October

October

இங்கிலாந்தில் திருடப்பட்ட காரை பதிவு செய்யாமல் இறக்குமதி செய்து பயன்படுத்திய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – விசாரணையில் பகீர் !

இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.

 

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதிவு செய்யப்படாத BMW ரக கார் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

குறித்த BMW காரின் Chassis எண்ணை சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சோதனை செய்தபோது ​​இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த BMW வாகனமானது திருடப்பட்ட இலக்கத் தகடு மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும்இ இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவு அமைப்பைச் பரிசோதித்ததில் அது சட்டப்பூர்வமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

 

சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது ​​இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலதிக தகவல்களை வழங்கிய அதிகாரிகள்இ சட்டவிரோதமாக காரை இலங்கைக்குக் கொண்டு வந்த பின்னர் இரு வேறாக காணப்பட்ட பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.

 

அப்போது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் குறித்த கார் இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட போதிலும்இ தனது கட்சிக்காரருக்கு இதில் தொடர்பு இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது எனவும் தெரிவித்தார்.

 

 

எனவே எந்தவொரு நிபந்தனையின் கீழும் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் கோரிக்கை விடுத்தார்.

 

இரு தரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது !

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதன்போது, இந்திய மீனவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது.

 

தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளை மேற்கொள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்திய மீனவர்கள் இலங்கையின் நெடுந்தீவுக்கு தீவுக்கு அருகில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

விசாரணைக்காக அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவ‍ேளை, இந்த ஆண்டு இதுவரை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தின் ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 450 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் 61 மீன்பிடி இழுவை படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் – இலங்கையை எச்சரித்த இந்திய புலனாய்வு!

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று தெரியவந்துள்ளது.

 

அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்பிங் செய்பவர்கள் அடிக்கடி வரும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியும் கூட. இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.

 

இதேவேளை இது தொடர்பான தாக்குதல் அக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் என இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

 

தாக்குதலுக்காக அவர்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதன்படி குறித்த இருவரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்திய புலனாய்வு அமைப்புகளால் இந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லாஹ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்தி அங்குள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளர்.

 

அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பின் பின்னணியில் இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உட்பட தென் மாகாணத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் எல்ல பிரதேசத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அறுகம்பே மற்றும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலிய மக்களை இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புத் தலைமையகம் இன்று அறிவித்தது.

 

இதன்படி, அறுகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பிரஜைகளை அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள பகுதிக்கு உடனடியாக செல்லுமாறும் அல்லது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் அரசாங்கம் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு அறிவித்திருந்தது.

 

இதனிடையே, ஹீப்ரு சின்னங்கள் மற்றும் யூத மதத்தை பரப்பும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், பாதுகாப்பற்ற இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்

பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

 

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

 

அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

 

மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இந்த நிலையில், உண்மைகளை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்றம், பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என இன்று தீர்ப்பளித்தது.

 

அதேநேரம், அவரது வேட்பு மனுவை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் – எச்சரிக்கிறார் ரெஹான் ஜெயவிக்கிரம

இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் இதனால் சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என வெலிகமவின் முன்னாள் மேயரும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரெஹான் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா (USA) விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் இன்று (23) தனது எக்ஸ் (x) தளத்தில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவருடைய பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் இஸ்ரேலிய  சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துவிட்டது.

 

இந்த பிரச்சினைக்கு அவசர தீர்வை காண வேண்டும். தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் எதிர்விளைவுகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட மோசமானதாக அமையலாம்.

அறுகம் குடா பருவம் முடிவடைந்த நிலையில், தென்கிழக்கு பருவம் தொடங்குகிறது. எனினும், வெலிகமவில் பாரிய வீதித் தடைகள் இருப்பது ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பு உணர்வின் மீது நிழலை வீசுகிறது.

ஸ்திரமின்மையை குழப்பத்தை ஏற்படுத்தும் இஸ்ரேலியர்களிற்கு ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன், ”உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது, நீங்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது, ஏனையவர்களின் வாய்ப்புகளை அழிக்க முடியாது.

நாங்கள் உங்களை இந்த அழகான தேசத்திற்கு வரவேற்றுள்ள போதிலும், இது உங்களுடைய நாடில்லை இந்த நாட்டின் சட்டங்களை நீங்கள் மதிக்கவேண்டும்” என ரெஹான் ஜெயவிக்கிரம தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருடங்களுக்குள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் – சஞ்சீவ எதிரிமான்ன

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாற்றம் செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் நாட்டு மக்களில் மாற்றம் செய்யப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்னதாக இந்த அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தேர்தலுக்கு முன்பு செய்வதாக கூறிய எதையுமே செய்வதற்கு ஜனாதிபதி அனுர குமார நடவடிக்கைகள் எடுக்கவில்லை – வே. இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

நாட்டின் சந்தையில் தற்பொழுது தேங்காய் விலை அதிகரித்துள்ளது. பாக்கின் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவா மாற்றம்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு நேற்று (22) மாலை நுவரெலியா – நானுஓயா காந்தி கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இக்கூட்டம் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள், தோட்டத் தலைவர்கள், தலைவிமார்கள், இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய வே. இராதாகிருஷ்ணன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதல் செய்தவர்களை பிடிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அத்தோடு தற்பொழுது சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. அத்தோடு ஜனாதிபதி கூறியிருந்தார். தன்னிடம் ஊழல் செய்த அரசியல்வாதிகளின் கோப்புகள்  அதிகமாக இருப்பதாகவும், அதனை தான் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தற்பொழுது மலையகப் பகுதியில் உள்ள மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது தவறு என அநேகமானவர்கள் சொல்கிறார்கள். தமிழ் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை அதற்கு நாங்கள் வாக்களிப்போம் என பலரும் தற்பொழுது உணர்ந்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடக் கூடியவர்கள் எவருமே மக்களுக்கு நன்கு பரீட்ச்சியம் ஆனவர்கள் கிடையாது.

ஆகையால் மக்கள் இப்பொழுது தெளிவாக இருக்கிறார்கள். அத்தோடு தேர்தல் மறுசீரமைப்பு வந்தால் உங்களுக்கு தெரியும் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களை மட்டுமே பெற முடியும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறைந்தபட்சம் 5 ஆசனங்களையாவது பெற முடியும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையிலும் இதை ஒழிப்பதற்கு தற்பொழுது அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

அத்தோடு உங்களுக்குத் தெரியும் கோட்டாபய அரசாங்கம் ஒரே நாளில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது. இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் ஒரு நடவடிக்கையாக தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது !

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை!

10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

 

2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமாரவின் பொறுப்பாகும் – நாமல் ராஜபக்ச

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு பலர் முயற்சித்து வரும் சூழ்நிலையில், போரை முடிவுக்குக்கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் பொறுப்பாகும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும், தமது இலக்கை அடைவதற்கும் பலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதேபோல் உலகளவில் அடிப்படைவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிராதம் தலைதூக்கியுள்ளன.

இவற்றுக்கு எதிராகப் போராடி, போரை முடித்த தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் கடப்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச்செய்து கொடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாகும். அதேவேளை, எமது அரசியல் முகாம் தான் இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது.

எனவே, நாட்டை வீழ்த்துவதற்குரிய குரோத அரசியலில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை. உலகில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.

ராஜபக்சக்கள் சட்டவிரோதமாக எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அவற்றைக்கொண்டு வாருங்கள். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.

முன்னதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசின் அறிவிப்பின் பெயரில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.