இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் – எச்சரிக்கிறார் ரெஹான் ஜெயவிக்கிரம

இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் இதனால் சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என வெலிகமவின் முன்னாள் மேயரும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரெஹான் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா (USA) விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் இன்று (23) தனது எக்ஸ் (x) தளத்தில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவருடைய பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் இஸ்ரேலிய  சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துவிட்டது.

 

இந்த பிரச்சினைக்கு அவசர தீர்வை காண வேண்டும். தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் எதிர்விளைவுகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட மோசமானதாக அமையலாம்.

அறுகம் குடா பருவம் முடிவடைந்த நிலையில், தென்கிழக்கு பருவம் தொடங்குகிறது. எனினும், வெலிகமவில் பாரிய வீதித் தடைகள் இருப்பது ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பு உணர்வின் மீது நிழலை வீசுகிறது.

ஸ்திரமின்மையை குழப்பத்தை ஏற்படுத்தும் இஸ்ரேலியர்களிற்கு ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன், ”உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது, நீங்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது, ஏனையவர்களின் வாய்ப்புகளை அழிக்க முடியாது.

நாங்கள் உங்களை இந்த அழகான தேசத்திற்கு வரவேற்றுள்ள போதிலும், இது உங்களுடைய நாடில்லை இந்த நாட்டின் சட்டங்களை நீங்கள் மதிக்கவேண்டும்” என ரெஹான் ஜெயவிக்கிரம தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *