03

03

“நான் ஒரு திறமையானவன். ஏனெனில் எனக்கு ஒன்றும் தெரியாது” – மு நித்தி: ஒரு தேடி!

மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால துன்பியல் வரலாறு என்பது வெள்ளைக்கார பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று எழுபது ஆண்டுகளுக்குப் பின் இன்னமும் தொடர் கதையாகவே இருக்கின்றது. இன்றும் இந்த மக்கள் அடிமைத்தளைகளில் இருந்து தங்களை விடுவிக்க முடியாதபடி சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளால் விலங்கிடப்பட்டுள்ளனர். இலங்கையின் பிரபல்யமான சிறுநீரக மாற்று மருத்துவமனை கண்டியில் உள்ளது. ஏன்? தோட்டங்களில் தேயிலை பிடுங்கியவர்கள் தலைநகரில் தேநீர் கடைகளுக்குள் முடக்கப்படுகின்றனர். ஏன்? இந்த 21ம் நூற்றாண்டிலும் தேயிலை கொழுந்து பிடுங்குவதில் தானே மலையகத்தில் போட்டி நடத்துகின்றனர். ஏன்?

இதற்கு சிங்கள பௌத்த தேசியவாதம் தான் முழுக்காரணம் என்று சொல்லிவிட்டு நாங்கள் யாரும் கைகழுவிட முடியாது. இந்நிலை தொடர்வதற்கு சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பரபம்பரை அரசியலுக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கையின் பொருளாதாரத்தின் அடிநாதமாக இருந்த மக்களின் முதுபெலும்பை அவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஒடித்ததில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் ஜி ஜி பொன்னம்பலம் முக்கியமானவர்.

தமிழ் சிறுபான்மையினத்தின் அரசியல் அபிலாசைகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படவும் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களோடு சமூகமான உறவைப் பேணவும் மிகுந்த தடையாக இருப்பது இவ்வாறான துரோகத்தனங்களும் நயவஞ்சகமான சூழ்ச்சிகளுமே. பெரும் நிலச்சுவந்தராக இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சியில் பலநூறு ஏக்கர் நிலத்தைக் கொண்டிருந்த போதும் தங்கள் பரம்பரையிழைத்த பாவத்திற்கு ஒரு பிரயாச்சித்தம் கூடச் செய்யவில்லை. இன்னும் கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பிரதேசத்தில் வாழும் மலையக மக்களுக்கு எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் இல்லை. மலையகத் தமிழர்கள் பற்றிய வடக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் தலைமைகளின் பரிவு என்பது முதலைக் கண்ணீர்.

மலையகத் தமிழர்கள் பற்றிய மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை இதனிலும் மோசமானது. அவர்கள் அம்மக்களை எப்போதுமே அடிமையாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனையே இப்போதும் செய்கின்றனர். அவர்களை சுயமற்றவர்களாக தங்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே வைத்திருப்பது. அவர்களை எப்போதும் தோட்டங்களோடே கட்டிப்போடுவது. அதன் மூலம் அவர்களை காலத்துக்கும் அடிமையாக்குவது. மலையகத்தை விட்டு வெளியே வன்னிவரை வந்த மலையகத் தமிழர்களின் வாழ்நிலை மலையகத்தில் உள்ள மலையகத் தமிழர்களின் வாழ்நிலையோடு ஒப்பிடுகையில் கணிசமான முன்னேற்றத்தையே கொண்டுள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் தோட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தங்கள் கடின உழைப்பினால் அடைந்த முன்னேற்றம்.

ஆகவே மலையகத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியமும் சிங்கள பௌத்த பேரினவாதமும் தான் காரணம் என்று சொல்லிவிட்டு யாரும் தப்பித்துவிட முடியாது. தமிழ் சமூகமும் தமிழ் அரசியல் வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துவிட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூகமும் இவ்விடயத்தில் தங்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். மலையக அரசியல் கட்சிகள் மலையக அறிவியில் சமூகம் உட்பட.

