வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !

வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு  திறந்துவைப்பு – Northern Provincial Council, Sri Lankaநடப்பு வருடத்தில் மட்டும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால் இவ்வருடம் 54 இருதய நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 46 நோயாளிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகும். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 3,329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து அப்பிரிவு இயங்கி வருகின்றது.

இவ் இருதய சிகிச்சை பிரிவானது ஆய்வு கூடம் (Cath Lab), கார்டியோ டோராசிக் ஆய்வுகூடம் (Cardio-thoracic theatre), இருதய அவசர சிகிச்சைப் பிரிவு (Cardiac ICU), எக்கோ கார்டியோகிராபி (Echo Cardiography), உடற்பயிற்சி ECG, நடமாடும் இரத்த அழுத்த கண்காணிப்பு பிரிவு (Ambulatory BP Monitoring), நடமாடும் ECG கண்காணிப்பு பிரிவு (Ambulatory ECG monitoring) போன்ற நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இப்பிரிவு பல குறைபாடுகளுடன் ஒழுங்காக இயங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஒரேயொரு இருதய நோயியல் நிபுணருடன் இயங்கும் இப்பிரிவில் போதிய பயிற்சி பெற்ற வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அதனைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை. இதேமாதிரியானவொரு நிலமையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் காணப்படுகிறது. இதனால் இருதய நோய் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

வடமாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கு என 430 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பாதி நிதிக்கு கட்டிடமும், பாதி நிதிக்கு உபகரணங்களும் என தீர்மானிக்கப்பட்டு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. உபகரணக் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அன்றைய மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினாலும் அன்றைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரனாலும் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

பல கோடி ரூபா செலவில் விபத்து அறுவை சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டும், இறுதியில் ஜெனரேற்ரர் வசதியில்லாததால்,  சிகிச்சைகள் நடைபெறாது வருடக்கணக்காக பூட்டிக் கிடக்கிறது.  சாவகச்சேரியிலும் விபத்திற்குள்ளாகி வரும் நோயாளிகள் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தென்னாசியர்கள் இருதய நோயினால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் ஒப்பீட்டளவில் அதிகம். இந்தச் சூழலில் வவுனியா பொது வைத்தியசாலையில் பல கோடி ரூபா செலவில் இருதய நோய் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டாலும் இருதய நோயைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றதத்துக்கு தெரிவாகியுள்ள கால்நடை வைத்தியர் திலகநாதன், தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவாகியுள்ள சத்தியலிங்கம் ஆகிய இருவரும்  வைத்தியத்துறையை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களோடு யாழில் இருந்து என்பிபி சார்பில் பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் சிறிபவானந்தராஜா, சுயேட்சையாக பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும் இணைந்து, வவுனியா பொது வைத்தியசாலையின் இருதயநோய் பிரிவை முறைப்படி இயங்க வைப்பதற்கான அழுத்தத்தை சுகாதார அமைச்சுக்கு வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் பரோபகாரிகளை தொடர்பு கொண்டு சுகாதார அமைச்சின் அனுவரணையோடு அதனை வாங்குவதற்கு வழியேற்படுத்த வேண்டும்.

可能是 4 個人、講臺和文字的圖像

அரச அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற செயற்திட்டங்களாலும் மற்றும் வினைத்திறனற்ற செயல்களாலும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. அவ்வாறான பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளை சட்டத்தின் முன்நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி தண்டனைகள் வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும். அது தான் அநியாமாக பலியாகிக்கிக் கொண்டிருக்கின்ற உயிர்களுக்கு நிவாரணமாகவும் ஏனையவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *