18

18

கிளிநொச்சியில் கட்டுப்பாடற்ற வகையில் தொடரும் மண் அகழ்வு – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பொலிஸார்!

கிளிநொச்சி – கிளாலியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.குலரட்ண தலைமையில் குறித்த 14டிப்பர் மணலையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை – தடையை மேலும் தீவிரப்படுத்தும் இத்தாலி !

வெளிநாடுகளுக்குச் சென்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் இத்தாலி அரசு தனது தடையை விரிவுபடுத்தியுள்ளது.

 

இத்தாலியில் வாடகைத் தாய் முறைக்கு கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே தடை உள்ளது. இருந்தாலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு வாடகைத் தாய் மூலம் அந்த நாட்டவா்கள் குழந்தைகளைப் பெற்றுவந்தனா்.

 

இந்தச் சூழலில், தனது வாடகைத் தாய் முறையை வெளிநாடு சென்று பயன்படுத்துவதற்கும் இத்தாலி அரசு தடை விதித்துள்ளது.இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் (படம்), முழு தடைக்கு ஆதரவாக 84 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, வெளிநாடுகளில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதையும் குற்றமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

 

 

மக்களிடையே பழமைவாதத்தை திணிப்பதாகவும், சமபாலின தம்பதியருக்கு விரோதமாக இருப்பதாகவும் இந்த சட்டத்துக்கு பலத்த எதிா்ப்புகள் எழுந்தன. அவற்றையும் மீறி, பிரதமா் ஜாா்ஜியா மெலோனி தலைமையிலான தீவிர வலதுசாரி அரசு அந்தச் சட்டத்தை தற்போது நிறைவேற்றியுள்ளது.

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன்பாக நடைபெற்ற கொலை – ஜனாதிபதியிடம் தீர்வினை கோரும் உறவினர்கள்!

2021 ஆம் ஆண்டு 06மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

2021-06-21ஆம் திகதியன்று மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்திரம் என்பவர் உயிரிழந்திருந்தார்.

 

இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

 

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை அழிக்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளடன் வழக்கினை திசைமாற்றும் செயற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் புதிய ஜனாதிபதி தலையிட்டு தமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை, தாயார், சகோதரி ஆகியோர் நேற்றையதினம்(17) மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்கள்.

 

குறித்த சம்பவத்தின்போது தமது சகோதரன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே அவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்தால் உண்மைகள் வெளிவரும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்திலிருந்த இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதனால் தமது அதிகாரத்தினைக்கொண்டு சாட்சியங்கள் மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி விசேட விசாரணைக்கு பணிப்புரை விடுக்கவேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

குற்றங்களுடன் தொடர்புடைய 10!வயது சிறுவர்களையும் சிறையில் அடைக்க திட்டம் !

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசம் (NT) குற்றப் பொறுப்பின் வயதைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

 

புதிய சட்டம் 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் சிறையில் அடைக்க அனுமதிக்கிறது.

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்ட்ரி லிபரல் கட்சி (CLP) அரசாங்கத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 

இந்த நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொள்கையை மாற்றியமைக்கிறது.

 

முன்னதாக சிறுவர்களை சிறையில் அடைப்பதற்கான வயது எல்லை 12 அல்லது அதற்கும் மேலாக காணப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், புதிய தீர்மானமானது அதிகரித்து வரும் இளைஞர்களின் குற்ற விகிதங்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

 

எனினும், மனித உரிமைக் குழுக்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பழங்குடியின அமைப்புகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள நிலையில், இந்த முடிவு கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன !

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் அந்தப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது – அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள்

 

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுக்களை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன்காரணமாக உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பிவித்துரு ஹெல உறுமய தலைவர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். சிஐடியினர் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவிசெனிவரட்ண நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஷானி அபயசேகர மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்தும் எங்களிற்கு எந்த பிரச்சினையுமில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவு குறித்து பெருமளவு அறிக்கைகள் வெளியாகியுள்ளன, சிஐடியினர் இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கட்டும், அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 16 ஆம் திகதி மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயகத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

வெற்றி பெறவேண்டும் என்று செயற்படும் அமைப்பு அல்ல தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்கின்றோம் இந்த தீவில் உள்ள இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் சிங்கள தேசம் அங்கிகரிக்கப்பட்டு தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படாத நிலையால் மிகமோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

 

சிங்கள தேசம் தங்களின் பெரும்பான்மையினை வைத்துக் கொண்டு தமிழர் தேசத்தில் இருக்கின்ற நிலப்பரப்பினை ஆக்கிரமித்து அதனை திட்டமிட்ட சிங்கள மயமாக்கலினைத்தான் கடந்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் செய்து வருகின்றது.

எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதுதான் எங்கள் இலக்காக இருந்தாலும், இன்று மிகப்பெரிய ஆபத்து நடக்க இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் அங்கம் வகிக்கக்கூடிய ரில்வின் சில்வா நேற்று ஒரு கூட்டத்தில் சொல்லியுள்ளர் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எதுவும் அவசியம் இல்லை அது தமிழ்மக்களின் கோரிக்கையாகவும் இல்லை என்றும் சொல்லியுள்ளார்.

அதற்கான அடிப்படை ஒன்று இருக்கின்றது கடந்த ஐனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு புதியஅரசியல் அமைப்பு ஊடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற கருத்தினை வெளிப்படுத்தி இருந்தாலும் புதிய அரசியல் அமைப்பு 2015 ஆண்டு மைத்திரி பால சிரி சேன, ரணில் விக்கிரமசிங்க காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கான புதிய அறிக்கை இடையில் ஸ்தம்பிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதன் ஊடாகத்தான் இந்த புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படும் என்றும் அதன் ஊடாக தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வரைபினை தயாரிப்பதற்கு அன்று பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து தரப்புக்களும் ஒத்துளைத்திருந்தார்கள் அன்று பாராளுமன்றத்தில் ஈபிடிபியும், தமிழ்தேசியக்கூட்டமைப்பும்தான் மக்கள் பிரதிநிதிகள் இருந்தர்கள் அந்த வரைபினை தாயரிக்கும் குழுவின் தலைவராக கூட்டமைப்பு சித்தார்த்தனைதான் நியமித்திருந்தார்கள்.

இன்று அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாட்டினை எடுத்து பார்த்தால் தென்னிலங்கையில் ஊழலினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் வடகிழக்கில் ஊழல் வாதிகளை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் போறது இல்லை. ஊழல் வாதிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்து மற்றைய முழுப்பேரும் உள்ளே போவார்கள்.

தேர்தலின் பின்னர் அவருக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்பது கேள்விக்குறி அந்த பெரும்பான்மையினை எடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தரப்புக்களைத் தான் தேடவேண்டும். அதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் பேரம் பேசுவது கடினமான விடயம் அவ்வாறு இருந்தால் தமிழர்களின் உரிமைசார்ந்த விடையங்களில் விட்டுக்கொடுப்புக்களை அவர்கள் செய்யவேண்டி வரும்.

அதனை தவிர்த்து ஏதோ ஒருவகையில் பெரும்பான்மை எடுப்பதாக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்த மற்றவர்கள் வெல்லவேண்டும் அவர்கள் இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு பெரும்பான்மை எடுக்கும் வாய்ப்பு உள்ளன.

 

கொள்கையளவில் அவர் சொல்லியுள்ளார் தமிழ்தரப்புக்கள் தேர்தலின் பின்னர் தன்னை ஆதரிக்க இருப்பதாக சொல்லியுள்ளார். நிபந்தனை இல்லாத ஆதரவினை கொடுக்கக்கூடிய ஒரோ ஒரு தரப்பு இந்த ஊழல் வாதிகள்தான் தங்களின் ஊழல் பிடிபடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றார்கள்.

அவர்கள் செய்யப்போது அவர்கள் ஒத்துளைப்பு கொடுத்து தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியல் அமைப்பு. இவற்றை பார்த்தால் தமிழர்களின் சரித்திரத்தில் முதல்தடவையாக தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் ஒன்று புதிதாக தொடங்கப் போகின்றது.

 

இதனை தடுப்பதாக இருந்தால் வடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 ஆசனங்களை பெற்று ஆகவேண்டும். அதுதான் எங்களின் இலக்கு.

