கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களில் வவுனியாவின் தரணிக்குளம் கணேஷ் வித்யாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராக பணிபுரியும் திருமகன் என்பவர் பாடசாலை மாணவிகளிடம் தவறான வகையில் வாட்ஸ்அப் இல் பேசி உள்ளதாகவும் – தொடர்ச்சியாக அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இது தொடர்பான சில Screen shot தேசம் இணையதளத்துக்கும் கிடைத்திருந்தது. கிடைத்திருந்த அடிப்படை தகவல்களைக் கொண்டு தேசம் இணையதளம் இது தொடர்பான மேலதிக தகவல்களை திரட்ட ஆரம்பித்திருந்தது.
முதலில் அந்த ஆசிரியர் தொடர்பான விடயங்களை அலசி இருந்த நிலையில் குறித்த ஆசிரியர் கடந்த வாரம் வவுனியாவின் கட்டையர் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இடம் பெற்று வந்த காடழிப்பு தொடர்பில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியதுடன் இது தொடர்பான பல பிரச்சனைகளையும் தனிப்பட்ட ரீதியில் அவர் எதிர்கொண்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.
காடழிப்பை வெளிப்படுத்திய ஆசியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் நேற்றுமுன்தினம் (25.04) வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம அலுவலர்களின் துணையுடன் காடழிப்பு இடம்பெற்று வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக் கிராம மக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அதனை தடுத்து நிறுத்தியதுடன், இது தொடர்பில் அரச அதிபரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த காடழிப்பு விடயத்தில் வவுனியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கு.திலீபனும் தொடர்புபட்டு உள்ளதாக அறிய முடிகிறது.
இதனையடுத்து, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், குறித்த பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தவருமான ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய கிராம அலுவலர் ஒருவர் ஆசிரியருக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
போலி முகநூலின் ஊடக குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆசிரியர் தரப்பிலும் – இது தொடர்பில் நாம் விசாரித்த வலயக்கல்வி பணிமனையை சேர்ந்த ஒரு ஆசிரியரும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த ஆசிரியர் தொடர்பில் வலயக்கல்வி பணிமனையில் நல் அபிப்பிராயம் உள்ளதாகவும் குறித்த வலயக்கல்வி பணிமனை ஆசிரியர் நம்மிடம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் உலாவும் தவறான செய்திகளாலும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ஆசிரியர் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிடம் முறையிட்டுள்ளதுடன், வவுனியா பொலிசிலும் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதையும் அறியமுடிகிறது.
இதே நேரம் இந்த பிரச்சனையுடன் தொடர்புடைய தமிழ் பாட ஆசிரியரான திருமகன் தொடர்பில் குறித்த பாடசாலை அமைந்துள்ள பகுதியில் வசிக்கக்கூடிய சில இளைஞர்களிடம் – அவருடைய வகுப்பில் கல்வி கற்ற சில மாணவிகளிடமும் நாம் தேசத்தின் ஊடாக தொடர்பு கொண்டிருந்தோம். அவரிடம் கடந்த வருடம் கல்வி கற்று இருந்த உயர்தர மாணவி ஒருவர் எம்மிடம் குறித்து ஆசிரியர் தொடர்பில் கூறிய போது “பொதுவாகவே தமிழ் பாட ஆசிரியர்கள் என்றால் இரட்டை அர்த்தமுடைய வார்த்தைகளை வகுப்பில் பாவிப்பார்கள். ஆனால் திருமகன் ஆசிரியர் ஒரு தடவை கூட அவ்வாறான வார்த்தைகளை பிரயோகித்ததில்லை. திடீரென கோபப்படும் சுபாவம் உடைய சேர் தான். ஆனால் நடத்தைகள் பொருட்டு எனக்கும் என்னுடைய நண்பிகளுக்கும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் உறுதியாகவே சொல்கிறேன் நம்முடைய ஆசிரியர் அவ்வாறு செய்திருக்க மாட்டார்.” என குறித்த மாணவி உறுதிப்படக் கூடியிருந்தார். குறித்த ஆசிரியர் பணி புரியும் கிராமத்து இளைஞர்கள்ஜசிலரிடம் வினவிய போதும் மேற்குறித்த மாணவி கூறிய தகவல்களுடன் ஒத்த தகவல்களையே எங்களுக்கு வழங்கினர்.
இங்கு மிகப் பிரதானமான கேள்வி எங்கு என்ன நடந்தால் என்ன..? நாம் உண்டு நம்முடைய வேலை உண்டு என கடந்து செல்லும் இன்றைய அரச அதிகாரிகளிடையே தன்னுடைய பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய தலையீட்டுடன் சுமார் 12 ஏக்கர் காடு அழிக்கப்பட்டதை அந்த ஆசிரியர் சுட்டிக் காட்டியதற்காக அவர் இவ்வாறு அவதூறு படுத்தப்படுகிறார் என்றால் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதற்கு எதிராகவும் – குறித்த ஆசிரியருக்கு ஆதரவாகவும் அனைவரும் நிற்க வேண்டியது அவசியமாகிறது.
குறித்த ஆசிரியர் தொடர்பான அவதூறு தகவல்களை பதிவிட்டுள்ள சமூக வலைத்தளங்கள் போலியான அடையாளங்களுடன் கூடியவையாக உள்ளமையும் – அதே நேரம் அவை உறுதிப்படுத்தப்படாத நபர்களால் இயக்கப்படுவதாலும் – குறித்த ஆசிரியர் காடழிப்பு தொடர்பான பிரச்சனையை பகிரங்கப்படுத்தியதன் பின்பாகவே இந்த WhatsApp screen shot பரப்பப்பட்டுள்ளதாலும் / பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாளுமே இது இது தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வழங்கப்படுகிறது என்ற செய்திகள் அடிக்கடி நாம் காணும் – கடந்து போகும் செய்திகளாகியுள்ளன. கடந்த வருடம் முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி மாணவிகளின் நிர்வாண வீடியோக்களை எடுத்து குறித்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தி இருந்தார். இது போல் பல இடங்களில் பல பிரச்சனைகள் இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த அடிப்படையில் குற்றவாளிகள் உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த நிலையில் எப்பொழுதும் தேசம் இணையதளமானது இதற்கு எதிரானதாகவே இருக்கும். அதே நேரம் ஒரு தவறுமே செய்யாது சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த ஒருவர் பாதிக்கப்படும்போது அதனை கண்டு கொள்ளாது செல்லவும் முடியாது.
இந்த காடழிப்பு விவகாரத்திலும் – குறித்த ஆசிரியர் மீதான அவதூறு பரப்பப்பட்டதன் பின்னணியிலும் அரசியல் தலையீடு இருப்பதாகவும் – இதனால் குறித்த ஆசிரியர் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அறிய முடிகிறது. போலீசில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் போலீசாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என அறிய முடிகிறது. சட்டத்தை பாதுகாத்து – போலீஸ் நிலையங்கள் மீதான நம்பிக்கையை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இலங்கை உள்ளதால் போலீசார் இது தொடர்பில் விரைந்து கவனம் எடுத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன் வர வேண்டும். ஆசிரியர் தவறு செய்திருப்பின் அவர் கட்டாயமாக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்திருக்காது விடின் – அவர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!