உதயன் (ஆர்.எஸ்.எஸ் இன் ஏஜென்ட்) தமிழர் மத்தியில் புகுந்து தமிழ் தேசியத்தை மதரீதியில் பிரித்து பெரும் அட்டூழியம்!

ஈழத் தமிழர்களை மத ரீதியில் பிரித்து மதப் பிரிவினையைத் தூண்டும் இந்தியாவின் நோக்கத்தை வெற்றிகரமாக செயற்படுத்த தொடங்கியுள்ளது உதயன் பத்திரிகை.

ஏப்ரல் 9ஆம் திகதி உதயன் பத்திரிகை “வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்து அட்டூழியம் புரிந்த மதக்குழு” என்ற தலைப்பில் முன் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியோடு தொடர்புபட்ட சபையை சேர்ந்த மக்கள் சிலர் குறித்த செய்தியை கேள்விக்குட்படுத்தி உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு அன்றைய தினம் சென்றிருந்தனர்.

அங்கு குறித்த செய்தியை எந்த அடிப்படையில் பிரசுரித்தீர்கள் என ஆசிரியர் பீடத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதுவே நடந்த சம்பவத்தின் சாராம்சம்.

இந்த சம்பவத்தைத் தான் உதயன் பத்திரிகை ஏப்ரல் 10ஆம் திகதி முன்பக்க முழுப்பக்க செய்திகளாக பெருமெடுப்பில் வெளியிட்டுள்ளது.

உதயன் பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து மதக்குழுவொன்று பெரும் அட்டூழியம் என்று குறிப்பிட்ட அளவுக்கு அங்கு எந்த சம்பவமும் இடம்பெற்றதாக உதயன் தரப்பிலிருந்து வெளியாகியிருந்த காணொலியில் தெரியவில்லை.

குறித்த சபையைச் சேர்ந்த மக்கள் தமது சபையோடு தொடர்புபட்ட செய்தி தொடர்பில் கேள்வி கேட்கவே உதயன் அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.

வந்தவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் அவர்களுடன் சில இளைஞர்கள் வந்துள்ளனர்.

வந்தவர்கள் யாரும் எந்த ஆயுதங்களோடோ தாக்குதல் நடத்தும் எண்ணத்துடனோ வந்திருக்கவில்லை.

அவர்கள் சாமானிய மக்கள். ஒரு பத்திரிகை நிறுவனத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கரிசனை அவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதை அவர்களிடம் எதிர்பார்க்கவும் இயலாது.

அவர்கள் போதகரது தூண்டுதலால் வந்திருந்தாலும் கூட அவர்கள் சாதாரண பொதுமக்கள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் என்ற தெளிவு ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் இருந்திருக்க வேண்டும்.

ஒரு ஊடகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று அந்த சமூகத்துக்கு அறிவூட்டுவது, அவர்களை வழிநடத்துவது. இந்த இடத்தில் உதயன் தன் கடமையிலிருந்து தவறியுள்ளது.

குறித்த காணொலியில் அந்த மக்கள் எந்த இடத்திலும் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. யாரையும் தாக்கவில்லை. நிறுவனத்தின் சொத்துக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை.

பல பேர் சேர்ந்து சென்று கதைத்தால் தங்கள் கருத்து கேட்கப்படும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கலாம்.

காணொலியில் ஒரு இடத்தில் ஒரு பெண் “ நீங்கள் கண்டபாட்டுக்கு எழுத ஏலாது” என்று சொல்ல அங்கு நின்ற மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் “அதை நீங்க சொல்ல ஏலாது. கோர்ட்டுக்கு போங்க” என்கிறார்.

ஊடகம் என்பது மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது. அவற்றை கேள்வி கேட்கும் உரிமை சட்டத்துக்கு முன்னர் மக்களுக்கே உள்ளது.

சாமான்ய மக்களுக்கு சட்டம் தொடர்பில் பூரண அறிவு இல்லை என்ற பலவீனத்தைக் கொண்டு கோர்ட்டுக்கு போ, கேஸ் போடு என்று அடாவடித்தனமாக நடந்து கொண்ட உதயன் தரப்பினர் அந்த மக்களை காட்டுமிராண்டிகள் ரேஞ்சுக்கு சித்தரிக்கின்றனர்.

ஏற்கனவே பிரதேசம் சாதி என கூறுபோடப்பட்டுள்ள இந்த சமூகம் மத ரீதியில் பிளவுபட்டு நிற்பதற்கான மீதமுள்ள வழிகளையும் ஊடகங்கள் திறந்துவிட்டுள்ளன.