 

நிறைவேற்றப்படப்போகும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பினை தமிழர்களின் அனுமதியுடனும் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டதாக வரக்கூடிய வரலாற்று தவறில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்ற வேண்டும். அதுதான் எங்கள் பணி. அதற்கான ஆணையினை தமிழ்மக்கள் வழங்க வேண்டும் என்பதற்காக கொள்கைப்பற்றுடைய உறுதியான உறுப்பினர்களைத்தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

 

இன்று தமிழ் தேசியம் வளரும் நிலையினையே காட்டிக்கொண்டிருக்கு சமஸ்டி என்று உச்சரிக்கக் கூடாது என்று சொன்ன தமிழ்தேசிய கட்சிகள் சமஸ்டியினை பற்றி கதைக்கவேண்டிய இடத்திற்குள் வந்துள்ளார்கள்.

13 ஆம் திருத்தம் தான் ஒற்றையாட்டிசியினை தூக்கி பிடித்தவர்கள் கடந்த ஐனாதிபதி தேர்தலில் எல்லோரும் கூடி தமிழ் தேசியத்திற்காக சுயர்நிர்ணய ஆணையினை கொடுங்கள் என்று ஆணையினை கேட்கவேண்டி வந்தது.

அது எல்லாம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலப்பாடு தமிழரசு கட்சி சுமந்திரன் சமஸ்டியினை பற்றி வாய்திறக்கவில்லை. ஆனால் ஐனாதிபதி தேர்தலில் சொன்னார் சமஸ்டிதீர்வு தான். நாங்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரோ ஒருதீர்வு என்று.

தமிழ் தேசியம் மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது இயக்கத்தினை அழித்து தமிழ்தேசித்தினை கரைத்துவிடலாம் என்று போக விரும்பிய பாதை கரைந்துள்ளது. என தெரிவித்தார்.

கொல்லப்பட்டார் ஹமாஸ் இயக்க தலைவர் யஹ்யா சின்வார் !

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

கட்டிட இடிபாடு ஒன்றில் சின்வாரின் உடல் இருப்பதை இஸ்ரேலிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று நேற்று (17.10.2024) கண்டுபிடித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு சோதனை மற்றும் பல் மாதிரிகளை பயன்படுத்தி சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

யஹ்யா சின்வர், கடந்த வருடம் ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய பின்புலமாக செயற்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலியர்களை சிறைப்பிடித்து வைத்திருக்கும் காசா படையினரை ஆயுதங்களை கீழே போடும் படியும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பணயக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை திருப்பி அனுப்புபவர்கள் வெளியே சென்று வாழ்வதற்கு இடம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்சவவை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவவை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ப்ளஸ் வன் என்ற அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி விடுத்துள்ளார்.

அண்மையில் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் சவால் விடுத்திருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வின்சத யஸஸ்மினி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மீட்டு எடுக்கும் நோக்கிலேயே, மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்வதினை விரும்பவில்லை என்றும் வின்சத யஸஸ்மினி தெரிவித்துள்ளார்.

பெறுமதியற்ற நாமலை இந்த தேர்தலில் பூச்சியமாக்கி கொள்ளையிட்ட மக்கள் பணத்தை மீள கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென யசஸ்மினி ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அவற்றை நிருபித்து காட்டுமாறு சவால் விடுத்திருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவாகும் இவ்வாறு நாமல் ராஜபக்ச பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை தேவையான போது வெளிப்படுத்தப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

எதிர் தரப்பினர் கூறுவதை போல விசாரணை அறிக்கையை நினைத்தப்படி வெளியிடுவதற்கு இது ஒன்றும் குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மை அல்ல எனவும் விஜித ஹேரத் சாடியுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஏழு நாட்களுக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் என கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.

 

அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் ஏன் தயங்குகின்றது என்பதை அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய விஜித ஹேரத்,

 

ஒவ்வொரு தனிநபர் கோரிக்கையின் அடிப்படையில் அவற்றை வெளியிட முடியாது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், தங்கள் பணிகளைச் சரியாகச் செய்யத் தயாராக உள்ளோம்.

 

கம்பன்பில கூறுவதை போல அவரின் அறிக்கைகள் தொடர்பில் தாம் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.