ஆங்காங்கே சில தீவிர செயற்பாடுகள் சிலரினால் முன்னெடுக்கப்பட்டு அது மலையக மக்களின் வாழ்வியலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யும் விரல்விட்டு எண்ணக்கூடிய பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள். அவ்வாறானவர்கள் இலைமறை காயாகவே உள்ளனர். அந்த வகையில் கிளி விவேகானந்த வித்தியாலயமும் அதன் அதிபர் ஜெயா மாணிக்கவாசன் குறிப்பிடப்பட வேண்டியவர். முற்று முழுதாக மலையக தமிழர்கள் குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளோடு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று கிளிநொச்சியின் முன்னரங்க பாடசாலையாகவும் அரசின் கல்வித் திட்டங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தும் பாடசாலையாகவும் இயற்கையோடு ஒன்றிய பாடசாலையாகவும் மாகாண மட்டத்தில் பரீட்சைகளில் சாதனை படைத்த பாடசாலையாகவும் உள்ளது. இவ்விடத்தில் கிளிநொச்சியின் மற்றுமொரு பின் தங்கிய பிரதேசமாக உள்ள சாந்தபுரம் மகாவித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன் குறிப்பிடப்பட வேண்டியவர். அவர் மலையகத் தமிழர்களின் ஒரு உரத்த குரலாகவும் கிளிநொச்சியில் உள்ளார்.

இன்னல்களை அனுபவித்த, அனுபவிக்கின்ற மலையக மக்களின் இடைவிடாத குரலாக எனக்கு மிகவும் பரீட்சயமானவர் மு நித்தியானந்தன். ஏப்ரல் 01, 2023இல் நித்தியானந்தனின் 75வது பிறந்த தினத்தையொட்டிய பவள விழா லண்டனின் புறநகர்ப் பகுதியான ஸ்ரான்மோரில் (Stanmore) உள்ள பென்ற்லி ஹை ஸ்கூலில் (Bently High School) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மு நித்தியானந்தனின் மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல், மலையகச் சுடர் மணிகள், பெருநதியின் பேரோசை, ஆடல் எங்கேயோ அங்கு ஆகிய நான்கு நூல்கள் அந்நிகழ்வில் வெளியிடப்பட்டதுடன் ‘நித்தியம்’ என்ற தலைப்பில் மு நித்தியானந்தனின் பவள விழா மலரொன்றும் வெளியிடப்பட்டது.

நான் 1991இல் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த போது எனக்கு வயது இருபது. இயக்க மோதல்கள், பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகள், அதற்குப் பின் இந்திய இராணுவத்தின் வரவு பின் இந்திய இராணுவத்தின் வெளியேற்றம். இலங்கையிலும் தமிழ் பிரதேசங்களிலும் எங்களுக்கு எதிர்காலம் மட்டுமல்ல வாழ்வதே கேள்விக்குறியாகி இருந்த நிலையில் என்னைப் போன்று பலர், ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த காலம். வட்டுக்கோட்டையில் இருந்து யாழ் நகருக்கு சைக்கிள் மிதித்துச் சென்றால் யாழ் நகரின் பிரதான சந்திகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழு கழுத்தை வெட்டி முண்டத்தை மட்டும் போட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள் அல்லது புலிகள் நெற்றியில் பொட்டு வைத்து மின்கம்பத்தில் கட்டிவிட்டிருப்பார்கள். யாருக்கு யார் துரோகி என்ற குழப்பமான காலகட்டம். புளொட், ரெலோ போன்ற அமைப்புகளும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கொலைகளினூடாக நிரூபிக்கத்தவறவில்லை. வே பிரபாகரன் அதற்கு முன்னரே கூட இருந்த பலரைப் போட்டுத் தள்ளியருந்தாலும் சுந்தரம் படுகொலை முதலாவது சகோதரப் படுகொலையானது.

இவ்வாறான பின்னணியில் தான் அன்றைய செய்திகள் இருந்தது. அன்றைய காலகட்டங்களில் கொலை, கொள்ளை என்பதெல்லாம் எண்ணிக்கையின் அல்லது மதிப்பீட்டின் அடிப்படையில் தான் முன்பக்கத்திற்கு வரும். எம் என் எம் அனஸின் மொழியில் சொன்னால் அது ‘பிணம் செய்த தேசம்’.