முற்றுமுழுதாக, மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் திரிபுபடுத்தப்பட்ட இந்த செய்திக்கு கண்டன அறிக்கைகள் வேறு அனல் பறக்கின்றன. அதில் சைவமாகாசபை, உருத்திரசேனை, மறவன்புலவு சச்சிதானந்தன் ஆகியோரின் கண்டன அறிக்கைகள் முன்பக்கத்தில் அடுக்கிவிடப்பட்டுள்ளன. இதிலிருந்தே இது மதப்பிளவைத் தூண்டும் உள்நோக்கத்துடனானது என்பது தெட்டத்தெளிவாகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான செய்திகளில் உதயன் பயன்படுத்தியுள்ள சொற்கள் மிகக் கீழ்த்தரமானவை. எவ்வாறு தமிழர்களை சிங்களப் பேரினவாதம் பயங்கரவாதிகள் என்று சித்தரித்ததோ அவ்வாறே தன்னுடைய சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள ஒரு மதச் சமூகத்தின் மீதான தவாறான விம்பத்தை உதயன் கட்டமைக்கின்றது. இதனை சைவமாகாசபை, உருத்திரசேனை, சிவசேனை போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிவருடிகள் எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்படாதபாடு படுகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்டோரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை சமூக விரோதிகள் என்றவாறு சித்திரித்துள்ள உதயனின் போக்கு மிகுந்த அடாவடித்தனமானது. உதயன் இவ்வாறு சித்திரிக்குமளவுக்கு எந்தவொரு சம்பவமும் அங்கு இடம்பெற்றதாக காணொளியில் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த சம்பவத்தின் பின்புலம் பற்றி தெரிந்தோ அல்லது தெரியாமலோ சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவிப்போர் இதனை தாறுமாறாக திரிவுபடுத்த தொடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 8ஆம் திகதி உதயன் தனது முன்பக்கத்தில் “80வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த மக்கள் உதயன் அலுவலகத்துக்குள் அத்துமீறினர் என்ற தவாறான கண்டோட்டத்துடன் சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் போதகர்களையும் கீழ்த்தரமாக பதிவிடுகின்றனர். இது மிக அபத்தமானது.

“80வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்” என்ற செய்தி உண்மை எனின் அது நிச்சயம் பிரசுரிக்கப்பட வேண்டியதே. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் பாலியல் சேட்டை புரிவோரைக் கண்டுகொள்ளாமல் அவர்களிடம் கட்டுரைகள் வாங்கிப் பிரசுரித்து அவர்கள் புகழ்பாடும் இந்த ஊடகங்கள் இந்த செய்திகளில் மட்டும் தம் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவது தான் வேடிக்கையாகவுள்ளது.

யாழில் இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்த போதைவஸ்துக்களுடனும் தொடர்புடைய ஜெயந்திரன் வெற்றிவேலு சிவாலய ஸ்தாபகராக இருந்தும் யாழ்.ஊடகங்கள் இன்றுவரை அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

சமூகத்தின் அதிகார மையங்களில் உள்ள தவறுகளைத் தட்டிக் கேட்க வக்கற்ற ஊடகங்கள் தம் அரசியல் மத சார்பு நிலைகளுக்கு ஏற்ப செய்திகளில் வக்கிரத்தைக் கொட்டுவதே அட்டூழியத்தின் உச்ச கட்டம்.

சமானிய மக்களின் மேல் தம் ஊடகப் பலத்தைக் காட்டும் இவற்றின் செயல்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை.

பேரினவாதத்தை வளர்த்தெடுக்க  இராணுவம் பொலிஸ் துணை போகின்றது, ஊடக சுதந்திரம் இராணுவம் பொலிஸால் பாதிக்கப்படுகின்றது.

பொலிஸார் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று கூவித் திரிந்த உதயன் இன்று தன்னிடம் செய்தி தொடர்பில் கேட்டு வந்த சாமானிய தமிழ் மக்களுக்கு பொலிஸை வைத்து பூச்சாண்டி காட்டி அனுப்பியுள்ளது என்றால் இவர்களின் தமிழ்த் தேசியப்பற்றும் தமிழ் மக்கள் மீதான அக்கறையும் எத்தகையது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்று எழுக தமிழ் என்ற கோசத்துடன் தமிழ் மக்கள் திரண்டு சென்ற போது தன்னுடைய சுயலாப அரசியலுக்காக புரட்டாதிச் சனிக்கு எள்ளெண்ணெய் எரித்த செய்தி போட்டது தான் உதயனின் ஊடக தர்மம்.

உதயனுக்குச் சென்ற மக்கள் போதகரால் தூண்டுதலில் வந்தார்கள் எனின் அது அவர்களுடைய அறியாமை. ஆனால் இந்தியாவின் ஆர்.ஆர்.எஸ்ஸின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று அற்ப சலுகைகளுக்காக இனத்தைக் கூறுபோடும் இந்த ஊடகங்களின் அட்டூழியங்களை அறியாமை என்று கடந்து செல்ல முடியுமா? உதயனின் தலையங்கங்கள் அப்பத்திரிகை ஆர்எஸ்எஸ் இன் ஏஜென்டாக விலைபோய்விட்டதையே காட்டுகின்றது. தமிழ் தேசியத்தைக் கூறு போடவும் பலவீனப்படுத்தவும் கேரளா கஞ்சாவோடு மதவாதம் என்ற அபினையும் இந்திய ஒன்றிய அரசு வடக்கு கிழக்கினுள் நுழைய அனுமதிக்கின்றது.

தமிழ் மக்கள் விழிப்படைந்து இந்த இந்திய பினாமிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டாலொழிய தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *