மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால துன்பியல் வரலாறு என்பது வெள்ளைக்கார பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று எழுபது ஆண்டுகளுக்குப் பின் இன்னமும் தொடர் கதையாகவே இருக்கின்றது. இன்றும் இந்த மக்கள் அடிமைத்தளைகளில் இருந்து தங்களை விடுவிக்க முடியாதபடி சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளால் விலங்கிடப்பட்டுள்ளனர். இலங்கையின் பிரபல்யமான சிறுநீரக மாற்று மருத்துவமனை கண்டியில் உள்ளது. ஏன்? தோட்டங்களில் தேயிலை பிடுங்கியவர்கள் தலைநகரில் தேநீர் கடைகளுக்குள் முடக்கப்படுகின்றனர். ஏன்? இந்த 21ம் நூற்றாண்டிலும் தேயிலை கொழுந்து பிடுங்குவதில் தானே மலையகத்தில் போட்டி நடத்துகின்றனர். ஏன்?
இதற்கு சிங்கள பௌத்த தேசியவாதம் தான் முழுக்காரணம் என்று சொல்லிவிட்டு நாங்கள் யாரும் கைகழுவிட முடியாது. இந்நிலை தொடர்வதற்கு சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பரபம்பரை அரசியலுக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கையின் பொருளாதாரத்தின் அடிநாதமாக இருந்த மக்களின் முதுபெலும்பை அவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஒடித்ததில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் ஜி ஜி பொன்னம்பலம் முக்கியமானவர்.
தமிழ் சிறுபான்மையினத்தின் அரசியல் அபிலாசைகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படவும் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களோடு சமூகமான உறவைப் பேணவும் மிகுந்த தடையாக இருப்பது இவ்வாறான துரோகத்தனங்களும் நயவஞ்சகமான சூழ்ச்சிகளுமே. பெரும் நிலச்சுவந்தராக இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சியில் பலநூறு ஏக்கர் நிலத்தைக் கொண்டிருந்த போதும் தங்கள் பரம்பரையிழைத்த பாவத்திற்கு ஒரு பிரயாச்சித்தம் கூடச் செய்யவில்லை. இன்னும் கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பிரதேசத்தில் வாழும் மலையக மக்களுக்கு எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் இல்லை. மலையகத் தமிழர்கள் பற்றிய வடக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் தலைமைகளின் பரிவு என்பது முதலைக் கண்ணீர்.
மலையகத் தமிழர்கள் பற்றிய மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை இதனிலும் மோசமானது. அவர்கள் அம்மக்களை எப்போதுமே அடிமையாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனையே இப்போதும் செய்கின்றனர். அவர்களை சுயமற்றவர்களாக தங்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே வைத்திருப்பது. அவர்களை எப்போதும் தோட்டங்களோடே கட்டிப்போடுவது. அதன் மூலம் அவர்களை காலத்துக்கும் அடிமையாக்குவது. மலையகத்தை விட்டு வெளியே வன்னிவரை வந்த மலையகத் தமிழர்களின் வாழ்நிலை மலையகத்தில் உள்ள மலையகத் தமிழர்களின் வாழ்நிலையோடு ஒப்பிடுகையில் கணிசமான முன்னேற்றத்தையே கொண்டுள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் தோட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தங்கள் கடின உழைப்பினால் அடைந்த முன்னேற்றம்.
ஆகவே மலையகத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியமும் சிங்கள பௌத்த பேரினவாதமும் தான் காரணம் என்று சொல்லிவிட்டு யாரும் தப்பித்துவிட முடியாது. தமிழ் சமூகமும் தமிழ் அரசியல் வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துவிட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூகமும் இவ்விடயத்தில் தங்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். மலையக அரசியல் கட்சிகள் மலையக அறிவியில் சமூகம் உட்பட.
ஆங்காங்கே சில தீவிர செயற்பாடுகள் சிலரினால் முன்னெடுக்கப்பட்டு அது மலையக மக்களின் வாழ்வியலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யும் விரல்விட்டு எண்ணக்கூடிய பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள். அவ்வாறானவர்கள் இலைமறை காயாகவே உள்ளனர். அந்த வகையில் கிளி விவேகானந்த வித்தியாலயமும் அதன் அதிபர் ஜெயா மாணிக்கவாசன் குறிப்பிடப்பட வேண்டியவர். முற்று முழுதாக மலையக தமிழர்கள் குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளோடு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று கிளிநொச்சியின் முன்னரங்க பாடசாலையாகவும் அரசின் கல்வித் திட்டங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தும் பாடசாலையாகவும் இயற்கையோடு ஒன்றிய பாடசாலையாகவும் மாகாண மட்டத்தில் பரீட்சைகளில் சாதனை படைத்த பாடசாலையாகவும் உள்ளது. இவ்விடத்தில் கிளிநொச்சியின் மற்றுமொரு பின் தங்கிய பிரதேசமாக உள்ள சாந்தபுரம் மகாவித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன் குறிப்பிடப்பட வேண்டியவர். அவர் மலையகத் தமிழர்களின் ஒரு உரத்த குரலாகவும் கிளிநொச்சியில் உள்ளார்.
இன்னல்களை அனுபவித்த, அனுபவிக்கின்ற மலையக மக்களின் இடைவிடாத குரலாக எனக்கு மிகவும் பரீட்சயமானவர் மு நித்தியானந்தன். ஏப்ரல் 01, 2023இல் நித்தியானந்தனின் 75வது பிறந்த தினத்தையொட்டிய பவள விழா லண்டனின் புறநகர்ப் பகுதியான ஸ்ரான்மோரில் (Stanmore) உள்ள பென்ற்லி ஹை ஸ்கூலில் (Bently High School) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மு நித்தியானந்தனின் மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல், மலையகச் சுடர் மணிகள், பெருநதியின் பேரோசை, ஆடல் எங்கேயோ அங்கு ஆகிய நான்கு நூல்கள் அந்நிகழ்வில் வெளியிடப்பட்டதுடன் ‘நித்தியம்’ என்ற தலைப்பில் மு நித்தியானந்தனின் பவள விழா மலரொன்றும் வெளியிடப்பட்டது.
நான் 1991இல் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த போது எனக்கு வயது இருபது. இயக்க மோதல்கள், பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகள், அதற்குப் பின் இந்திய இராணுவத்தின் வரவு பின் இந்திய இராணுவத்தின் வெளியேற்றம். இலங்கையிலும் தமிழ் பிரதேசங்களிலும் எங்களுக்கு எதிர்காலம் மட்டுமல்ல வாழ்வதே கேள்விக்குறியாகி இருந்த நிலையில் என்னைப் போன்று பலர், ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த காலம். வட்டுக்கோட்டையில் இருந்து யாழ் நகருக்கு சைக்கிள் மிதித்துச் சென்றால் யாழ் நகரின் பிரதான சந்திகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழு கழுத்தை வெட்டி முண்டத்தை மட்டும் போட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள் அல்லது புலிகள் நெற்றியில் பொட்டு வைத்து மின்கம்பத்தில் கட்டிவிட்டிருப்பார்கள். யாருக்கு யார் துரோகி என்ற குழப்பமான காலகட்டம். புளொட், ரெலோ போன்ற அமைப்புகளும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கொலைகளினூடாக நிரூபிக்கத்தவறவில்லை. வே பிரபாகரன் அதற்கு முன்னரே கூட இருந்த பலரைப் போட்டுத் தள்ளியருந்தாலும் சுந்தரம் படுகொலை முதலாவது சகோதரப் படுகொலையானது.
இவ்வாறான பின்னணியில் தான் அன்றைய செய்திகள் இருந்தது. அன்றைய காலகட்டங்களில் கொலை, கொள்ளை என்பதெல்லாம் எண்ணிக்கையின் அல்லது மதிப்பீட்டின் அடிப்படையில் தான் முன்பக்கத்திற்கு வரும். எம் என் எம் அனஸின் மொழியில் சொன்னால் அது ‘பிணம் செய்த தேசம்’.
