இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநரும் , முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரண்ணாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் , அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது . முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது .
எனினும் , அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் . கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘ தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன் ‘ இருப்பதாகவும் , ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார் . ‘ மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் , இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவினை கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் இந்த முடிவு தொடர்பான கடுமையான கவலைகளை தெரிவித்துள்ளார்.
உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கையானது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிர்ஷ்டவசமானது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக – பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடரும் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை என வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார்.
என் மீது எந்தவிதமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனகொடவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடை தொடர்பில் ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அங்கு கருத்து தெரிவித்த இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன், “இந்த நாட்டின் வடமேற்கு மாகாண ஆளுநரான முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் பொருளாதாரத் தடை விதித்துள்ளனர் என்பதை இன்று அறிந்து கொண்டேன்.
கண்ணாடியால் ஆன வீட்டில் வாழ்ந்தால் கற்களை எறியாதீர்கள் என்ற ஆங்கிலப் பழமொழி உண்டு. அங்கிருந்து மேற்கத்திய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவோம். அவர்கள் சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இதைவிட அதிகமான பிரச்சனைகள் இவர்களுக்கு உண்டு.ஆனால் உள்பிரச்சினைகளில் தலையிடுவதை ஏற்க முடியாது. இலங்கை உட்பட இறையாண்மை கொண்ட நாடுகள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு விரிவுரை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அது உங்களுடையது. உள் பிரச்சனை.”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.