அப்போது, நித்தியானந்தன், வண பிதா சிங்கராயர், குட்டிமணி, தங்கத்துரை, நிர்மலா போன்ற பெயர்களை பத்திரிகைகளில் அறிந்த காலம். அதன் பின் 1983 வெலிகடைப்படுகொலை. அதில் தப்பியவர்கள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டது. மட்டக்களப்புச் சிறையை புளொட் வாசுதேவா – ஈஸ்வரன் – அசோக் ஆகியோர் உடைக்கத் திட்டமிட்டதும் உடைத்ததும் மு நித்தியானந்தன் இந்தியாவுக்குச் சென்றதும் நிர்மலா “புலிகள் வந்து கூட்டிக்கொண்டு போனால் தான் சிறைக்கு வெளியே வருவேன்” என்றதும் பத்திரிகைகளிலும் செவிவழியாகவும் அறிந்த தகவல்கள். இவ்வாறுதான் நித்தியானந்தன் எனக்கு அறிமுகமாகி இருந்தார். அவர்களை புலிகளாக கருதியிருந்த காலம். இந்த தகவல்களுக்கு அப்பால் 1991இல் இலங்கையைவிட்டு லண்டனுக்கு புலம்பெயர்ந்த போது எனக்கு இவர்கள் தொடர்பில் வேறேதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் மீது ஒரு பிரமிப்பு இருந்தது.

லண்டனுக்கு வந்த எனக்கு தீப்பொறி குழுவினருடன் ஊரிலிருந்தே தொடர்பு இருந்ததால் லண்டனில் நடைபெறுகின்ற இலக்கிய, சமூக, அரசியல் சந்திப்புகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்த நட்புவட்டம் வளர்ந்தது, விரிந்தது, ஆழமானது. இவ்வாறு நித்தியானந்தனும் அறிமுகமாகின்றார். என்னிடம் இருந்த பிரமிப்பை நித்தியானந்தன் தன்னுடைய எளிமையான இயல்பான உரையாடலால் தகர்த்துவிட்டார். விரைவிலேயே நித்தி அண்ணையாகிவிட்டார்.

மு நித்தியானந்தனின் உரைகளின்பால் நான் மிகவும் கவரப்பட்டேன். அவருடைய கதை சொல்லும் நளினம், எளிமை மிகவும் கவர்ச்சியானது. கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டும் அவருடைய ஆளுமை மிகச் சிறப்பானது. கல்வியியல் கோட்பாட்டாளர்களில் ஒருவரான ஸ்கினர் நடத்தையியலாளர் “யாரும் எதையும் கற்கலாம்” என்பவர். சிறு குழந்தைக்கும் விண்வெளிக்கு ரொகட் விடுவதை கற்பிக்க முடியும் என்பவர். மு நித்தியானந்தனின் உரையில் இதனைக் காணலாம். யாருக்கும் எதனையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

என்னுடைய வாசிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும் நித்தியானந்தனின் உரைகளுக்கூடாக பலநூல்களை வாசித்த அனுபவம் கூட்டத்தின் முடிவில் எனக்கு ஏற்படும். அதில் நித்தியானந்தன் எவ்வித மாயவித்தையையும் மேற்கொள்ளவில்லை. தான் உரையாற்றுவதற்கு முன்னர் அதற்கான ஆய்வுகளில் மூழ்கி தன்னைத் தயார்படுத்தியிருப்பார். தன்னுடைய உரையைக் கேட்போரின் நேரத்தை அவர் மிகவும் மதிப்பவர். அதனால் தான் அதற்கான முன் தயாரிப்போடு புதிய தகவல்களோடும் புதிய பார்வையோடும் அவர் கூட்டத்திற்கு வருவார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் 1997இல் நானும் ‘தேசம்’ என்ற சஞ்சிகையை ஆரம்பித்தேன். புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக லண்டனில் நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாக இணைய ஊடகமாக (தேசம்நெற்) தற்போது காட்சி ஊடகமாகவும் (தேசம்திரை) வந்துகொண்டிருக்கின்றது. 2000ம் ஆண்டு காலகட்டங்களில் லண்டனில் புலிகளுக்கு ஆதரவில்லாத தரப்பினரால் நடத்தப்படும் கூட்டங்கள் என்றால் அது தேசம் நிகழ்த்தும் கூட்டமாகமே இருந்த காலம். தேசத்தின் ஆரம்ப நாட்களில் நித்தியானந்தனின் உணர்வுபூர்வமான ஆதரவு மிகக் காத்திரமானது. தேசத்தின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது, உரை நிகழ்த்துவது, நூலாய்வுகளை மேற்கொள்வது என நித்தியானந்தன் மிகுந்த ஆதரவை வழங்கி வந்தவர். தேசம் ஏற்பாடு செய்த சண்முகதாசனின் நூல் அறிமுகவிழா, மலேசியத் தமிழ் இலக்கியம் – மாநாடு, யாழ் பொதுசன நூலக எரிப்பு நினைவு நிகழ்வு, மற்றும் பல அரசியல் கலந்துரையாடல்களில் மு நித்தியானந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