அப்போது, நித்தியானந்தன், வண பிதா சிங்கராயர், குட்டிமணி, தங்கத்துரை, நிர்மலா போன்ற பெயர்களை பத்திரிகைகளில் அறிந்த காலம். அதன் பின் 1983 வெலிகடைப்படுகொலை. அதில் தப்பியவர்கள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டது. மட்டக்களப்புச் சிறையை புளொட் வாசுதேவா – ஈஸ்வரன் – அசோக் ஆகியோர் உடைக்கத் திட்டமிட்டதும் உடைத்ததும் மு நித்தியானந்தன் இந்தியாவுக்குச் சென்றதும் நிர்மலா “புலிகள் வந்து கூட்டிக்கொண்டு போனால் தான் சிறைக்கு வெளியே வருவேன்” என்றதும் பத்திரிகைகளிலும் செவிவழியாகவும் அறிந்த தகவல்கள். இவ்வாறுதான் நித்தியானந்தன் எனக்கு அறிமுகமாகி இருந்தார். அவர்களை புலிகளாக கருதியிருந்த காலம். இந்த தகவல்களுக்கு அப்பால் 1991இல் இலங்கையைவிட்டு லண்டனுக்கு புலம்பெயர்ந்த போது எனக்கு இவர்கள் தொடர்பில் வேறேதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் மீது ஒரு பிரமிப்பு இருந்தது.
லண்டனுக்கு வந்த எனக்கு தீப்பொறி குழுவினருடன் ஊரிலிருந்தே தொடர்பு இருந்ததால் லண்டனில் நடைபெறுகின்ற இலக்கிய, சமூக, அரசியல் சந்திப்புகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்த நட்புவட்டம் வளர்ந்தது, விரிந்தது, ஆழமானது. இவ்வாறு நித்தியானந்தனும் அறிமுகமாகின்றார். என்னிடம் இருந்த பிரமிப்பை நித்தியானந்தன் தன்னுடைய எளிமையான இயல்பான உரையாடலால் தகர்த்துவிட்டார். விரைவிலேயே நித்தி அண்ணையாகிவிட்டார்.
மு நித்தியானந்தனின் உரைகளின்பால் நான் மிகவும் கவரப்பட்டேன். அவருடைய கதை சொல்லும் நளினம், எளிமை மிகவும் கவர்ச்சியானது. கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டும் அவருடைய ஆளுமை மிகச் சிறப்பானது. கல்வியியல் கோட்பாட்டாளர்களில் ஒருவரான ஸ்கினர் நடத்தையியலாளர் “யாரும் எதையும் கற்கலாம்” என்பவர். சிறு குழந்தைக்கும் விண்வெளிக்கு ரொகட் விடுவதை கற்பிக்க முடியும் என்பவர். மு நித்தியானந்தனின் உரையில் இதனைக் காணலாம். யாருக்கும் எதனையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது.
என்னுடைய வாசிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும் நித்தியானந்தனின் உரைகளுக்கூடாக பலநூல்களை வாசித்த அனுபவம் கூட்டத்தின் முடிவில் எனக்கு ஏற்படும். அதில் நித்தியானந்தன் எவ்வித மாயவித்தையையும் மேற்கொள்ளவில்லை. தான் உரையாற்றுவதற்கு முன்னர் அதற்கான ஆய்வுகளில் மூழ்கி தன்னைத் தயார்படுத்தியிருப்பார். தன்னுடைய உரையைக் கேட்போரின் நேரத்தை அவர் மிகவும் மதிப்பவர். அதனால் தான் அதற்கான முன் தயாரிப்போடு புதிய தகவல்களோடும் புதிய பார்வையோடும் அவர் கூட்டத்திற்கு வருவார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் 1997இல் நானும் ‘தேசம்’ என்ற சஞ்சிகையை ஆரம்பித்தேன். புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக லண்டனில் நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாக இணைய ஊடகமாக (தேசம்நெற்) தற்போது காட்சி ஊடகமாகவும் (தேசம்திரை) வந்துகொண்டிருக்கின்றது. 