள் காஸாவில் கொல்லப்படுகின்ற போது தாங்கள் எவ்வாறு இந்தக் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை செய்வது என அங்குள்ள கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். உலகம் யேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறது. அந்த யேசு பிறந்த மண்ணில் இஸ்ரேல் தினம் தினம் குழந்தைகளைப் பெண்களைப் படுகொலை செய்கின்றது.

யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்?

யாழ் மருத்துவ தொண்டர் பணியாளர்கள் அமைச்சரை 2ம் தடவை சந்தித்தது ஏன்? முதல் வழங்கப்பட்ட உறுதிமொழி மீண்டும் வழங்கப்பட்டது?
தம்பி தம்பிராஜா V ஊசி அர்ச்சுனா

தொடரும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ! இலங்கை – இந்திய கூட்டு ரோந்து சற்லைற்கள்…?

தொடரும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ! இலங்கை – இந்திய கூட்டு ரோந்து சற்லைற்கள்…?

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடல்த்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடரும் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்த இந்திய – இலங்கைக் கடற்படையினரின் கூட்டு ரோந்து பற்றி இருநாட்டு அரசுகளும் சிந்திக்க வேண்டும் என சில மீனவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். சற்லைற்களைப் பயன்படுத்தி தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர் அம்மீனவர்கள்.

இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கறுப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மோடியை சந்தித்திருந்த போது மீனவர் பிரச்சினை முக்கிய பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருந்து ரோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களால், இலங்கையின் வடக்கு கடல்வளம் சீரழிந்து வருவதுடன் மீன்வளமும் மீனின் இனப்பெருக்க வட்டமும் சிதைந்து வருவதாக சூழலியலாளர்களும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிகரிக்கும் மதுபான சாலைகள் – கிளி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்! ஜனாதிபதிக்கு பறந்தது மகஜர் !!

அதிகரிக்கும் மதுபான சாலைகள் – கிளி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்! ஜனாதிபதிக்கு பறந்தது மகஜர் !!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகிய இந்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. பேரணியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு. முரளிதரனிடம் மத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.

ஏற்கனவே கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மதுபான சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தள்ளமையானது குடும்ப வன்முறைகள், தொடங்கி வாள்வெட்டு பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டிருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிகள் சமூக பிறழ்வுகளை மீள தூண்டியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மக்களின் நம்பிக்கையை வென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான கடைகள் பற்றியோ அதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் பற்றியோ இதுவரை வாய்திறந்தது கிடையாது. “கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும்” எனக் கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் பாடசாலைகள் அமைந்துள்ள சுற்றுவட்டத்திற்குள் மதுபான சாலைகள் எவையுமே அமைக்கப்பபடக்கூடாது என வலியுறுத்தப்படுகின்றது. இருந்த போதிலும் கூட கிளிநொச்சியின் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் காணப்படும் நகரப்பகுதிக்குள் 07 வரையான மதுபான கடைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றுள் வீரா எனப்படும் பெயர் கொண்ட மதுபானசாலைக்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தவர் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலோன் மஸ்கின் இலங்கை முதலீடு ? அமெரிக்காவின் ஜனாதிபதி எலோன் மாஸ்கா? ‘இல்லவே இல்லை’ டொனால் ட்ரம்!

எலோன் மஸ்கின் இலங்கை முதலீடு ? அமெரிக்காவின் ஜனாதிபதி எலோன் மாஸ்கா? ‘இல்லவே இல்லை’ டொனால் ட்ரம்!

 

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால் ட்ரம் பதவியேற்கு முன்னரே அவரது ஆலோசகரகா வரவுள்ள உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மாஸ்க் சிக்கல்களை உருவாக்கி வருகின்றார். எலோன் மஸ்கின் கருத்துக்கள் நடவடிக்கைகள் அவர் அமெரிக்க ஜனாதிபதி என்ற பாங்கில் கருத்துக்களை முன்வைப்பதாக உள்ளது. அதனாலேயே அக்கேள்வி முன்வைக்கப்பட்டது. அதனை இல்லவே இல்லை என டொனால் ட்ரம் மறுத்திருந்தார்.

இதற்கிடையே எலோன் மாஸ்க் தனது Starlink செய்மதி இணைய சேவையை இலங்கையில் இயக்குவதற்கான உரிமைத்தைப் பெற்றிருந்தார். இதன்படி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் இத்திட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கான சட்டத்தையும் பாராளுமன்றம் செய்துள்ளது. இருப்பின் இச்சேவைகளை வழங்குவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய எலோன் மாஸ்க்கின் நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆளும் என்பிபி அரசாங்கம் எலோன் மஸ்க் விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தென்னாபிரிக்காவில் பிறந்த கனேடியரான எலோன் மாஸ்க் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி, அமெரிக்காவில் பிறக்காத எவரும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என்றார் டொனால் ட்ரம். ஜனவரியில் பதவியேற்கவுள்ள டொனால்ட் ரம்ப்பிடம், எலோன் மாஸ்க் என்றாவதொரு நாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாவாரா? என்று கேட்ட போது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

