எழுத்து – இதயச்சந்திரன்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பலராலும் பார்க்கப்படுகிறது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி.
‘முறைமை மாற்றம்’ என்பதை நோக்கி இத் திருப்பு முனை நகர்கிறது என்கின்றனர் சில அரசறிவியலாளர்.
‘சிஸ்டம் செஞ்’ என்பதை பலவிதமாக அர்த்தப்படுத்தினாலும் அரசியலமைப்பிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் இருப்பதை மேம்படுத்தும் சீர்திருத்தங்களாகவே அமையும்.
ஊழல் அற்ற ,ஏற்ற தாழ்வு இல்லாத நிர்வாகம் அடிப்படை மாற்றத்திற்கான ஆரம்பமாக இதனைக் கொள்ளலாம். அதுவே ஒரு கட்டமைப்புக் கோட்பாடாக மாறாது.
தே.ம. சக்தி சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் , இந்திய-மேற்குலகின் மைய நீரோட்ட ஊடகங்கள், ‘இடதுசாரிகள் மார்க்சிசவாதிகள் வெற்றி பெற்று விட்டனர்’ என்று தலைப்புச் செய்திகளை வெளியிட்டனர்.
ஆயுதக் கிளர்ச்சி ஊடாக புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் , முதலாளித்துவ தேர்தல் முறைமை ஊடாக அடிப்படை சோஷலிஸக் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார்களோ என்று இவ் வல்லரசுகள் அச்சப்படுகின்றன.
இதுவரை ஆண்ட நவ தாராண்மைவாத தரகர்கள் , தேசிய இன முரண்பாட்டினை ஊக்குவித்து நாட்டினை அழிவுப் பாதையில் இட்டுச் சென்று , இறுதியில் வங்குரோத்து நிலைமையில் அனைத்து மக்களின் இறைமையை அடகு வைத்துள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட ஆழமான பாதிப்பினை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமது பிராந்திய பூகோள நலனை அடைந்திட முயலும் போது , அதற்கு இசைந்து போகாத ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டதென இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். அதுவே இந்த மார்க்சிச முலாம் பூசலின் வெளிப்பாடு எனக் கொள்ளலாம்.
இந்த பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட அரச கட்டமைப்பின் பலவீனம் , திடமான வெளியுறவுக் கொள்கையினை உருவாக்க முடியாததொரு இக்கட்டான நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியர் காமினி கீரவேல அவர்கள் கூறுகின்றார்.
இலங்கைக்காக இருதரப்பு , பலதரப்பு மற்றும் சர்வதேச கடன் முறித்தரப்பு என்போருடன் பேசும் சர்வதேச நாணய நிதியமும் மறைமுகமாக மேற்குலகத்தின் உடனான வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்துகிறது.
கடன்களை செலுத்த முடியாதென கூறினால் , எந்த முதலீடுகளும் நாட்டுக்குள் வராது.
‘முதலையும் வட்டியையும் நீண்ட காலத்திற்குப் பிறகு தருகிறோம்'[Reprofiling] என்று ரணில் உடன்பாடு காணவில்லை.
மாறாக முறிகளின் ‘முதல்’ குறைப்பையும் [Haircut]வட்டிக் குறைப்பையும் முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் புதிய அதிபர் அநுரகுமார திசாநாயக்க அவர்கள் , நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும் , அவருக்கு முன்னால் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.
நாடு பெற்ற கடன்களை வைத்தே அடுத்த பூகோள அரசியல் ஆட்டம் ஆரம்பமாகும்.
அண்மைய நேர்காணல் ஒன்றில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்திய முதலீடுகள் குறித்து கூறியது கவனிப்புக்குரியது.
ஊழலற்ற. வெளிப்படைத்தன்மை உள்ள , தமது பொருளாதாரக் கொள்கைக்கு இசைந்து பயணிக்கக்கூடிய முதலீடுகளை நாம் வரவேற்போம் என்றார்.
இதற்கிடையே அனுராவிற்கு வாழ்த்துச் சொல்ல ஓடோடி வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறித்தும் பேச வேண்டும்.
இந்த சந்திப்புதான் என்பிபி என்று அழைக்கப்படும் ஜேவிபி யானது அதிகார நாற்காலியில் இருந்தவாறு ஒரு வல்லரசு நாட்டினை எதிர்கொண்ட முக்கிய நிகழ்வாகும்.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்தார்.
அவர் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசியது தமிழர் தரப்பிற்கு மகிழ்ச்சி.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நினைவுபடுத்தவே பதின்மூன்றை ஜெய்சங்கர் குறிப்பிட்டார் என்பது சிங்கள தரப்பிற்கு தெளிவாகப் புரியும்.
அநேகமாக சர்ச்சைக்குரிய தென்கடல் அடியில் உள்ள கனிமவள பாறைகள் குறித்தும் பேசியிருக்க வேண்டும்.
இரண்டாவது நிகழ்வாக சீனாவின் பாய்மர போர்க்கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகிறது.
வழமை போல் இந்தியத் தரப்பிலிருந்து அச்சுறுத்தலைக் காணவில்லை. அமைச்சர் விஜித ஹேரத்தின் கப்பல் குறித்த விளக்கங்களும் தெளிவாக வித்தியாசமாக இருக்கிறது. ‘எல்லோரையும் சமமாகப் பார்க்கிறோம்’ என்கிறார்.
ஆனாலும் தற்போதைய பல்துருவ உலக ஒழுங்கில் , எல்லோரையும் சமமாக நண்பர்களாக பார்ப்பதென்பது யதார்த்தபூர்வமானதல்ல.
பிரிக்சில் இணைவதற்கு இந்தியாவை அணுகுவது யதார்த்த அரசியல். அது தென் உலகத்தின்[Global South] முக்கிய அணி என்பதை இடதுசாரிகள் புரிந்து கொள்வர்.
ஆகவே இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியின் முழுமையான தோற்றம் புலப்படாது.
நாட்டின் பொருளாதாரம் நிமிரும் வரை , நிர்வாகக் கட்டமைப்பை சீர் செய்வதிலும் மக்களின் நன்மதிப்பினைப் பெறுவதிலும் அரசு அதிக கவனம் செலுத்துமென எதிர்பார்க்கலாம்.
இருப்பினும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் தீவிரவடையுமாயின் முன்னேற்றம் தடைப்படும் வாய்ப்புகள் அதிகம்.