07

07

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டம் !

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து தமிழ் சமூகத்தின் கலாசார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என இந்து இயக்கத்தின் சர்வதேச தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த பிரச்சினையை இந்திய அரசு உணர்ந்து, இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டை முன்னேற்றவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் – ராஜபக்ஷ தரப்பு விளக்கம் !

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

“குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தொழிற்சங்கத்தினர் பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மக்களையும், அரசாங்கத்தையும் இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டும் அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வெளியேறும் வைத்தியர்கள் – திணறும் வைத்தியசாலைகள் !

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நான்கு சிறுவர் வைத்திய நிபுணர்கள் வெளியேறியமையினால், சிகிச்சைப் பிரிவை அண்மையில் மூடிவிட்டு, சிகிச்சை பெற்ற சிறுவர் நோயாளர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவுக்கு சொந்தமான சிறுவர் பிரிவு மூடப்பட்டமையால் மருத்துவ மாணவர்கள் மருத்துவப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீரவிடம் கேட்டபோது, ​​விசேட வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாகவும், மற்றுமொரு குழு வைத்தியர்கள் சென்றுள்ளதாகவும், எனினும் எத்தனை பேர் என கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

கணவன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் – விபச்சாரத்துக்கு வராத 22 வயது மனைவி மீது தாக்குதல் !

விபசாரத்தில் ஈடுபட வராத காரணத்தினால் இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி அவரது கையடக்கத் தொலைபேசியைக் பறித்துச் சென்ற விபசார விடுதியின் உரிமையாளரும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக வந்துரம்ப காவல்துறையினர் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட, ரன்டம்பே மற்றும் உரகஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை ரன்டம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த விபசார விடுதி பராமரிக்கப்பட்டு வருகிறது.

விபசார விடுதியை நடத்தி வந்த பெண் 52 வயதுடையவர் எனவும் தாக்குதலுக்கு இலக்கான பெண் 22 வயதுடையவர் எனவும் அவர் இந்த விபசார விடுதியில் சுமார் ஒரு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வந்துரம்பா காவல் நிலைய ஆய்வாளர் ஐ.டி. சி. கிரிஷாந்த, யூ.ஓ.பி. என்.ஏ அமரதுங்க, கே.பி.ஓ.எஸ். 5313 துஷாரி மற்றும் பி.ஓ. 28869 திலகரட்ன ஆகியோரால் குறித்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் உள்ளதால் அவரை பார்க்க சென்ற போது விபசார விடுதியின் உரிமையாளர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் விபசார விடுதியின் உரிமையாளர் அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்று விபசாரத்தில் அமர்த்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.