நான் எனது வாழ்வின் பிந்திய காலத்தில் எனது நாற்பத்து ஒன்பதாவது வயதிலேயே கலைமாணிப் பட்டத்தை முடித்து முதகலை மாணிப் பட்டத்தை முடித்து ஆசிரியரானவன். எனக்கு தேடலையும் ஆர்வத்தையும் தூண்டியதுடன் எனது தேடலுக்கு இரையூட்டியது புலத்தில் இடம்பெற்ற கலை, இலக்கிய, சமூக, பொருளாதார, அரிசியல் கூட்டங்கள் அங்கு நடைபெறும் விவாதங்கள் தர்க்கங்கள். எனது எழுத்தாற்றலையும் கூட நான் புலத்திலேயே வளர்த்துக்கொண்டேன். எனக்கு தமிழில் இருந்த ஆளுமையே அதனை ஆங்கிலத்திற்கும் மாற்றிக்கொள்ள உதவியது. என்னுடைய தேடலின் வளர்ச்சியில் நித்தியானந்தனின் பங்கும் கணிசமனது.

நித்தியானந்தனேடு நெருக்கமான சிலரை கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியிருந்ததால் நித்தியானந்தனோடு ஒரு முரண்பாடு ஏற்பட்டது. இருந்த போது 2016இல் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை ” என்ற என்னுடைய நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு காத்திரமான விமர்சன உரையை வழங்கி இருந்தார். அந்நூலில் இஸ்ரேலிய மொசாட் படைகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்ததைக் குறிப்பிட்டு இருந்தேன். அதுபற்றி மற்றுமொரு ஆய்வாளர் கேள்வி எழுப்பிய போது என்னால் உடனடியாக அந்த தகவல் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. ஆனால் நித்தியானந்தன் எந்தப் புத்தகம் அது யாரால் எழுதப்பட்டது என்பதை அவ்விடத்தில் உடனடியாகவே சுட்டிக்காட்டினார்.

ஒரு மாணவனின் கல்வியியல் ஆளுமையில் அவன் ஆசானின் கல்வியியல் ஆளுமை மிகுந்த தாக்கத்தைச் செலுத்தும். ஒரு பேராசானாக நித்தியானந்தன் தன்னுடைய உரைகளுக்கு மேற்கொள்ளும் தயாரிப்புக்கள் எங்களிலும் துளித்துளியாக தாக்கத்தைச் செலுத்தி உள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வி என்பது ஒரு அனுபவம். அது ஒப்பீட்டளவில் நிரந்தரமான மாற்றத்தை மனிதர்களின் நடத்தையில் பழக்கத்தில் ஏற்படுத்தும். அவ்வாறான மாற்றத்தை நித்தியானந்தன் என்னில் ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு இந்றைய நாளில் எனது பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

“எனக்குத் தெரியும் நான் ஒரு திறமையானவன் என்று ஏனென்றால் எனக்குத் தொரியும் எனக்கு ஒன்றும் தெரியாது என்று – ‘I know that I am intelligent, because I know that I know nothing” என்று சொன்னவர் தத்துவமேதை சோக்கிரட்டிஸ். அப்படித்தான் நித்தியானந்தனும் அவருக்கு ஒன்றுமே தெரியாது. அதனால் அவர் 75 வயதிலும் இளமையோடு தேடுகின்றார். தேடிக்கொண்டே இருக்கின்றார். தன் அறிவுக் கண்களைத் திறந்து வைத்து எமது அறிவுப் பசியையும் ஆற்றுகின்றார்.

நானும் சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றேன். எனக்கு விடை தெரியாத கேள்விகள் சிலவற்றுக்கு விடையை அறிய ஆவலாக இருக்கின்றேன். கேள்விகளில் முட்டாள்தனமான கேள்விகள் இல்லையென நம்ப விரும்புபவன் நான். அதனால் இதனை கேட்டுவிட வேண்டும் என நினைக்கிறேன்.

கேள்வி ஒன்று: எனக்கு தெரிந்தவரை நித்தியானந்தன் ஒரு இடதுசாரி. மனிதத்தை மனித நேயத்தை மதிப்பவர். அப்படியிருக்கையில் இடதுசாரிக் கருத்துக்களில் ஆர்வம்கொண்டவர்கள் எந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தனர்? வே பிரபாகரனை தலைவராக ஏற்றனர்? இது வே பிரபாகரனின் ஆளுமையா? இடதுசாரிகளின் ஆளுமையின்மையா? கருத்தியல் தோல்வியா?

கேள்வி இரண்டு: இன்றைய பவள விழாவிற்கு 25 ஆண்டுகளுக்கு முன் 50வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டிருந்தால், அது இவ்வாறு அமைந்திருக்க வாய்ப்பேயில்லை. இது கருத்தியல் சமரசமா? அல்லது கருத்தியல் அம்னீசியாவா?

மு நித்தியானந்தன் ஒரு சிறந்த ஆய்வாளர் விமர்சகர். அவருடைய பவளவிழாவில் ஒரு கேள்வியை முன் வைக்காமல் நிகழ்வை முடிவுக்கு கொண்டுவருவது பூரணத்துவத்தைத் தராது என்பதற்காக மட்டுமே இக்கேள்விகள்.

 

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ள சஜித் தரப்பு.”- அனுரகுமார திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளும் என எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொலன்னாவையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க குறித்த குழு தீர்மானித்துள்ளது என்றும் ஆகவே அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பணத்திற்காக தமது நாடாளுமன்ற ஆசனங்களை தமது கட்சியினர் தியாகம் செய்ய மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிங்கள மயமாக்கப்படும் தமிழரின் பூர்வீக விவசாய நிலங்கள் – முல்லைத்தீவில் 180 சிங்கள் குடும்பங்களை குடியமர்த்த முயற்சி !

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் காவல் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு 180 சிங்களக் குடும்பங்களை குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அதிபரின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இன்று(3) கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு முன்னாள் வடமாகாணசபை துரைராசா ரவிகரன் மற்றும், காணிகளுக்குரிய தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த 1973, 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கமுடியாதெனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களான கெக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச் சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச்செய்து அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறும் !

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறும் இலங்கை!நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன்படி, இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கான இறுதி மூலோபாய ஒழுங்கமைப்புத் திட்டத்தை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (31) நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்திற்கு கலந்து கொண்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் இந்நாட்டில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான திட்டம் அமைச்சின் செயலாளரால் முன்வைக்கப்பட்டது.

ஜெனிவா சர்வதேச மனிதநேய கற்றலுக்கான கண்ணிவெடி அகற்றும் நிலையத்தின் ஆதரவுடன் தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், நாட்டை கண்ணிவெடிகளில் இருந்து விடுவிக்க தேசிய மற்றும் சர்வதேச பங்காளரர்களுடன் நெருக்கமாக பணியாற்ற இருப்பதாக அரசாங்கம் எதிர்பார்த்தள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல், கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நாட்டில் இயங்கி வருகின்றதுடன், 2010 ஆம் ஆண்டு ´தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையம்´ ஆரம்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கிய இந்த நிலையம் தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவின் கீழ் செயற்படுகின்றது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, வழிநடத்துவதோடு கண்காணிக்கிறது.

இலங்கை இராணுவம் நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குவதோடு அது இலங்கை இராணுவத்தின் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் அலகுகள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இரண்டு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. மற்ற 4 அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து வழங்கப்படுகிறது.

இதுவரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 204 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து ஆளணிக்கு எதிரான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன. ‘தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தின்படி’, கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி) டபிள்யூ.எம். ஆனந்த, ஜெனிவா சர்வதேச மனிதநேய கற்றலுக்கான கண்ணிவெடி அகற்றும் மையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஓசா மஸ்லிபெர்க், தேசிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டுத்திட்ட நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் வீ. பிரேமச்சந்திரன், இலங்கை இராணுவத்தின் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் அலகின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தன, பிரதம அதிகாரி (2) மேஜர் ரஜித அம்பலன்பிட்டிய உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக இணைகிறது பின்லாந்து !

