சூடான் நாட்டில் இராணுவம், துணை இராணுவத்திற்கு இடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 200ஐ கடந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (ஆர்.எஸ்.எப்) துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இராணுவ தளபதி அப்தல் பதா அல் புர்கான் ஆர்எஸ்எப் தீவிரவாத ராணுவம் என்று கருத்து கூறியதால், அவருக்கும் துணை இராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தகாலோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் கார்டோம், ஓம்டர்மன் பகுதிகளில் இராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே 3வது நாளாக பலத்த மோதல் நடந்து வருகிறது.ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப் அறிவித்தது.
இந்நிலையில், சூடானில் இராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 200 பேர் கொல்லப்பட்டனர் என தெரிய வந்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் என மொத்தம் 1800 பேர் காயமடைந்திருப்பதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

