நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (22) சனிக்கிழமை ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82), பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76), கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83), மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காவல்துறைக் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவாளி நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
பின்னர், நேற்றிரவு புங்குடுதீவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போதே சந்தேக நபர் குறித்த கொலையை தானே செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
“நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன், அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன்.
அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர்.
அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.
அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.
நகைகளை மட்டும் அபகரித்துச் சென்றால் காவல்துறையினர் எளிதில் பிடித்துவிடுவார்கள், அதனால் காவல்துறை விசாரணையை திசை திருப்ப அனைவரையும் கொலை செய்தேன்” என சந்தேக நபர் காவல்துறை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருட்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.