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக பின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார். உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் பின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவில் சேரத்துடிக்கும் பின்லாந்து; வரவேற்கும் நேட்டோ... எச்சரிக்கும்  ரஷ்யா! | Russia warning Finland about its idea of joining NATO - Vikatan

“இது ஒரு வரலாற்றுப்பூர்வமான வாரம். நாளை முதல், பின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது. நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக நாளை நாங்கள் பின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். பின்லாந்து பாதுகாப்பு, ஆர்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதிற்கும் நல்ல நாளாக இருக்கும்,” என்று ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய ஆட்சேபனை இல்லை என கடைசி நாடாக துருக்கி நாளை கையெழுத்திட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோனி ப்ளிங்கனிடம் துருக்கி ஒப்படைக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி அண்டி கைகொனென் மற்றும் வெளியுறவு துறை மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர். “இது எங்களுக்கு பெருமை மிக்க தருணம் ஆகும். சந்திப்பின் போது, ரஷ்யாவின் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு அதிக ஆதரவு அளிக்க நேட்டோவை வலியுறுத்துவதே பின்லாந்துக்கு மிக முக்கிய குறிக்கோள் ஆக இருக்கும். ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பகுதி முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தவே நாங்கள் நினைக்கிறோம்,” என்று ஹாவிஸ்டோ தெரிவித்துள்ளார்.

மூன்று அரசியல் கைதிளை விடுதலை செய்தது வவுனியா மேல் நீதிமன்றம் !

வவுனியா மேல் நீதிமன்றினால் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விடுதலையானவர்கள், சுலக்சன், தர்சன், திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இவர்கள் தொடர்பான வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது அரசியல் கைதிகள் சார்பாக சட்டத்தரணி அன்ரன் புனித நாயம் முன்னிலையாகியிருந்தார்.

இவ்வாறு விடுதலையான தமிழ் அரசியல் கைதிகளுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நேரில் சென்று வரவேற்பளித்துள்ளார்.

சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் போராட்டம் !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றநிலையில் பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கில் 14 கடற்றொழிலாளர் சங்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பருத்தித்துறை பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருந்த நிலையில் தீடீரென வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்போது அவ்வழியே வருகைதந்த நீதவானும் போராட்டம் காரணமாக திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எமக்குரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் நிதி மோசடி – இலங்கையில் தங்கியிருந்த 39 சீன பிரஜைகள் கொண்ட குழு கைது !

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகள் கொண்ட குழுவொன்று அளுத்கமவில் கைது செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்களிடம் பணத்தை மோசடி செய்த குழு சீன அதிகாரிகளுடன் உள்ளூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள சீனாவினால் தேடப்படும் மூன்று குற்றவாளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சனிக்கிழமை (01) கைது செய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் சிறுவர் ஒருவர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கடந்த 6 மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்ததாகவும், சிலரை அவர்களது விருப்பத்திற்கு மாறாக தங்கவைத்து ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட வற்புறுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட பிரதான ஆட்கடத்தல்காரரால் எடுத்துச் செல்லப்பட்ட கடவுச்சீட்டுகள் மூன்று சந்தேக நபர்களிடம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கணனிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சியில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 91 குடும்பங்கள் பாதிப்பு !

கிளிநொச்சியில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மதியம் 12 மணிக்கு பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளிலே குறித்த அனர்த்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி கிளிநொச்சியில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் முறிந்து சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன. குறித்த பாடசாலைக்கு முன்னால் இருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து வீதியில் விழுந்துள்ளது.

கிளிநொச்சி நகர் மற்றும் பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கண்டாவளை பகுதியில் வாழைத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த அனர்த்த பாதிப்புக்களின் மதிப்பீடுகள் தேசிய அனர்த்த சேவைகள் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நாவலர் கலாசார மண்டபத்தை வடமாகாண ஆளுநர் அரசுக்கு கையளித்த விவகாரம் – மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் !

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குறித்த வழக்கை இன்றையதினம் (03) தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்தார்.

குறித்த விடயத்தை கைவிடக்கோரி யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 28 பேரின் கையொப்பத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜரொன்றும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபனால் கையளிக்கப்பட்டநிலையில் தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.