2000ம் ஆண்டு காலகட்டங்களில் லண்டனில் புலிகளுக்கு ஆதரவில்லாத தரப்பினரால் நடத்தப்படும் கூட்டங்கள் என்றால் அது தேசம் நிகழ்த்தும் கூட்டமாகமே இருந்த காலம். தேசத்தின் ஆரம்ப நாட்களில் நித்தியானந்தனின் உணர்வுபூர்வமான ஆதரவு மிகக் காத்திரமானது. தேசத்தின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது, உரை நிகழ்த்துவது, நூலாய்வுகளை மேற்கொள்வது என நித்தியானந்தன் மிகுந்த ஆதரவை வழங்கி வந்தவர். தேசம் ஏற்பாடு செய்த சண்முகதாசனின் நூல் அறிமுகவிழா, மலேசியத் தமிழ் இலக்கியம் – மாநாடு, யாழ் பொதுசன நூலக எரிப்பு நினைவு நிகழ்வு, மற்றும் பல அரசியல் கலந்துரையாடல்களில் மு நித்தியானந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
நான் எனது வாழ்வின் பிந்திய காலத்தில் எனது நாற்பத்து ஒன்பதாவது வயதிலேயே கலைமாணிப் பட்டத்தை முடித்து முதகலை மாணிப் பட்டத்தை முடித்து ஆசிரியரானவன். எனக்கு தேடலையும் ஆர்வத்தையும் தூண்டியதுடன் எனது தேடலுக்கு இரையூட்டியது புலத்தில் இடம்பெற்ற கலை, இலக்கிய, சமூக, பொருளாதார, அரிசியல் கூட்டங்கள் அங்கு நடைபெறும் விவாதங்கள் தர்க்கங்கள். எனது எழுத்தாற்றலையும் கூட நான் புலத்திலேயே வளர்த்துக்கொண்டேன். எனக்கு தமிழில் இருந்த ஆளுமையே அதனை ஆங்கிலத்திற்கும் மாற்றிக்கொள்ள உதவியது. என்னுடைய தேடலின் வளர்ச்சியில் நித்தியானந்தனின் பங்கும் கணிசமனது.
நித்தியானந்தனேடு நெருக்கமான சிலரை கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியிருந்ததால் நித்தியானந்தனோடு ஒரு முரண்பாடு ஏற்பட்டது. இருந்த போது 2016இல் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை ” என்ற என்னுடைய நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு காத்திரமான விமர்சன உரையை வழங்கி இருந்தார். அந்நூலில் இஸ்ரேலிய மொசாட் படைகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்ததைக் குறிப்பிட்டு இருந்தேன். அதுபற்றி மற்றுமொரு ஆய்வாளர் கேள்வி எழுப்பிய போது என்னால் உடனடியாக அந்த தகவல் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. ஆனால் நித்தியானந்தன் எந்தப் புத்தகம் அது யாரால் எழுதப்பட்டது என்பதை அவ்விடத்தில் உடனடியாகவே சுட்டிக்காட்டினார்.
ஒரு மாணவனின் கல்வியியல் ஆளுமையில் அவன் ஆசானின் கல்வியியல் ஆளுமை மிகுந்த தாக்கத்தைச் செலுத்தும். ஒரு பேராசானாக நித்தியானந்தன் தன்னுடைய உரைகளுக்கு மேற்கொள்ளும் தயாரிப்புக்கள் எங்களிலும் துளித்துளியாக தாக்கத்தைச் செலுத்தி உள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வி என்பது ஒரு அனுபவம். அது ஒப்பீட்டளவில் நிரந்தரமான மாற்றத்தை மனிதர்களின் நடத்தையில் பழக்கத்தில் ஏற்படுத்தும். அவ்வாறான மாற்றத்தை நித்தியானந்தன் என்னில் ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு இந்றைய நாளில் எனது பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
“எனக்குத் தெரியும் நான் ஒரு திறமையானவன் என்று ஏனென்றால் எனக்குத் தொரியும் எனக்கு ஒன்றும் தெரியாது என்று – ‘I know that I am intelligent, because I know that I know nothing” என்று சொன்னவர் தத்துவமேதை சோக்கிரட்டிஸ். அப்படித்தான் நித்தியானந்தனும் அவருக்கு ஒன்றுமே தெரியாது. அதனால் அவர் 75 வயதிலும் இளமையோடு தேடுகின்றார். தேடிக்கொண்டே இருக்கின்றார். தன் அறிவுக் கண்களைத் திறந்து வைத்து எமது அறிவுப் பசியையும் ஆற்றுகின்றார்.
நானும் சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றேன். எனக்கு விடை தெரியாத கேள்விகள் சிலவற்றுக்கு விடையை அறிய ஆவலாக இருக்கின்றேன். கேள்விகளில் முட்டாள்தனமான கேள்விகள் இல்லையென நம்ப விரும்புபவன் நான். அதனால் இதனை கேட்டுவிட வேண்டும் என நினைக்கிறேன்.
கேள்வி ஒன்று: எனக்கு தெரிந்தவரை நித்தியானந்தன் ஒரு இடதுசாரி. மனிதத்தை மனித நேயத்தை மதிப்பவர். அப்படியிருக்கையில் இடதுசாரிக் கருத்துக்களில் ஆர்வம்கொண்டவர்கள் எந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தனர்? வே பிரபாகரனை தலைவராக ஏற்றனர்? இது வே பிரபாகரனின் ஆளுமையா? இடதுசாரிகளின் ஆளுமையின்மையா? கருத்தியல் தோல்வியா?
கேள்வி இரண்டு: இன்றைய பவள விழாவிற்கு 25 ஆண்டுகளுக்கு முன் 50வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டிருந்தால், அது இவ்வாறு அமைந்திருக்க வாய்ப்பேயில்லை. இது கருத்தியல் சமரசமா? அல்லது கருத்தியல் அம்னீசியாவா?
மு நித்தியானந்தன் ஒரு சிறந்த ஆய்வாளர் விமர்சகர். அவருடைய பவளவிழாவில் ஒரு கேள்வியை முன் வைக்காமல் நிகழ்வை முடிவுக்கு கொண்டுவருவது பூரணத்துவத்தைத் தராது என்பதற்காக மட்டுமே இக்கேள்விகள்.
Democracy
சென்ற வாரம் முள்ளிய வாய்க்கால் முற்றத்திற்கு சென்றிருந்தேன், அங்கிருந்த ஒருவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் இரண்டொரு நாளில் வருவார் என்றார்.
சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு சிறிது உலாவிவிட்டு வந்துவிட்டேன். இங்குதான் அவர் ஏதோ அறிவித்தார்.
இடதுசாரி என்பதே 1800 களில் இந்திய துணைக்கண்டத்தின் ஆழமான கலாச்சாரப் பலவீனத்தால் (அதனாலேயே கலாச்சாரப் புரட்சி) காலனித்துவத்தை “உக்ரைனில்” மட்டுமே கண்டு, “ரொட்டிக்காக” அண்டிப்பிழைத்த மத்திய ஐரோப்பிய நாடுகள் (செல்வந்தர் குழுக்கள் or Nobles) தங்களை அறியாமல் பெரும் வளர்ச்சியடைந்து, “நெப்போலியன் போனப்பார்ட்டை” போட்டுத்தள்ளும் அளவுக்கு வளர்ந்தப்பின்பு, இந்தியாவின் பலவீனமே உலக நடைமுறை என்று, அதற்கு சமூக விளக்கம் (பொருள் முதல்வாதம்) கொடுக்க முற்பட்டதே இடதுசாரி என்பது!
பூலோகன்
வாசிக்கும் ஆவலை தூண்டிய கட்டுரை. சேர்க்கிரட்டிஸின் மேற்கோளுடனும் தொடங்கும் கட்டுரை மலையக தமிழர்களின் அவல நிலை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று தூரோகம் என்பதையும் சுட்டிக் காட்டி மலையக சமூகத்திலிருந்து தோன்றிய திருவாளர் நித்தியானந்தன் அவர்களுக்கு 75 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்தும் தெரிவிக்கும் ஆசிரியர்.
இக்கட்டுரையை வாசித்த எனக்கு ஒரு செய்தி புதிய தகவல். அதாவது சுந்தரம் படுகொலை தான் முதலாவது சகோதரப்படுகொலை என்பதும் தான். சுந்தரம் படுகொலை பற்றிய மேலதிக தகவல்களை ஆசிரியரால் தர முடியுமா?
மற்றும் புலிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்ற தொனியில் ஆசிரியர் கட்டுரையின் இறுதியில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு திருவாளர் நித்தியானந்தன் பதிலளிப்பாராக இருந்தால் நன்றாக இருக்கும்.