உலகத்தின் இரண்டாவது தொழில்நுட்ப கோடீஸ்வரரான எலோன் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். எலோன் மஸ்க்கின் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் போய்ச் சேராத நாடுகளே இல்லை எனலாம். மேம்படுத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இவரது முயற்சியால் பல புதுமையான கண்டுபிடிக்களை இவர் தலைமையிலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆளில்லா ரக்சி, கண் பார்வையற்றவர்களுக்கான பார்வை வழங்கும் கருவி, தானியங்கி ரெஸ்லா கார்கள் எனப் பல கண்டுபிடிப்புக்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற டொனால்ட் ரம்ப்பின் வலதுகரமே எலோன் மஸ்க். ரம்பின் ஆலோசகராக செயற்படும் எலோன் மஸ்க் குடியரசுக்கட்சி மீது கொண்டுள்ள செல்வாக்கை பார்த்து மஸ்க்கை ‘ஜனாதிபதி மஸ்க்’ என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் விமர்ச்சிக்கின்றனர்.

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!
வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதற்கு கடிதம் கொடுக்கும், காரணம் கண்டுபிடிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தமிழக முகாம்களில் அடிப்படை வசதிகள் உரிமைகள் இல்லாமல் வாழ்ந்துவரும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரும் விடயம் தொடர்பில் மௌனமாகவே உள்ளனர். மாறாக இந்தியாவில் தொடர்ந்து தங்கியுள்ளவர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி வடமாகாண ஆளுநர் வேதநாயகன் யுஎன்எச்சிஆர் ருNர்ஊசு ரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேவதநாயகன் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் தலைவரான சஞ்சித்த சத்தியமூர்த்தியோடு டிசம்பர் 22 இல் கலந்துரையாடினார்.
தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும் முகாம்களிற்கு வெளியேயும் 3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கிறார்கள். 1992 ஆம் ஆண்டளவிலேயே பெருந்தொகையானவர்கள் யுத்தத்திலிருந்து தம்மை காப்பாற்றும் பொருட்டு தமிழகத்திற்கு அகதியாக சென்றனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நாடு திரும்பியுள்ளனர். தமிழக அகதி முகாம்களில் இரண்டு தலைமுறையாக வாழும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் இலங்கை திரும்ப விரும்பவில்லை. இவர்களின் பிள்ளைகள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிவதோடு அங்கேயே திருமணம் முடித்து அங்கேயே அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டார்கள்.
அவ்வாறே மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர். மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்களின் இரண்டாவது தலைமுறையினரும் தங்களுடைய வாழ்க்கையை தங்கள் பெற்றோர் அகதியாக வந்த நாடுகளிலேயே அமைத்துக் கொண்டுவிட்டார்கள். அத்துடன் அவர்கள் வாழும் நாடுகளின் குடியுரிமையும் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. அவர்களும் பெரும்பாலும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை.
மாறாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை. தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் நீண்டகாலமாக தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்படி கோருகின்றனர். அவர்களும் கூட இந்தியப் பொருளாதாரத்திற்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர்.
எவ்வாறெனினும் சுயவிருப்பின் பேரில் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களை அழைத்து வருவதற்கான திட்டங்களை ஆலோசிப்பதும் அவசியமானதேயாகும். மேலும் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு இலங்கையில் நிரந்தர வாழ்விடமோ, தொழிலோ இல்லாமையால் அவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்ப விரும்பவில்லை.
ஒரு வேளை தமிழகத்திலிருந்து அவர்கள் அழைத்து வரப்படும் பட்சத்தில் இலங்கையில் அவர்களுக்கான மறுவாழ்த்திட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதத்தை வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான அமைப்பானது உலகெங்கிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்கள் தமது சுயவிருப்புடன் சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்து கொடுக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான
அமைப்பானது 100 மேற்பட்ட நாடுகளில் தனது அலுவலகத்தை கொண்டுள்ளது. சொந்த நாட்டிற்கு சுய விருப்புடன் மீள் திரும்பல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு திட்டத்தின் அகதிகள் நாடு திருப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும். இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்ட்ட பலர் தங்கள் சொந்த விருப்பில் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற முறையில் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, சட்டப்பூர்வமாக நாடு திரும்புவதற்கான ஆவணங்களையும் ஏற்பாடு செய்வதோடு விமானப் பயண ஒழுங்குகள் மற்றும் பயணப் பொதி தொடக்கம் ஒழுங்குகளையும் செய்து கொடுக்கும். மேலும் நாடு திரும்பியவர்களுக்கு தமது சொந்த இடங்களில் குடியமரவும் மற்றும் அவர்கள் தமது வாழ்வை தொடங்குவதற்கு உதவியாக ஆரம்ப கொடுப்பனவாக அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்குகின்றது. இதனை ஸ்ராற் கெல்ப் என அழைக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்பவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் ஊக்கத்தொகை வழங்குகின்றனர். ஜேர்மனியைப் பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்டபவர்களுக்கு ஆயிரம் யூரோவும் குடும்பங்களுக்கு 4,000 யூரோக்களுக்கும் குறையாமலும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு 500 யூரோவும் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும் விமானச் சீட்டும் வழங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சனத்தொகை அடர்த்தி குறைந்த 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் வடமாகாணத்திலேயே உள்ளது. யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களே சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டங்கள். இம்மாவட்டங்களில் சகல வசதிகளோடுமான புதிய குடியிருப்புக்களை உருவாக்கி, நாடு திரும்பும் அகதிகளைக் குடியேற்ற முடியும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள், பழைய மாணவர்சங்கங்கள் தாங்கள் சேகரிக்கும் பெரும்தொகைப் பணத்தை வினைத்திறனில்லாமல் செலவழிக்கின்றனர். வடமாகாண அளுநர் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்கி இந்நிதியை இந்த மக்களின் மீள் குடியிருப்புக்கு பயன்படுத்தப்பட முடியும்.

