26

26

போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர் !

தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா்.

இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, உயா் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018ல் தீா்ப்பு அளித்தது. தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26ம் திகதி (இன்று) நிறைவேற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த தீர்ப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தங்கராஜுசுப்பையா இன்று தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இந்த தகவலை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையா (46), இன்று சாங்கி சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது” என்று கூறினார். போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விற்பனையில் Sinopec !

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி பெற்ற மூன்று நிறுவனங்களில் ‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மே மாத நடுப்பகுதியில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 45 நாட்களுக்குள் நடவடிக்கைகளைத் தொடங்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

வணிக உரிமங்கள் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திகதிகள் மற்றும் தொடங்குவதற்கான நேரம் குறித்து நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனையம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

14 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகர் கைது !

பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தனது 14 வயதுடைய மகளான  சிறுமியை  பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றிவரும் தந்தையை இன்று புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுவந்த நிலையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையை சம்பவதினமான இன்று காலை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

“OL பரீட்சை இல்லாமல் அனைத்து மாணவர்களும் உயர்தரத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.” – பாராளுமன்றத்தில் கோரிக்கை!

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை இந்த வருடம் நடத்தாமல், அனைத்து மாணவர்களும் உயர்தரப் பரீட்சையைத் தொடர்வதற்குத் தகுதியானவர்கள் என்று அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதில் தற்போது ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சாதாரணதரத்துக்குத் தோற்றவுள்ள 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயர்தரத்துக்கு முன்னேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடம் பரீட்சையை நடத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்.

இந்த வருடம் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை நடத்தாமல் அனைத்து மாணவர்களையும் உயர்தரத்தைத் தொடர்வதற்குத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்தால் அது நல்லதொரு திட்டமாக அமையும்.

கொவிட் காலத்தில் பிரிட்டனில் இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. மாறாக மாணவர்களுக்குச் சலுகைகளே கிடைத்தன – என்றார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்த விவகாரம் – இலங்கை சிங்கப்பூரில் வழக்குத்தாக்கல்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தத்தின் கப்பல் மூலம் இலங்கை கடலில் ஏறபட்ட பாதிப்புகளிற்கு இழப்பீட்டை கோரும் வழக்கை இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம் இதனை உறுதி செய்துள்ளார்.சிங்கப்பூரில் உள்ள சட்டநிறுவனமொன்றின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இழப்பீட்டு தொகை குறித்து நீதிமன்றத்திற்கு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை தூக்கிலிட முயற்சி !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள போதும் தன்னையும் குறி வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதல்களின் குற்றவாளியாக என்னை காண்பது நியாயமற்றது.

2019 மே 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்றது.

இருந்தபோதும் தாக்குதல்கள் தொடர்பாக என்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிடவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விரும்புகின்றார். உரிய விசாரணைகள் முடிவடையாமல் அவர் இதைச் செய்ய முயற்சிக்கிறார்” என்றார்.

“வைத்தியசாலையின் அசமந்த போக்கு.” – பறிபோனது 07 வயது குழந்தையின் உயிர் !

குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் முறையான மருந்து சீட்டு முறைமை இன்மையால் தவறான மருந்து விநியோகம் காரணமாக கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 07 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

 

குறித்த பெண் குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள், அச்சிடப்பட்ட காகிதத்தில் மருந்து எழுதி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பெற்றோர் வைத்தியசாலையிலுள்ள மருந்தகத்தில் மருந்தைப் பெற்றதாகவும், வீடு திரும்பிய பின்னர் குழந்தை மருந்தை உட்கொண்டதாகவும், இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பலவீனமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இரண்டாவது தடவையாக வைத்தியசாலைக்கு சென்ற குழந்தைக்கு வேறு அறிகுறிகள் தென்பட்டதால், அதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, ​​பிள்ளைக்கு முதியவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

 

குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் அச்சிடப்பட்ட தாளில் ஏற்கனவே வயோதிப நோயாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருந்த மருந்துகளை குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் எழுதி வைத்திருந்ததை வைத்தியசாலை கண்டறிந்துள்ளது.

 

எவ்வாறாயினும், மயக்கமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையில் காகித தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே மருந்து சீட்டு தாள்களை பயன்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே குழந்தைக்கு தவறான மருந்து மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட காலத்திற்கு பிறகு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் மீண்டும் ஆரம்பம்!

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி உள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் காவல்துறை என்பன நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், நீண்ட காலமாக பூஜைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் கடந்த 24 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் அதிபர் சட்டத்தரணி M.A சுமந்திரன் ஆலயம் சார்பாக முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில், அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வது மற்றும் ஆலய வழிபாடுகளை நடத்துவது என்பவற்றிற்கு அரச உத்தியோகஸ்தர்கள் எவரும் தடைவிதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

நாட்டின் கல்வி முறைமையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டின் கல்வி முறைமையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும், தேவையேற்படின் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதில் தாமும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.

2035 ஆம் ஆண்டளவில் நாட்டில் புதிய கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும். காலநிலை மாற்றத்தை ஒரு பாடமாக மாற்றவும், புதிய வரலாற்று நிறுவனத்தை நிறுவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாடசாலை பாடத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக கல்வியில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். அத்தோடு அனைத்து மாணவர்களும் அறிவியல் மற்றும் கலை பாடங்களை படிக்க வேண்டும்.

மேலும், புவியியல், வரலாறு போன்ற பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உயர்தரப் பாடங்கள் நடைபெறும் அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும். அதன்பின்னர் சாதாரண தரம் வரை கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும். எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கில கல்வியை வழங்கவும், ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள முதன்மை நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது,

இதன் காரணமாக இலங்கை அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இல்லை என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி தனது சமீபத்திய மதிப்பீட்டில், லெபனான் நாட்டிலேயே அதிக உணவு விலை பணவீக்கம் காணப்படுவதாக கூறியுள்ளது.

261 சதவீதத்துடன் லெபனான் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் சிம்பாப்வே மற்றும் அர்ஜென்டினா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.