05

05

92 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் தலைமன்னாரில் மூன்று இந்தியர்கள் கைது !

சுமார் 92 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களுடன் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்திய பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

தலைமன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான படகை பரிசோதித்துள்ளனர்.

இதன்போது, குறித்த படகில் 3 பைகளில் 95 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த ஹஷிஸ் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கையிருப்புடன் கூடிய படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் – பெண் ஒன்றாக அமரதடை – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விசனம் !

ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜீவ அமரசேனவின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் புதிய கொள்கையொன்றை அமுல்படுத்தியதால் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் ஒன்றாக அமரக்கூடாது எனவும் பல்கலைக்கழகத்தின் பெஞ்சுகள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக, வளாகத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் அடக்குமுறையை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழக உபவேந்தரின் செயற்பாடுகள் தவறானவை எனவும், அது பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர தினத்திற்குள் தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக கூறிய ஜனாதிபதி ரணில் சித்திரை முடிய வெடுககுநாறி ஆலய பிரச்சினைக்கு தீர்வு தருவதாக புதிய உறுதி !

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெறியாத நபர்களால் கடந்த மாதம் தகர்தெறியப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாராளுமன்றத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று அது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சனை தொடர்பில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.

இப்பிரச்சினைக்கு புத்தாண்டின் பின்னர் தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அத்தோடு இவ்விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்மையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என்றார்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்ததும் பதவியேற்ற போது இந்த வருடம் (2023.02.04) சுதந்திர தினம் முடிவதற்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தருவேன் என கூறி தென்னிலங்கை பகுதியில் தற்காலிமாக பொருளாதார பிரச்சினைகளை மீள இனவாதத்தின் பக்கம் திருப்ப முயன்றிருந்தார். இன்று வரை குறித்த தீர்வு தொடர்பில் சுதந்திர தினம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இன்றுவரை தீர்வு இல்லை. நல்லாட்சி அரசிலும் ரணில் விக்கிரமசிங்க இதனையே செய்தார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்ட போது உடனடியாக  தீர்வு தருவதாக கூறி அன்று போராட்டத்தை முடக்கியவர் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வு இல்லை.  இது ஒருபுறம் இருக்க தற்போது “வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படும்.” என அறிவித்திருப்பதும் கூட ஏமாற்று அரசியலின் ஒரு பக்கமே.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகமே மேற்கொள்கிறது – நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி அபகரிப்பு நடவடிக்கை தனக்கு தெரியாது என ஜனாதிபதி குறிப்பிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலகத்தில் சேவையாற்றும் கீர்த்தி தென்னகோனே முன்னெடுத்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண ஜனாதிபதி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.

ஆட்சியாளர்கள் எடுத்த தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல்சேவையை ஆரம்பித்தால் பல செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை இனி திறைசேரியால் பாதுகாக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நட்டம் அடைவதாகவும் அமைச்சர் கூறினார்.

நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் 1029 பில்லியன் ரூபா எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு வரியாக 28 பில்லியன் ரூபாவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சந்தை ஏகபோக உரிமை அரசாங்கத்திற்கு இருந்தாலும், இந்த நிறுவனங்கள் நஷ்டமடைந்து வருவதாக அமைச்சர் கூறினார்.

மேலும், திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குவது என்பது இந்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை இந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்குவது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, அரசாங்கம் மக்களுக்கு சுமையை அதிகரித்து நிறுவனங்களை பராமரிக்காமல், ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகவே செயற்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இளைஞர்களுக்கு தென்கொரியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பு!

பொன்னையா சுப்பிரமணியன்: காணாமல் ஆக்கப்பட்ட மலையகக் குரல்! – காணொலி

மணியன் மாஸ்ரர் என்றழைக்கப்படும் பொன்னையா சுப்பிரமணியன் மலையகத்திலிருந்து வடமாகாணத்துக்குப் புலம்பெயர்ந்து வன்னியில் மலையகத் தமிழர்களின் குரலாக இருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் மொழிபெயர்பாளராக இருந்த இவர் வன்னி இறுதி யுத்தத்தின் பின் வன்னியில் இருந்த மலையக மக்களின் குரலாகச் செயற்பட்டவர். பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் உட்பட இன மத பேதம் கடந்து பல தரப்பட்ட அரசியல் கட்சிகளோடும் தொடர்பில் இருந்தவர்.

இந்நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட சில வாரங்களுக்குள்ளாகவே இவர் காணாமல் ஆக்கப்பட்டார். இவர் காணாமல் ஆக்கப்படுவதற்கு முற்பட்ட காலகட்டங்களில் இவர் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் மிகுந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தார். எஸ் சிறிதரன் மலையகத் தமிழர்களை அவமதித்துப் பேசிய ஓடியோ பதிவுகள் வெளிவந்திருந்த காலம். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனை அம்பலப்படுத்துவதில் முன்நின்றவர். அதனைத் தொடர்ந்தே அவர் காணாமல் ஆக்கப்பட்டார்.

மிகவும் அறியப்பட்ட, உயர்மட்ட அரசியல் தலைமைகளோடு உறவுகளைக் கொண்டிருந்த போதும் மலையகத் தமிழர்களுக்கு தேயிலைத் தோட்டங்களில் மட்டுமல்ல வன்னி மண்ணில் என்ன நடந்தாலும் கேட்க நாதியில்லை என்ற நிலையே இன்னமும் தொடர்கிறது. 200 ஆண்டுகளுக்குப் பின்னும் மலையகத் தமிழர்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை.

அவர் காணாமலாக்கப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன் ஓகஸ்ட் 21 2016இல் பதிவு செய்யப்பட்ட இந்நேர்காணல் முதற்தடவையாக காணொலியாக வெளியிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம் அனலைதீவில் 420 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணம், அனலைதீவு கடற்பரப்பில் கடந்த மூன்றாம் திகதி 420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனலைதீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த இரண்டு படகுகளைக் கடற்படையினர் கடலில் வழிமறித்துச் சோதனையிட்ட போது, இரண்டு படகுகளில் இருந்தும் 420 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

அத்துடன் இரண்டு படகுகளில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அனலைதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.