ரொஹின்யா அகதிகள் முல்லைத்தீவு கேபாப் பிளவு முகாம் கொண்டுவரப்பட்டனர்!

ரொஹின்யா அகதிகள் முல்லைத்தீவு கேபாப் பிளவு முகாம் கொண்டுவரப்பட்டனர்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடலில் தத்தளித்த ரொஹின்யா அகதிகள் கரையொதிங்கிய போதும் தற்போது தரையில் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டு, நேற்று கேப்பாப் பிளவு விமானப்படையினரின் தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளனர். 120 பேருடன் மியான்மரில் இருந்து புறப்பட்ட படகு பட்டினியில் ஐவர் மரணமடைய, டிசம்பர் 19இல் முள்ளிவாய்க்கால் கடற்பகுதியை அடைந்தது. மீனவர்களால் முதலுதவிகள் அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதணை செய்யப்பட்டு அன்று அந்த அகதிகள் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளிநாட்டு விவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அந்த அகதிகளை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய அடிப்படை மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிசெய்தார்.

மேலும் இவர்கள் திருமலை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 12 மாலுமிகள் ஆட்கடத்தல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட ஏனைய 103 பேரும் ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். டிசம்பர் 21இல் இவர்கள் மிரிஹனை இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி அளிக்காததால் அவர்கள் மீண்டும் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று டிசம்பர் 23இல் முல்லைத்தீவு கேப்பாப்பிளவு விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அபிவிருத்தி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் சந்திப்பு!

கல்வி அபிவிருத்தி: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் சந்திப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ரக்கபுமி கண்டோனோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவை டிசம்பர் 22இல் சந்தித்தார். இலங்கையின் கல்விக் கொள்கையில் பாரிய மாற்றங்களை கொண்டுவரத்திட்டமிட்டுள்ள பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இச்சந்திப்பில், இலங்கையின் தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

தங்களுடைய அரசு கொண்டுவரவுள்ள சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கு பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர் ஆசிரியர் மதிப்பீட்டு பொறிமுறையை மேம்படுத்தல் தொடர்பில் இவற்றுக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறுவதே இச்சந்திப்பின் நோக்காக இருந்துள்ளது. தற்போதுள்ள பிரித்தானியாவின் காலனித்தவக் கல்வி முறையை மாற்றி அமைக்க தேசிய மக்கள் சக்தி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

படகோட்டும் போட்டியில் வெற்றி பெற்ற நெடுந்தீவு மாணவர்கள் !

படகோட்டும் போட்டியில் வெற்றி பெற்ற நெடுந்தீவு மாணவர்கள் !

படகோட்டும் போட்டியில் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்ட கொழும்புப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வடமாகாணத்தின் தலைமைச்செயலர் எல் இளங்கோவனின் வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு வாரப் பயிற்சி கொழும்பில் வழங்கப்பட்டு இருந்தது. அந்த ஒரு வாரப் பயிற்சியுடனேயே அவர்கள் களத்தில் இறங்கி இச்சாதனையைப் படைத்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் திவயன ஓயா நேவி ரோஇங் கிளப்பினால் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்துகொண்ட 42 மாணவர்களில் 32 மாணவர்கள் முதற்தடவையாக கொழும்புக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தங்களுடைய தந்தையர்களோடு பாடசாலைக்குச் செல்லுமுன் பயிற்சி பெற்ற இவர்களின் இரத்தத்தில் படகோட்டும் தறின் உள்ளதாக பார்வையாளர்கள் வியந்துள்ளனர். இவர்களுக்கு இந்த வாய்ப்பை அப்பிரதேச கடற்படையினர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.