30

30

மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். – சாகர காரியவசம்

எமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்; மேலும் குறிப்பிட்டதாவது,

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் கூட்டத்தை நடத்த முடியவில்லை.அதே போல் 2022 ஆம் ஆண்டு முறையற்ற போராட்டத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியவில்லை.

பாரிய போராட்டத்துக்கு மத்தியில் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.மே தின கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பை சகல அரசியல் கட்சிகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எமது மக்கள் பலத்தை நாளைய தினம் கெம்பல் மைதானத்தில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் வெளிப்படுத்துவோம்.மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் வெகுவிரைவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள்.

மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான எமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுக்கூட்டங்களை இனி முன்னெடுப்போம் என்றார்.

840,000 அமெரிக்க டொலர்கள் மோசடி – அமெரிக்காவில் இலங்கை மருத்துவருக்கு சிறை !

அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து  அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை பெற்று, மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு பிரிட்ஜ்போர்ட்  நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில்  பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர், தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மனநல சேவைகளை வழங்குவதற்காக மாநில மருத்துவ காப்பீட்டிலிருந்து சுமார் 840,000  அமெரிக்க டொலர்களை பெற்று மோசடி செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

முல்லைத்தீவை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் !

இலங்கையில் இருந்து மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்டு மெரைன் பொலிசார் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்கு அகதிகள் வந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த தகவலின் பெயரில் மெரைன் பொலிசார் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு சென்று பார்க்கும் பொழுது அரிச்சல் முறை கடற் பகுதியில் இலங்கை முல்லை தீவு தீர்த்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உள்ளிட்ட ஏழு பேர் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை வந்தவர்களை மெரைன் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வைத்து விசாரணை செய்யும் பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழி இன்றி இலங்கை முல்லைதீவு தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்த நியூட்டன் வில்லியம், வனிதா, தோனி, ஜோன், விஷால், ஷாலினி, அதிஸ், ஆகிய ஏழு பேர் இலங்கையில் இருந்து இலங்கை பணம் கொடுத்து மர்ம படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சென்று இறங்கியது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடம் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து கியூ பிரிவு போலீசார் மற்றும் மரைன் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இலங்கையில் இருந்து இன்று வருகை தந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 244 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படுகிறது எரிபொருள் விலை !

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கைபெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 7 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 365 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

மேலும், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 310 ரூபாவாகும்.

அரச பல்கலைக்கழகங்களின் கலைப்பீட மாணவர்களுக்கு இரண்டு பட்டங்கள் – வெளியாகியுள்ள முக்கியமான அறிவிப்பு !

பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் முலமாக கலைப் பீட மாணவர்களுக்கு இரண்டு பட்டங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

 

பெண்ணொருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை !

பெண்ணொருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை, தொரமடலாவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 47 வயதுடைய நபர் ஒருவரை மிஹிந்தலை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

தனது தாயுடன் வசித்து வரும் குறித்த பெண், நேற்றையதினம் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அந்தசமயம் வீட்டினுள் நுழைந்த பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த நபர் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

வெளியில் சென்று வீடு திரும்பிய குறித்த பெண்ணின் தாய், ​​மகள் படுக்கையில் சுயநினைவின்றி இருப்பதையும், பிறிதொரு நபர் வீட்டில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அவசர நோயாளார் காவுவண்டியை வரவழைக்கப்பட்டுள்ளது, பின்னர் அங்கு வந்து மருத்துவ உதவியாளர்கள் அந்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவும், சந்தேகநபரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்த தனியார் காணியொன்றில் விகாரை அமைக்க பௌத்த பிக்கு ஒருவர் விண்ணப்பம்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தனியார் காணியொன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும் அதன் எச்சங்களும் காணப்படுகின்றன.

அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

இந்நிலையில், தமிழ் பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்துக்கு அருகில் நபரொருவருக்கு சொந்தமான சுமார் 6 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் ஒரு வருடத்துக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

அதனையடுத்து, அந்த பிக்கு, குறித்த காணிக்குள் தான் விகாரை ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவித்தும், விகாரை அமைப்பதால் காணிக்கு அருகில் உள்ள தொல்லியல் எச்சங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா, குறித்த காணியில் விகாரை அமைக்கலாமா என அனுமதி கோரியும் தொல்லியல் திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க அனுமதி வழங்கியவுடன், ஏனைய அனுமதிகளை விரைந்து பெற்று, விகாரை கட்டுமான பணிகளை தான் விரைந்து நிறைவேற்ற பிக்கு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.