October

October

தொடரும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் – காசாவின் அகதிகள் முகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் காயம் !

மத்திய காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்குப் புகலிடமாக பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது  (13.10.2024) காசாவின் நுசிராத் முகாமில் உள்ள தளம் மீதே நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் மற்றும் ஹைஃபா இடையே அமைந்துள்ள பகுதியில் உள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயுதக் குழுவின் ஊடக அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் !

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,சாராயத்தை விற்று எமக்கு வாய்க்கரிசி போடாதே வீரியம் குறைப்பதும் சாராயம் காரியம் கெடுப்பதும் சாராயம் மதுவை ஒழிப்போம் மாண்பை காண்போம் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சங்கு புனிதமானது கிடையாது – தமிழ்மக்களிடம் மன்னிப்பு கோரும் தமிழ் பொதுக்கட்டமைப்பு !

நாணயமானவர்களுக்கும் , கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார் . யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ( 13 ) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் .

 

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று , மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது . ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம் . கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து இருக்கலாம் . அதனையும் மீறி எடுத்துள்ளார்கள் .

சங்கு சின்னத்திற்கும் , தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் , பொது கட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை . தமிழ் மக்கள் பேரவையின் கூர்ப்பாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும் . பொதுச் சபை அடுத்த கூர்ப்புக்கு போன பின்னரே தேர்தல்களை எதிர்கொள்ள முடியும் . தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து , அதில் வெற்றியும் பெற்றோம் . அது சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் மீள சிதறியுள்ளது . நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பலம் தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் இல்லாததால் , அதில் இருந்து விலகி இருக்கிறோம் . எனவே மக்கள் நாணயமானவர்களுக்கும் கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சங்கு சின்னம் புனிதமானது இல்லை. அதற்கு யாரும் உரிமை கோர முடியாது . அது ஒரு பொது நிலைப்பாட்டிற்கான குறீயிடு. பொதுக்கட்டமைப்பில் இருந்த பலர் வெளியில் நிற்கும் போது சிலர் மட்டும் அதனை பயன்படுத்துவது அறமில்லை . சங்கு சின்னத்திற்கு , நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை . பலரின் உழைப்பு அதில் உண்டு . தேர்தல் பிரச்சாரத்திற்கு பலர் முன்னரங்கில் வந்து உழைக்காமல் பின்னின்று உழைத்தவர்களும் உண்டு . தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது . அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் . அத்துடன் பொதுக்கட்டமை தற்போது இல்லை என தெரிவித்தார்.

இறந்த இலங்கை தமிழ் அகதியின் உடலை புதைக்க நிலம் இல்லாமல் இலங்கை தமிழ் அகதிகள் போராட்டம்!

இந்தியாவில் பாலக்காடு என்ற இடத்தில் இலங்கை அகதிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

குறித்த போராட்டமானது நேற்றையதினம்(13) பாலக்கோடு கேசர்குளி சாலையில் இடம்பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கேசர்குளி அருகே உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் 80 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் வேறு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று கேசர்குளி அருகில் உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் புதிய குடியிருப்புக்களை கட்டிய தமிழக அரசு இப்பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், சுடுகாடு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் கடந்த மார்ச் மாதம் இலங்கை அகதிகளை இம்முகாமில் குடியமர்த்தியுள்ளது.

 

கடந்த 7 மாதங்களாக இது குறித்து பல முறை தமிழக முதலமைச்சருக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த முகாமை சேர்ந்த ரூபன் (வயது55) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததாலும், பழைய முகாமில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல வழியில்லாததாலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாததால் மயானத்திற்கு இடம் கேட்டு பாலக்கோடு-கேசர்குளி சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டு வந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

 

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

 

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது.

 

எந்தவிதத்திலும் இது போதுமானதல்ல. தற்போதைய ஜனாதிபதிக்கும் புதிய அமைச்சரவைக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. புதிய அரசியல் கலசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

 

அந்த இலக்கினை அடையும் வரை நாம் பல விடயங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது.ஒரு சில தீர்மானங்களை எடுக்க நேரிடும். இது எமக்கு சவாலான விடயமாகும். நவம்பர14 நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது பலமிக்க அதிகாரத்தினை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.

 

நாடாளுமன்றில் பலமிக்க அதிகாரத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்ற போதிலும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதனால் மாத்திரம் பலமிக்க அதிகாரத்தினை பெறமுடியாது.

 

தகுதிவாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.ஜனநாயக உரிமைகளுக்காக நாடாளுமன்றுக்குள் எதிர்க்கட்சி ஒன்றின் தேவை காணப்படுகின்றது.

 

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதந்கு தயார் நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் வடக்கு அரசியல்வாதிகள் எம்முடன் கலந்துரையாடியிருந்தனர்.

 

அதாவது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் இல்லையெனில் வடக்கு மக்கள் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்“ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

196 ஆசனங்களுக்காக இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 8000 வேட்பாளர்கள்!

பொதுத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 690 வேட்புமனுக்களின் கீழ் 8388 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் 225 உறுப்பினர்களில் மக்களின் வாக்குகளால் தெரிவாகவுள்ள 196 பிரதிநிதிகளுக்காகவே இவ்வாறு 8000க்கும் மேற்பட்டோர் போட்டியிடவுள்ளனர்.

 

இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

 

பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுவர். ஏனைய 29 பேர் தேசிய பட்டியலுக்கூடாக தெரிவு செய்யப்படுவர்.

 

இம்முறை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடமிருந்து 764 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், அவற்றில் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

 

பாராளுமன்றத்தில் கம்பஹா மாவட்டத்துக்கே அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை 19 ஆகும். இந்த 19 ஆசனங்களுக்காக இம்முறை தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயாதீன குழுக்கள் ஊடாக 902 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

 

அதேவேளை பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்துக்கே இரண்டாவது அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை 18 ஆகும். இந்த 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் சார்பாகவும், 19 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கமைய இம்முறை கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

குருணாகல் மாவட்டத்துக்கு 15 ஆசனங்கள் ஒதுக்கப்படும். அதற்காக 18 அரசியல் கட்சிகள், 9 சுயாதீன குழுக்கள் ஊடாக 486 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

கண்டி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 12 சுயாதீன குழுக்கள் ஊடாக 510 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

களுத்துறை மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

இரத்தினபுரி மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்கள் ஊடாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

காலி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் சார்பிலும், 5 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 264 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

 

அநுராதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதுளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயாதீன குழுக்களிலிருந்து 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கேகாலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயாதீன குழுக்களிலிருந்து 216 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

 

 

நுவரெலியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயாதீன குழுக்களிலிருந்து 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

புத்தளம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயாதீன குழுக்களிலிருந்து 429 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

மாத்தறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 220 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்கு 16 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 250 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன. யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

 

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாத்தளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள்மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 184 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர்.

 

மொனராகலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயாதீன குழுக்களிலிருந்து 135 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயாதீன குழுக்களிலிருந்து 120 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கமைய மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலேயே குறைந்தளவான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஷ்யா செல்லும் அனுர குமார தரப்பு !

ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு புதிய ஜனாதிபதி அநுரவும்  விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விஜயத்தின் மூலம் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இலங்கையின் உறுப்புரிமை தொடரப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் கசான் நகரில் எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நடப்பு ஆண்டின் தலைமைத்துவத்தை வகிக்கும் இந்தியா  இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்புக்கு சாதகமாக பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சு, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய கொழும்பு விஜயத்தின்போது, இலங்கையின் பிரிக்ஸ் உறுப்புரிமை அபிலாஷைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட சந்திப்புகளின்போது கலந்துரையாடி இருந்தார்.

 

சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற முக்கிய உலகப் பொருளாதாரங்களை உள்ளடக்கிய அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை ஜனாதிபதி அநுரவும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கமைவாகவே இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 20ஆம் திகதி ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் ஒரு முக்கிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகவே பிரிக்ஸ் காணப்படுகிறது.

பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உள்ளடக்கியதாக இருந்த நிலையில் இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்களாக இலங்கை, ஈரான், எகிப்து, எதியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை இந்த ஆண்டில் இணைத்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா!

ஈரானைச் சேர்ந்த 6 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் குறித்த நடவடிக்கையானது இஸ்ரேலுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனி இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் போரை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இஸ்ரேல் இராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தத நிலையில், தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானைச் சேர்ந்த 06 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

பாவித்த தண்ணீருக்கான கட்டணத்தை கூட செலுத்தாத 40க்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை 9 மில்லியன் ரூபாவாகும்.

 

பொது விதிகளுக்கு அமைய குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.

 

எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

டொக்டர் சத்தியமூர்த்தி பொறுப்புக்கூற வேண்டும்! மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை டொக்டர் எஸ் சிறிபவானந்தராஜா நகர்த்துவார்!!!

டொக்டர் சத்தியமூர்த்தி பொறுப்புக்கூற வேண்டும்! மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை டொக்டர் எஸ் சிறிபவானந்தராஜா நகர்த்துவார்!!!
தம்பி தம்பிராஜா – அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு