தவறு செய்தால் இனவாத கருத்துக்களை முன்வைத்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – புத்தி ஜீவிகள் அமைப்பின் இணைப்பாளர் திரு அருள் கோகிலனுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்
தவறு செய்தால் இனவாத கருத்துக்களை முன்வைத்தால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – புத்தி ஜீவிகள் அமைப்பின் இணைப்பாளர் திரு அருள் கோகிலனுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்
ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய பொலிஸ் பிரிவுகளுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
வர்த்தகர் தினேஸ் சாஃப்டரின் மரணம் மற்றும் 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் மற்றும் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடத்தப்பட்டு, மறுநாள் நாடாளுமன்றத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம், 2006 இல் கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம், தொடர்பான விசாரணைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் மாத்தறை வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டல் ஒன்றுக்கு அருகில், கடந்த டிசம்பரில் இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மரணம் தொடர்பிலான விசாரணையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, உகண்டாவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற, சட்டவிரோதமாக பெறப்பட்ட உழைக்கப்பட்ட பணத்தை மீட்கவேண்டிய பரந்துபட்ட சூழமைவின் அடிப்படையிலேயே உகண்டாவில் உள்ள களவாடப்பட்ட சொத்துக்கள் குறித்து நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தேன்.
நான் தெரிவித்தமைக்காக நான் முழுப்பொறுப்பையும் ஏற்கின்றேன். நான் தெரிவித்த சில கருத்துக்களிற்காக எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். எனக்கு உகாண்டா குமாரி மெனிக்கே என பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் ஆற்றிய உரைகளின் போது சட்டமொழுங்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசநாயக்கவினால் அதனையே செய்ய முடியும் என்பதையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் இதன் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. “பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும் இலங்கை மக்கள் மீதான அவற்றின் தாக்கம்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் எனவும் பிரதிநிதி உறுதியளித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்தும் இந்த சந்திப்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மட்டுப்படுத்தியிருப்பது நிதித் துறையில் குறிப்பிடத்தக்க சவால்களுக்கு வழிவகுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் சுட்டிக்காட்டியது. மேலும், தேசியப் பொருளாதாரத்தில் விவசாயத் துறை குறைந்த பிரதிநிதித்துவத்தைக் காட்டுவதும் இதற்கு காரணமாகிறது.
ஆசிய வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் விவசாய உற்பத்தித் திறன் மோசமான நிலையில் காணப்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பாலான விவசாயிகள் சிறிய அளவிலான நிலப்பரப்பைக் கொண்டுள்ளதாகவும் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை தமது பிரதான வருமான வழியாக கருதவில்லை எனவும் ஜனாதிபதி எடுத்துக்காட்டினார் . இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பேரம் பேசும் சக்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த உதவியாக உள்ள விவசாய சங்கங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால் அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
அத்துடன் குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார்.
அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந்தார். எனினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளிவராத அறிக்கைகள் இரண்டை அவர், அங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன்.
இனியும் தாமதிக்காமல், அந்த இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி வெளியிட வேண்டும்.
எனினும், அமைச்சரவைப் பேச்சாளரான விஜித ஹேரத், சில அறிக்கைகளின் பக்கங்கள் குறைவாக காணப்படுவதாகவும் சில அறிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இது தொடர்பாக தாங்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு அறிக்கையின் பங்கங்கள் குறைவடையவும் இல்லை, எந்தவொரு அறிக்கையும் காணாமல் போகவும் இல்லை என்பதை நாம் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.
அரசாங்கத்திற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், ஜனாதிபதியின் செயலகத்திற்கும் இந்த அறிக்கைகளை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், எம்மிடம் தற்போது அந்த இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன.
எனவே, ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் இதுவரை வெளியிடப்படாத, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இந்த இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
திங்கட்கிழமையாகும் போது கடவுச்சீட்டுகள் நாட்டில் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஒன்லைன் கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எழுத்து – இதயச்சந்திரன்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பலராலும் பார்க்கப்படுகிறது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி.
‘முறைமை மாற்றம்’ என்பதை நோக்கி இத் திருப்பு முனை நகர்கிறது என்கின்றனர் சில அரசறிவியலாளர்.
‘சிஸ்டம் செஞ்’ என்பதை பலவிதமாக அர்த்தப்படுத்தினாலும் அரசியலமைப்பிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் இருப்பதை மேம்படுத்தும் சீர்திருத்தங்களாகவே அமையும்.
ஊழல் அற்ற ,ஏற்ற தாழ்வு இல்லாத நிர்வாகம் அடிப்படை மாற்றத்திற்கான ஆரம்பமாக இதனைக் கொள்ளலாம். அதுவே ஒரு கட்டமைப்புக் கோட்பாடாக மாறாது.
தே.ம. சக்தி சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் , இந்திய-மேற்குலகின் மைய நீரோட்ட ஊடகங்கள், ‘இடதுசாரிகள் மார்க்சிசவாதிகள் வெற்றி பெற்று விட்டனர்’ என்று தலைப்புச் செய்திகளை வெளியிட்டனர்.
ஆயுதக் கிளர்ச்சி ஊடாக புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் , முதலாளித்துவ தேர்தல் முறைமை ஊடாக அடிப்படை சோஷலிஸக் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்று இவ் வல்லரசுகள் அச்சப்படுகின்றன.
இதுவரை ஆண்ட நவ தாராண்மைவாத தரகர்கள் , தேசிய இன முரண்பாட்டினை ஊக்குவித்து நாட்டினை அழிவுப் பாதையில் இட்டுச் சென்று , இறுதியில் வங்குரோத்து நிலைமையில் அனைத்து மக்களின் இறைமையை அடகு வைத்துள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட ஆழமான பாதிப்பினை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமது பிராந்திய பூகோள நலனை அடைந்திட முயலும் போது , அதற்கு இசைந்து போகாத ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டதென இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். அதுவே இந்த மார்க்சிச முலாம் பூசலின் வெளிப்பாடு எனக் கொள்ளலாம்.
இந்த பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட அரச கட்டமைப்பின் பலவீனம் , திடமான வெளியுறவுக் கொள்கையினை உருவாக்க முடியாததொரு இக்கட்டான நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் காமினி கீரவேல அவர்கள் கூறுகின்றார்.
இலங்கைக்காக இருதரப்பு , பலதரப்பு மற்றும் சர்வதேச கடன் முறித்தரப்பு என்போருடன் பேசும் சர்வதேச நாணய நிதியமும் மறைமுகமாக மேற்குலகத்தின் உடனான வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்துகிறது.
கடன்களை செலுத்த முடியாதென கூறினால் , எந்த முதலீடுகளும் நாட்டுக்குள் வராது.
‘முதலையும் வட்டியையும் நீண்ட காலத்திற்குப் பிறகு தருகிறோம்'[Reprofiling] என்று ரணில் உடன்பாடு காணவில்லை.
மாறாக முறிகளின் ‘முதல்’ குறைப்பையும் [Haircut]வட்டிக் குறைப்பையும் முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் புதிய அதிபர் அநுரகுமார திசாநாயக்க அவர்கள் , நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும் , அவருக்கு முன்னால் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.
நாடு பெற்ற கடன்களை வைத்தே அடுத்த பூகோள அரசியல் ஆட்டம் ஆரம்பமாகும்.
அண்மைய நேர்காணல் ஒன்றில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்திய முதலீடுகள் குறித்து கூறியது கவனிப்புக்குரியது.
ஊழலற்ற. வெளிப்படைத்தன்மை உள்ள , தமது பொருளாதாரக் கொள்கைக்கு இசைந்து பயணிக்கக்கூடிய முதலீடுகளை நாம் வரவேற்போம் என்றார்.
இதற்கிடையே அனுராவிற்கு வாழ்த்துச் சொல்ல ஓடோடி வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறித்தும் பேச வேண்டும்.
இந்த சந்திப்புதான் என்பிபி என்று அழைக்கப்படும் ஜேவிபி யானது அதிகார நாற்காலியில் இருந்தவாறு ஒரு வல்லரசு நாட்டினை எதிர்கொண்ட முக்கிய நிகழ்வாகும்.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்தார்.
அவர் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசியது தமிழர் தரப்பிற்கு மகிழ்ச்சி.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நினைவுபடுத்தவே பதின்மூன்றை ஜெய்சங்கர் குறிப்பிட்டார் என்பது சிங்கள தரப்பிற்கு தெளிவாகப் புரியும்.
அநேகமாக சர்ச்சைக்குரிய தென்கடல் அடியில் உள்ள கனிமவள பாறைகள் குறித்தும் பேசியிருக்க வேண்டும்.
இரண்டாவது நிகழ்வாக சீனாவின் பாய்மர போர்க்கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகிறது.
வழமை போல் இந்தியத் தரப்பிலிருந்து அச்சுறுத்தலைக் காணவில்லை. அமைச்சர் விஜித ஹேரத்தின் கப்பல் குறித்த விளக்கங்களும் தெளிவாக வித்தியாசமாக இருக்கிறது. ‘எல்லோரையும் சமமாகப் பார்க்கிறோம்’ என்கிறார்.
ஆனாலும் தற்போதைய பல்துருவ உலக ஒழுங்கில் , எல்லோரையும் சமமாக நண்பர்களாக பார்ப்பதென்பது யதார்த்தபூர்வமானதல்ல.
பிரிக்சில் இணைவதற்கு இந்தியாவை அணுகுவது யதார்த்த அரசியல். அது தென் உலகத்தின்[Global South] முக்கிய அணி என்பதை இடதுசாரிகள் புரிந்து கொள்வர்.
ஆகவே இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியின் முழுமையான தோற்றம் புலப்படாது.
நாட்டின் பொருளாதாரம் நிமிரும் வரை , நிர்வாகக் கட்டமைப்பை சீர் செய்வதிலும் மக்களின் நன்மதிப்பினைப் பெறுவதிலும் அரசு அதிக கவனம் செலுத்துமென எதிர்பார்க்கலாம்.
இருப்பினும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் தீவிரவடையுமாயின் முன்னேற்றம் தடைப்படும் வாய்ப்புகள் அதிகம்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமது தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய அரியநேத்திரன் உட்பட மூவருக்கு எதிராக சட்ட சடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி வண. பத்தரமுல்லே சீலரதன தேரர் சரத் கீர்த்திரத்ன, மற்றும் பி.அரியநேத்திரன் ஆகியோரே அந்த மூன்று வேட்பாளர்களுமாவர்.
இந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்தகைய குற்றத்திற்கான அபராதம் ரூ. 100,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரசார நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க நேற்று (13) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி. அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் பொதுவேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.
வெட் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெட் வரியை செலுத்தாமைக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
உரிய வரியை செலுத்துமாறு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு இன்று (14) கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அப்போது உரிய தொகையை செலுத்தாததால், பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் இந்தத் தண்டனை விதித்தது.
நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். நாங்கள் இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும்.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர்களுக்கு இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்சியே இலங்கைத் தமிழரசு கட்சி. அதனுடைய கொள்கை பிறழாது, அதனுடைய தாகம் தீராது, அதனுடைய அடிப்படை மாறாது எங்களுடைய கட்சி இப்போதும் நிலையான பயணத்தைச் செய்து வருகின்றது.
தற்போது நாட்டிலேயே மாற்றம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றமானது ஒரு மாயையாக இருக்கலாம். அல்லது நீண்ட பயணத்தினுடைய ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நல்லதாக இருந்தால் நாங்களும் அவர்களோடு கைகோர்க்கத் தயாராகவுள்ளோம் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
சிங்களத் தலைவர்கள் இதயசுத்தியோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வைத் தருவார்களா என நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
25 வருடங்களாக கிடப்பில் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2004ஆம் ஆண்டு தமிழீழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வெளியே வந்தது. அந்தக் கட்சியினுடைய பாரம்பரியம் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மீண்டும் ஒரு புதுப்பொலிவைப் பெற்றுப் பயணம் செய்து வருகின்றது.
நாம் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற ஆசனங்களை எடுக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் எங்களுக்கான மாற்றத்தைத் தரும் களமாக அது மாறும். அதிலிருந்து நாம் பின்வாங்கினால், எங்களுடைய மக்கள் சரியான முடிவுகளை எடுக்கத் தவறினால் நாங்கள் தோற்றுப் போன இனமாக மாறிக்கொண்டே போவோம்.
பலர் நான் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறுகின்றார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். பகிரங்கமாகச் சொல்கின்றேன் ஒரேயொரு கட்சி அரசியல் அது இலங்கைத் தமிழரசுக் கட்சியே.
நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற போதும் வழக்கை எதிர்கொண்டு வருகின்றேன். எனது கட்சிக்காரர்களே நான் தலைவராகச் செயற்படக்கூடாது என வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்கள். அத்தனை சவால்களையும் தாண்டி இந்தக் கட்சியில் இருக்கின்றேன்.
ஒரு கட்சியாக ஒருங்கிணைய வேண்டும். அலைபாயக்கூடாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றபோதுதான் வரலாற்றின் வெற்றிகள் எங்களைத் தேடி வரும். இயற்கையும் வரலாறும் ஒரு காலமும் தவறுவிடாது.
அண்மை காலங்களிலே என் மீதான சேறுபூசல்கள் மிகப்பெரிய அளவிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மதுபான சாலைக்கான சிபாரிசு கடிதத்தைச் சிறீதரன் எம்.பி. வழங்கினார் என்று பலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
என் மீதான தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகப் பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடு செய்துள்ளேன். வழக்கைத் தொடர்ச்சியாகவும் நடத்தவுள்ளேன். நான் இந்த விடயத்தை விடப்போவதில்லை.
நான் மதுபான சாலைக்கான சிபாரிசுக் கடிதத்தை நான் வழங்கியிருந்தால் அதனை வெளிப்படுத்தவும். அதனை வெளிப்படுத்தாமல் வெறுமனே ஊகங்கள் அடிப்படையில் எழுதுவதைத் தவிருங்கள். உண்மைகளை எழுதுங்கள்.
அரசியலில் உள்ளவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த காலத்தில் அரசியலுக்குள் வந்தவன் நான். என்னுடைய அரசியல் அரசியல் பயணம் என்பது வெறும் பஞ்சு மெத்தைக்குள் வந்ததல்ல. நான் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்தவன்.
நான் மதுபான சாலைக்கான சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்தவனும் அல்லன், இனிமேல் கொடுக்கப் போறவனும் அல்லன். என்னுடைய இனத்துக்கு விரோதமான, என்னுடைய கட்சிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்பதை இங்கு பகிரங்கமாகச் சொல்ல விரும்புகின்றேன்.
என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களே என்னைப் பற்றி தவறாக எழுதுகின்றார்கள். சிலர் சொல்லுவதைக் கேட்டு மோசமாக எழுதினார்கள். அவை எல்லாவற்றையும் கடந்து வந்து பொறுமையோடும் நிதானத்தோடும் என்னுடைய அரசியலை மேற்கொண்டு வருகின்றேன்.” – என்றார்.