“வளமான நாடு – அழகான வாழ்க்கை” துன்பத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்போம் – ஜனாதிபதி அனுரா நத்தார் வாழ்த்து
“துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகில் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை” என தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி, “இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன், மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
“நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தம், ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானத்தை மனதில் கொண்டு எதிர்வரும் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாகவும் அர்த்தமுடனும் களிப்போம்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர், “உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிபுரியும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்கள், இந்த பண்டிகை காலத்தை தங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவிட முடியாதவர்களையும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். இது போன்ற வேளையில், உலகம் முழுவதும் பல்வேறு மோதல்கள் மற்றும் பேரழிவுகளுக்கு மத்தியில் சிறு குழந்தைகள் கூட இறக்கும் போது, அமைதியின் நம்பிக்கையின் ஏக்கங்கள் இன்னும் நம் இதயங்களில் உள்ளது. ஒரு குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை கிறிஸ்துமஸ் நமக்கு நினைவூட்டுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நத்தார் தினத்தை ஏழைகளுடன் கழிப்பதற்கும் ஏழைகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு வாழக் கற்றுக்கொள்வதற்கும் நாம் தெரிவுசெய்ய வேண்டும்” என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “அதிகாரமும் செல்வமும் கடவுளின் பார்வையில் மதிப்பற்றவை. கடவுளின் செய்தியின்படி, அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் மிகவும் ஏழ்மையான சூழலில் பிறக்க முடிவு செய்தார். சமுதாயம் ஒரு வரம் என்று நினைக்க பழகிக் கொள்ள வேண்டும். மனித வரலாறு முழுவதும் செல்வம் மற்றும் அதிகார பேராசையால் பலரின் வாழ்க்கை ஆதரவற்றதாகிவிட்டது என்பதை மறந்துவிடாதீர்கள் என்பதை நான் உங்களுக்கு குறிப்பிட வேண்டும்” என அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் தினத்தை முன்னிட்டு நான்கு பெண் கைதிகள் உட்பட 389 கைதிகள் நாடுபூராவும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உலகமே இந்தக் கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடினாலும் யேசுநாதர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் பெத்தலகாமில் கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் கிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இல்லை. சகோதரர்களான தங்கள் இனத்தைச் சார்ந்த பாலஸ்தீனியர்கள் காஸாவில் கொல்லப்படுகின்ற போது தாங்கள் எவ்வாறு இந்தக் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை செய்வது என அங்குள்ள கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். உலகம் யேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறது. அந்த யேசு பிறந்த மண்ணில் இஸ்ரேல் தினம் தினம் குழந்தைகளைப் பெண்களைப் படுகொலை செய்கின்றது.