02

02

“அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் 20 ஆண்டுகள் சிறை.”- இலங்கையின் ஜனநாயகத்திற்கு சாவுமணியாக வருகிறது பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் !

“பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.” என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

விரைவில் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நாடாளுமன்றில்! தினேஷ்  குணவர்தன - தமிழ்வின்

இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல தரப்பினரும் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள், “

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது. ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.

மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக. தற்போதைய  ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத  தடுப்புசட்டம் வர்த்தமானியில்  பிரசுரிக்கப்பட்டது. அது  மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி  பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

2018 ம்ஆண்டு  குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள். இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல. இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது.” என தெரிவித்திருந்தார்.

இதே நேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.  மேலும்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயமுறுத்துவதாகவும், சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No description available.

இதே நேரம் இன்றைய தினம் இங்கிலாந்திலுள்ள இலங்கையர்களின் இணைவில் இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது அரசின் காட்டுமிராண்டித்தனமான போக்குக்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தி லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதே வேளை ராஜபக்சக்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடுத்து ராஜபக்சக்களின் இடத்தை பிடித்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெரமுண குழுவினருடன் இணைந்த வகையில் மக்கள் போராட்டத்தை அடக்கும் – ஜனநாயக உரிமைகளை பறிக்கும் – இன்னுமொரு மக்கள் போராட்டம் எப்போதும் ஏற்பட இடம்கொடுக்ககூடாது எனும் எண்ணத்தோடு செயற்படுவதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்ற நிலையில் இதன் நீட்சியே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம். இதுவரை காலமும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமே எதிராக அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பயங்கரவாத சட்டம் புதிய திருத்தப்பட்ட சட்ட மூலத்தினூடாக பெரும்பான்மை சிங்களவர்களுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.  குறிப்பாக வேகமாக சிங்கள இளைஞர்களிடையே பரவி விரும் ஜே.வி.பி கட்சியினரின் புரட்சிக்கருத்துக்களையும், அரகலய போராட்டங்களில் ஈடுபடும் சிங்கள இளைஞர்களையும் இந்த புதிய சட்ட மூலம் இலக்கு வைக்கின்றது என்பதே உண்மை .

அரசுக்கு எதிரான அரகலயாக்களின் போராட்டத்தில் பல்கலைகழக மாணவர்களின் பங்கு அதிகமாக இருந்த நிலையில் பல்கலைகழக மாணவர்களுக்கு எதிரான கடுமையான நிபந்தனைகளை அரசு கடுகதியில் செயற்பாட்டுக்கு கொண்டு வந்தததுடன் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களின் கல்வி இடைநிறுதப்படும் என அறிவித்திருந்ததுடன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ரணில் அரசாங்கம் கைது செய்திருந்தததுடன் அரகலய போராட்டங்களில் ஈடுபட்டடிருந்த பல இளைஞர்களையும் கூட ரணில் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ததது. இது சிங்களவரிடையே முதன்முறையாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான மனோநிலையை உருவாக்கியிருந்ததது என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் வந்திருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே “பயங்கரவாத  தடைச்சட்டத்தினை முன்னிலைப்படுத்திய போராட்டத்துக்கு யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் முழுமையான ஆதரவை எதிர்ப்பார்த்து நிற்பதாக கூறியிருந்தார்.

 

புதியபயங்கரவாத சட்டமூலம் தென்னிலங்கையரிடையே பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அதே நிலையில் இலங்கையில் ஜனநாயக போராட்டங்களை அடக்கப்படுவதற்கான ஒரு பாரிய சதியாகவே இதனை கொள்ள வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட் போது “ இது ஒரு பயமுறுத்தும் சட்டமூலம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த விதத்தில் இன்று நாங்கள் இங்கு பேசுவது போல் சுதந்திரமாக பேச முடியாது. ஜனநாயகத்திற்கு இடமில்லை, அவர்கள் நம் அனைவரையும் கைது செய்வார்கள். மீண்டும் அரகலய அல்லது புரட்சி மூலம், நாம் ஏதாவது செய்ய வேண்டும்.” என அவர் கூறியிருந்ததது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அச்சமான சூழலை தெளிவாக வெளிக்காட்டுகின்றது.

இதே நேரம் “அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகப்பு புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவதும் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு 20 வருட கால சிறை தண்டனை விதிக்கப்படலாம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது, ஆகவே இதனை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.” என தெரிவித்து சஜித் பிரேமதாஸ தரப்பும் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாரதூரமானது.’பயங்கரவாதம்’ என்ற சொற்பதத்திற்கு நீண்ட வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வரைவிலக்கணம் ஒன்றுக்கொண்டு முரண்பட்டதாக உள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 3(2) உறுப்புரையில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்,சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடல், தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் குழுக்களில் இணைதல் என 13 விடயங்கள் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் சிறந்தது தானே என ஒரு தரப்பினர் குறிப்பிட முடியும். நடைமுறையில் உள்ள தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் இவ்விடயங்களுக்கு தண்டனை வழங்க முடியும்,பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த காலங்களில் சட்டமாக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்,ஆகவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் என்பது விசம் கலந்த ஜஸ்கிறீம் என்று குறிப்பிட வேண்டும்.” என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.

“பயங்கரவாத தடைச் சட்டம் சிங்களவருக்கும் எதிராக திசைமாறும் போதுதான் அதனுடைய தீவிரத்தன்மையையும் – இன்னுமொரு பக்கத்தையும் சிங்களவர்கள் புரிவார்கள்.” என முன்பு தமிழ்த்தலைமைகள் கூறியதை இன்று தென்னிலங்கை படிப்படியாக உணர ஆரம்பித்துள்ளது என்பதே நிதர்சனம்.

 

யாழ்ப்பாணத்தில் சிறுவர் இல்லத்தில் இருந்து 13 சிறுமிகள் மீட்பு – வெளிவந்துள்ள பின்னணி !

யாழ்ப்பாணம் இருபாலையில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு மீட்கப்பட்ட 13 சிறுமிகளும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமிகளுக்கு தேவையின்றி விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிறிஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் இன்று முற்பகல் அங்கு சென்றனர்.

அதன்போது 13 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே இந்த 13 சிறுமிகளும். அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாய்களுடன் விளையாட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் தேவையின்றி வழங்கப்பட்டுள்ளது. சிறுமிகள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தம்மை வேறு சிறுவர் இல்லங்களில் சேர்க்குமாறு சிறுமிகள் 13 பேரும் கோரியுள்ளனர்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமிகள் 13 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இந்த சிறுவர் இல்லம் “மாணவர் விடுதி” என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளம் தொடர்பான தீர்மானங்கள் விவசாயிகளிடம் கலந்துரையாடமல் எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி – இரணைமடு குளத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெறும் சிறுபோகச் செய்கை தொடர்பிலான தீர்மானங்கள், பெரும்பாலான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதில் சிறுபோக நெற்செய்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி,  பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை !

வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி,  பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை விதித்து  சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகள் கறுப்புக் கொடியை பார்ப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை  ஏற்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தனது சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயாளர்களை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார ஊழியர்களின் பணிக்கு இதனூடாக இடையூறு ஏற்படும் எனவும்  சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார அமைப்புகளின் வளாகத்தினுள் கறுப்புக் கொடி ஏற்றுவதையும் பதாதைகளை காட்சிப்படுத்துவதையும் தவிர்க்குமாறு குறிப்பிட்டு சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சுற்றுநிருபத்தினூடாக  தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதனிடையே, தங்களது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு அளித்தால், கறுப்புக் கொடிகளை காட்சிப்படுத்த மாட்டோம் என அரச மற்றும் அரச தனியார் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.